சென்னை, டிச.2 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறீ சைலேச தயாபாத்திரமும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும், மணவாள மாமுனிகள் வாழி திருநாமம் பாடவும் தென்கலைப் பிரிவினருக்கே முழு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தென்கலைப் பிரிவினர் மட்டும் வாழி திருநாமம் மற்றும் நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் பாட அனுமதியளித்து கோயிலை நிர்வகிக்கும் அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வடகலைப் பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், “முதல் மூன்று வரிசைகளில் தென்கலைப் பிரிவினரும், அவர்களுக்குப் பின்னால் வடகலைப் பிரிவினர் மற்றும் சாதாரண பக்தர்களும் அமர வேண்டும். தென்கலைப் பிரிவினர் முதலில் சிறீ சைலேச தயாபாத்திரமும், அதன்பிறகு வடகலைப் பிரிவினர் சிறீ ராமானுஜ தயாபாத்திரமும் 10 முதல் 12 வினாடிகள் பாட வேண்டும்.
இதைத் தொடர்ந்து தென்கலை, வடகலை மற்றும் பிற பக்தர்கள் இணைந்து நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஒன்றாக பாட வேண்டும். இதன் பின்னர், நிறைவாக தென்கலைப் பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழித்திருநாமமும், வடகலைப் பிரிவினர் தேசிகன் வாழித்திருநாமமும் பாட வேண்டும்” என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தென்கலை பிரிவைச் சேர்ந்தவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த டிவிஷன்பெஞ்ச், கடந்த 1910, 1915, 1963 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், வரதராஜ பெருமாள் முன்பாக சிறீ சைலேச தயாபாத்திரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும், மணவாள மாமுனிகள் வாழி திருநாமம் பாடவும் காஞ்சீபுரத்தில் வசிக்கும் தென்கலை பிரிவினருக்கே முழு உரிமை உள்ளது.
வடகலைப் பிரிவினருக்கு இந்த உரிமை நிலைநாட்டப்படவில்லை. எனவே, இருதரப்பும் சேர்ந்து ஒன்றாக பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம்” என்று தீர்ப்பளித்தது.
