தமிழ்நாட்டில் எத்தனையோ ஆளுநர் வந்திருக்கிறார்கள். ஆனாலும் ஆர்.என். ரவியைப் போன்ற – அந்தப் பதவிக்குச் சற்றும் பொருத்தமற்ற ஒருவரைக் கண்டதில்லை.
வாய்க்கு வந்தவாறு வார்த்தைகளை வாரிக் கொட்டுகிறார்.
ஆண்டுத் தொடக்கத்தில் சட்டப் பேரவைக் கூடும்போது, ஆட்சியினர் எழுதிக் கொடுத்த உரையை சட்டப்படி அப்படியே படிக்கக் கடமைப்பட்ட ஆளுநர்.
சில வரிகளைத் தவிர்த்தும், அறிக்கையில் இல்லாததைத் தனது விருப்பத்திற்குச் சேர்த்துப் பேசுவதும், சட்டமன்றத்தை விட்டு வெளி நடப்பு செய்வதும் – இவை எல்லாம் படித்த ஒருவருக்கு ‘நாகரிகமற்ற செயல்’ என்பதுகூடத் தெரியாதா?
உச்சநீதிமன்றம் ஓர் ஆளுநரை இவ்வளவு மோசமாக இதுவரை இந்த அளவுக்கு விமர்சித்ததில்லை என்கிற அளவுக்குச் சென்ற பிறகும், திருந்தவில்லை என்றால் இத்தகையவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?
ஆளுநருக்கென்றுள்ள வேலையைத் தவிர்த்து, கடமையைக் கடாசித் தள்ளிவிட்டு, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்கிற அளவுக்கு ஆட்டம் போடுவதெல்லாம் சரியானதுதானா?
மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட திருவள்ளுவர் படத்தினை மறுதலித்து, காவி உடையில் சித்தரிப்பது அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மையைக் காலில் போட்டு மிதித்து, ஸநாதனம் பேசுவது – அரசின் அதிகாரப் பூர்வமான ஆளுநர் மாளிகை சமூக வலை தளத்தில் ‘திராவிட மாடல்’ செத்துப் போன மாடல் என்று (4.5.2023) பதிவு செய்வது – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், ஊறுகாய் ஜாடியில் போட்டு வைப்பது, அது செத்து விட்டது என்று கூறுவது –
அதுபற்றி விளக்கம் கேட்டால் ‘‘நான் ஒப்புதல் தரவில்லை என்றால், மசோதாக்களுக்கு அனுமதியில்லை என்று அர்த்தம்’’ என்று ஆணவத்தின் உச்சிக் கிளையில் தொங்கிக் கொண்டு பேசுவது – பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் பல்கலைக் கழகங்களில் படித்து வெற்றி பெற்ற மாணவர்களை பல ஆண்டுகளாகத் தவிக்க விடுவது– சட்டப்படி ஒப்புக் கொள்ளப்பட்ட ‘தமிழ்நாடு’ என்ற பெயரைப் பயன்படுத்தாமல் ‘தமிழகம்’ என்பது! இப்படியே – ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடித்தனமான சட்ட விரோத நடவடிக்கைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
‘கடைசியில், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்தது’ என்ற கதைபோல, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று, அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதுபோல நாக்கை சுழலவிடுக்கிறார் என்றால் ‘போனால் போகிறது!’ என்று விட்டுக் கொண்டு வறிதே இருக்க முடியுமா?
கமலாலயத்தில் உட்கார்ந்து கொண்டு உதார் விட வேண்டியவர்களையெல்லாம் ஆளுநர் மாளிகையில் அமர வைப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாட்டில் தங்கள் அரசியல் எடுபடவில்லை; தலை வைத்துப் படுக்க முடியவில்லை என்ற நிலை உறுதியாக திட்டவட்டமாகத் தெரிந்து விட்ட நிலையில் ‘ஆளுநர்’ என்ற பதவியில் தனக்கான ஒருவரை வைத்து நாள்தோறும் ‘வம்படி’ வழக்கினை செய்யும் ஒரு வேலையை ஒன்றிய பிஜேபி அரசு செய்து கொண்டு இருக்கிறது.
‘திராவிட மாடல்’ அரசின் தலைவர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
‘‘ஆளுநர் ஆர்.என். ரவியே, ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறு!’’ என்ற குரல் தமிழ் மண்ணில் வெடித்துக் கிளம்பிவிட்டது.
அதன் ஓர் அடையாளமாகத்தான் தமிழ்நாடு முழுவதும் வரும் 4ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, ஒத்த கருத்துள்ள கட்சியினரையும் இணைத்துக் கொண்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தை மண்ணும், விண்ணும் கொப்பளிக்க நடத்திடத் திட்டமிடுவீர் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்ப் பண்பாட்டைக் கேலிப் பேசுவது, திருவள்ளுவரை அவமதிப்பது, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களைக் கிடப்பில் போடுவது, பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்களை நடத்த விடாமல், மாணவர்களின் வயிற்றிலடிப்பது, துணை வேந்தர்கள் நியமனத்திற்கு முட்டுக்கட்டைப் போடுவது என்று தமிழ்நாட்டுக்கு எதிராக ‘பஞ்சக் கச்சம் கட்டாத குறையாகப் பேசுவதும், செயல்படுவதும் இனியும் பொறுக்க முடியாத ஒரு நிலையை நம்மீது திணிக்கிறது.
நாகரிகமாகவும், கண்ணியமாகவும் தமிழ்நாடு அரசு நடந்து கொள்வதைக் கோழைத்தனம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி எடை போடுகிறார் என்றே தெரிகிறது.
இத்தகையவர்களுக்கெல்லாம் செல்வி ஜெயலலிதா போன்றவர்கள்தான் சரிப்பட்டு வருவார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது! (திண்டிவனம் பகுதியில் அன்றைய ஆளுநர் சென்னாரெட்டி….)
ஆனாலும் அமைதியான முறையில், அறவழியில் நமது எதிர்ப்புணர்வை வரும் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் காட்டுவோம்! ஒத்த கருத்துள்ளோரை ஒன்றிணைத்து செயல்படுவீர்! செயல்படுவீர்!! தமிழர் தலைவரின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் போராட்ட உணர்வோடு தொடங்கட்டும்! தொடங்கட்டும்!!
