இன்று (2.12.2025) எனது 93ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். மன நிறைவுடன், மகிழ்ச்சியுடன் எனது வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது!
வயது தொண்ணூற்று மூன்று என்று நாட்காட்டி அறிவித்தாலும், நண்பர்களும், நல விரும்பிகளும் இடையறாது பாராட்டுவது, வாழ்த்துவது என்ற சாக்கில் என் வயதை எனக்கு, சதா நினைவூட்டிக் கொண்டே உள்ளார்கள்!
எனது உடல் உறுப்புகளும்கூட அவர்கள் செய்யும் அதே நினைவூட்டுதலை நாளும் செய்து என்னை ஒருபுறம் ‘நச்சரிக்கின்றன’ (எச்சரிக்கின்றன என்பதைவிட, அதுதான் சரியான சொல்லாக்கம்!).
இடையில் சோதனைகளும், சொல்லொண்ணா அவதூறுகளும், பாராட்டுவோரைவிட கடுமையாக தூற்றுபவர்களும் அதிகம் என்பதே நாம் சரியான – தேவையான – ‘தந்தை பெரியார்’ என்ற தத்துவப் பேராசானின் கொள்கை லட்சியப் பயணப் பாதையில் சரியாக நடந்து செல்லுகிறோம் என்பதற்கான அடையாளம்!
‘மனநிறைவு – மகிழ்ச்சியுடன் வாழ்வு’ என்பதற்கு என்ன காரணம்? உங்களுக்கு கேட்கத் தோன்றுகிறதல்லவா?
விடையைச் சொல்லுகிறேன் – கேளுங்கள்!
சரியான உத்தமமான தலைமையை, எனக்கு, எனது கல்வி ஆசான் ஆ.திராவிடமணி அவர்கள் காட்டி, கொள்கைகளை ஊட்டி வளர்த்ததும், அதை என்றும் எப்போதும் சிறிதும் விடாமல் பற்றிக் கொண்டே ஒழுகுவதும்தான் முதற்காரணம்!
பதவி, அரசியல், படாடோபம், புகழ் வேட்டை, பொருள் வேட்டைகளைக் கடந்த, ‘துறவி’க்கும் மேலானதாக நம் நிலையை நாம் நடத்திட – அது என்னைப் பாதுகாத்து வழி நடத்துகிறது!
எனது கொள்கை எதிரிகளான ஆரியர்கள் சிலர் ஒருமுறை எனது ஒழுக்கம் பற்றிய ஓர் ஆய்வுக் கருத்தரங்கத்தையே சென்னையில் நடத்தி அலசினார்களாம் – (அக்கூட்டத்தில் நடுவே இருந்த ஒருவர் ; அவரைத் தங்கள் மனிதர் என்று கருதிய காரணத்தால் கண்டு கொள்ளவில்லை – அவர்களது உரை அதனால் என்னிடம் வந்து சேரும் வாய்ப்பு கிடைத்தது!)
‘‘என்ன அந்த Fellowக்கு எந்த Weakness–ம் இல்லையாமே, அது உண்மையா?’’ பேச்சரங்கத்தில் கசிந்த ஒன்றாம்!
மற்றவர் பதில்:
‘‘அப்படித்தான் தெரிகிறது’’ – மற்றவர் பதிலும் தயக்கமாகவே!
இதற்கு நானா காரணம்? எனது ஒப்பற்ற தலைமையும், அவரது தகத்தகாய சுயமரியாதைக் கொள்கை, லட்சியப் பாதுகாப்பும்தானே!
ஓர் இராணுவ வீரன் – களத்தில் நிற்கும் போது அவனுக்கு மற்ற சிந்தனைகள் – தவறு இழைக்க – சபலப் புத்திக்கு இடமோ நேரமோ உண்டா? அதே நிலைதான்!
கற்றுக் கொள்ள வேண்டியதை கற்றுக் கொண்டேன்.
அது சிலருக்கு வியப்பு!
அது எனக்குக் கடமை! பாடத்தில் ‘பாஸ்’ ஆனேன்.
‘புற எதிரிகளை’ வெல்வதைவிட, ‘அக எதிரிகளை’ வென்றால் அதுதானே சாதனை!
தன்னை வென்ற தலைவன், தரணியை தனதாக்கி வென்று விட்ட நிலையால், பெரியார் என்ற அவர்தம் ‘‘உறுப்புகளாகி’’ விட்ட நமக்கும் அதன் பலாபலன் கிட்டும்தானே!
நம்மை என்றும் சுமக்கும் வலிமைமிக்க தோள் – அந்த அறிவுப் பேராசானின் வலிமை மிகுந்த தோள் – இல்லையா?
‘‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.’’ (குறள் – 350)
மானிடப் பற்று, அறிவுப்பற்று, வளர்ச்சிப்பற்று தவிர, வேறு எந்தப் பற்றும் இல்லாத தலைவரைப் பற்றினேன் – பற்றினேன்… ‘‘தன்னை’’ப் பின்னுக்குத் தள்ளி தலைமையின் கொள்கையைப் பற்றினேன்; ‘கொள்கைச் செயலிகள்’ முன் வைத்த எனது தொடர் பயணம் களம் நோக்கிச் செல்ல உதவிடும் – ஊக்கம் தரும் அனைத்து உறவுகளுக்கும் எனது தலைதாழ்ந்த நன்றி!
‘முனகல்’ அற்ற முழு மகிழ்ச்சி! வாழ்க்கைக் கடமைகளைத் தொடர்ந்து செய்து வெற்றி – தோல்வி, இகழ்ச்சி – புகழ்ச்சி எல்லாம் ஓரு நிறையே என்று, உணர்ச்சிக்கு அடிமையாகாத பக்குவப்பட்ட வாழ்வுப் பரவசத்துடன் தொடருகிறேன்.
தனி வாழ்க்கை கரைந்த பொது வாழ்க்கை என்றும் இனிதே!
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ – இல்லையா?
நன்றி! எனது சக பயணத் தோழர்களுக்கு நன்றி!!
