இரண்யாட்சதன் யார்? நரகாசுரன் யார்? பூமிக்கும், பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா?

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கவிஞர் கலி. பூங்குன்றனின்  கேள்விகளும், புராணங்களை எள்ளி நகையாடிய பிஞ்சுகளும்!

அரசியல்

வல்லம். மே.6, பழகு முகாமின் மூன்றாம் நாளில், பிஞ்சுகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மூட நம்பிக்கை ஒழிப்புப் பற்றி கவிஞர் வகுப்பெடுத்தார்.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து வழங்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பழகுமுகாம் மே 2 முதல் மே 6 வரை பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் மூன்றாம் நாளான 4-5-2023 அன்று காலை தஞ்சை அரண்மனைக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். பிற்பகலில் கவிஞர் மூட நம்பிக்கை ஒழிப்பு, பொம்மலாட்டக் கலைஞர் கலை வாணனின் கதை சொல்லல், தொலைநோக்கி அறிவியலர் பரமேஸ்வரன் அண்டம் பற்றிய அறிமுகம் ஆகிய வகுப்புகள் நடைபெற்றன.

அதிகாலை நேர வகுப்பு!

அதிகாலை 5:50க்கே பிஞ்சுகளின் நடைஓட்டப் பயிற்சி அணிவரிசை சொர்ணா ரங்கநாதன் விடுதிக்கு முன்பாகப் புறப்படத்தயாராகிவிட்டது. பழகுமுகாமின் விளையாட்டுப் பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் வழிகாட்டுதலில் உற்சாக உருவங்களாக இருந்த பிஞ்சுகள் புறப்பட்டனர். ஒவ்வொரு நாளும் ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு புலவர் இமயவரம்பன் தோட்டச் சாலை வழியே, மேனாள் குடியரசுத்தலைவர் கியானி ஜெயில்சிங் பெயரைத்தாங்கி நிற்கும் ஆலமர சதுக்கத்தைக் கடந்து, உள்விளையாட்டரங்கத்தைத் தாண்டி, மெக்கானிக்கல் துறை வழியே சென்று விமான பயிற்சிக் கூடத்தைத் தாண்டி, ஆர்க்கிடெக் கட்டடத்தைத் தொட்டு, மழைநீர் சேகரிப்பு கிணற்றைத் தாண்டி, கோரா குடில் வழியே மறுபடியும் உள்விளையாட்டரங்கம் முன்பாக பிஞ்சுகளின் அணிவரிசை நிலைகொண்டது. அங்கிருந்து சுழற்சி முறையில் கராத்தே, சிலம்பம், நடனம் ஆகிய பகுதிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பிரித்து கராத்தே பயிற்சி அதே இடத்திலும், சிலம்பம் பயிற்சி கால்பந்து திடலிலும், நடனப்பயிற்சி முத்தமிழ் அரங்கம் மேடையிலும் நடைபெற்றது. இப்பயிற்சிகளை முறையே எட்வின், அய்யப்பன், கோவிந்தராஜன் ஆகியோர் பயிற்றுநர்களாக இருந்து கற்பித்தனர். நடை ஓட்டப்பயிற்சி சரியான அரை மணி நேரமும், பின்னர் தற்காப்புக் கலைகள், நடனம் அரை மணி நேரமும் நடைபெற்று பிஞ்சுகள் தங்கள் அறைகளுக்கு அணிவரிசையாகவே அழைத்துச்செல்லப்பட்டனர்.

சீருடையுடன் குழு ஒளிப்படம்!

காலை உணவுக்குப்பிறகு, முதல் வகுப்பே தஞ்சாவூர் அரண்மணைக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடக்கவிருப்பதை அவர்களுக்குள்ளாகவே கமுக்கமாகவும், வெளிப்படையாகவும் பேசிக்கொண்டனர். அதற்கு முன்னதாக பிஞ்சுகள் பழகு முகாம் சீருடை அணிந்து, அனைவரும் அறிவு மய்யம் கட்டடத்தின் முகப்பில், துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் தஞ்சை இரா, ஜெயக்குமார், பல்கலைக் கழகத் துணைவேந்தர் வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் பர்வீன், பாண்டியன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடிவேல், டாக்டர் ரமேஷ், பேராசிரியர்கள்  சித்ரா, அனுசுயா, சுமதி, பி.ஆர்.ஓ. இளங்கோ மற்றும் பி.எட்.பயிற்சி ஆசிரியர்கள் பிரவீணா, முகில், பவதாரிணி, லட்சுமி சுருதி, வினிசா ஆகியோருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து வரிசையாக பேருந்தில் ஏற்றப்பட்டனர். வண்டி பல்கலைக் கழகத்தின் வெளி வாசலைத் தாண்டும்போது பிஞ்சுகளிடம் உற்சாகம் பீறிட்டது. 

பிஞ்சுகளுடன் தஞ்சை 

அரண்மனைக்குச் சுற்றுலா!

அரசியல்

முதலில் அரண்மணையில் இருந்த அருங்காட்சியகம் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் பொது ஆண்டு 1777 முதல் 1832 வரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்திய அரிய ஓவியங்கள், மராத்திய மன்னர்களின் ஓவியங்கள், மிகச்சிறிய காகித ஓலைச்சுவடிகள், சுவடி கட்டும் பழங்கால துணி வகைகள், பொது ஆண்டு 1795இல் டேனியல் சகோதரர் களால் வரையப்பட்ட பழைமையான நகரங்களின் ஓவி யங்கள் – அதில் சென்னை பிளாக் டவுனும் உண்டு, ஏராளமான ஓலைச்சுவடிகள் போன்றவை காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. பிஞ்சுகள் கேள்விகளை பொழிந்து கொண்டிருந்தனர். அடுத்து தஞ்சாவூர் பற்றிய ஆவணப்படத் திரையிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து தஞ்சை கலைக்களஞ்சியம் பகுதிக்கு சென்று 9, 10 11, 12 ஆம் நூற்றாண்டின் சிறந்த சிற்பங்களை கண்டு வியந்தனர். அந்த சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்த கொலுமண்டபமும் பார்ப்போரை மலைக்க வைப்பவை! இறுதியில் 1955 பிப்ரவரி 26 இல் தரங்கம்பாடி கடற்கரையில் தானாக ஒதுங்கிய 92 அடி நீள திமிங்கிலத்தின் எலும்புக்கூட்டை கண்டு, Discovery, National Geography  தொலைக்காட்சிகளில் தாங்கள் கண்ட காட்சிகளை இதனோடு தொடர்புபடுத்தி பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டனர். 

அருங்காட்சியகத்தில் 

பெரியார் பிஞ்சுகள்!

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கூடுதலாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்திற்கு பிஞ்சுகள் அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கும் கட்டடமே மலைக்கவைக்கக் கூடியதாக இருந்தது. அங்குள்ள பொருட்கள் யாவுமே புவிசார் குறியீடு பெற்றவைகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1799 – 2013 வரையிலான பொருள்கள் அங்கு சேகரிப்பில் இருந்தன. பின்னர் குடகு முதல் பூம்புகார் வரையிலுமான காவிரி ஆற்றின் பாதைகள், கிளை நதிகள் ஆகியவை பற்றிய மாதிரிக் காட்சி, கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. தஞ்சாவூருக்கே சிறப்பு சேர்க்கும் தலையாட்டி பொம்மைகள் வெவ்வேறு அளவுகளில் பார்வைக்கு வைக் கப்பட்டிருந்தன. அந்த அருங்காட்சியகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளான கடந்த ஏப்ரல் 14, சிறுவர்களுக்கான பேட்டரி யில் ஓடும் ரயில் ஏற்பட்டு செய்யப்படிருந்தது. அதில் அனைத்து பிஞ்சுகளும் சவாரி செய்து மகிழ்விக்கப்பட்டனர். சுற்றுலா முடிந்து பிஞ்சுகள் பல்கலைக் கழக வளாகத்திற்கு திரும்பினர்.

தீபாவளியைக் கொண்டாடலாமா?

மதிய உணவுக்குப்பிறகு அய்ன்ஸ்டீன் அரங்கில், கவிஞர் கேள்வித்திறனை வளர்க்கும் வகையில் வகுப்பெடுத்தார். ’உங்களைப் போன்ற சின்ன வயதிலேயே பெரியார் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அதனாலதான் பெரியாரை பகுத்தறிவு பகலவன் என்று சொல்கிறோம். அதனால் எதையும் நீங்க ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டுப் பழக வேண்டும்’ என்று தொடங்கிவிட்டு, வழமை போல புதிர் கணக்குகளையும், விடுகதைகளையும் சொல்லி அவர்களை தன்வசப்படுத்தினார். அவர்களையும் மேடைக்கு வர வழைத்து விடுகதைகளைச் சொல்ல அனுமதித்தார். பின்னர் பண்டிகைகள் குறித்து பேசத்தொடங்கினார். ’இங்கே தீபாவளி கொண்டாடுகிறவர்கள் எத்தனை பேர்?’ என்று கேட்டார். சிலர் கைதூக்கினர். ‘தீபாவளியை கொண்டாடக்கூடாதுன்னு ஏன் பெரியார் சொன்னாரு?’ ’புராணங்களில் ராட்சதர்கள் என்று யாரைக்குறிப்பிடுகிறார்கள்? ஆரியர் யார்? திராவிடர் யார்? தீபாவளியின் கதை என்ன? இரண்யாட்சதன் யார்? நரகாசுரன் யார்? பூமிக்கும், பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா? அவன் என்ன செய்தான்? பூமியை பாயாகச் சுருட்ட முடியுமா? பூமியில்தானே கடல் உள்ளது? அதைப் போய் கடலில் மறைத்துவைக்க இயலுமா? போன்றவற்றை கேள்விகளாகவே கேட்டார். பிஞ்சுகள் அவர்களாகவே சிரித்தபடி அதிலுள்ள முட்டாள்தனத்தை கேள்விக்குட் படுத்தினர். மகிழ்ச்சியடைந்த கவிஞரும் ‘இதைத்தான் பெரியார் கேட்டார்!’ என்று சொல்லி பிஞ்சுகளின் அறிவுக் கூர்மை சொல்லாமல் மெச்சியதோடு, ‘உங்களில் சிலரே இப்படிப்பட்ட தீபாவளியை கொண்டாடுகிறீர்களே, செய்ய லாமா?’ என்றும் பிஞ்சுகளை சிந்திக்க வைத்தார். 

பெருவெடிப்பு முதல் பிரபஞ்சம் வரை

மாலை சிறிது நேர விளையாட்டுக்குப் பின் பிஞ்சுகளுக்கு சிற்றுண்டி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, விசைப்பலகை, வீணை இரண்டையும் பயன்படுத்தி பல்கலைக் கழகத்தில் பயிலும் தினேஷ், இலக்கியா அருமையான இன்னிசையை பிஞ்சுகளுக்கு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர். பெரியார் பிஞ்சு இனியன் தமிழ் தனது விருப்பமாகவும் முன்னர் விசைப்பலகை தனக்கு வாசிக்கத் தெரியும் என்று குறிப்பிட்டிருந்ததால், அவருக்கு மேடையில் விசைப்பலகை வாசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர், தான் கற்றுக்கொண்ட இசைக்கோர்வைகளை அதில் இசைத்து பிஞ்சுகளையும், பெரியவர்களையும் அசத்தினார். தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த டெலஸ்கோப் அறிவியலர் பரமேஸ்வரன் பெருவெடிப்பிலிருந்து பிரபஞ்சம் வரையிலுமாக படக்காட்சி மூலம் கேள்வி பதிலாகவே விளக்கினார். பிஞ்சுகள் மிகவும் ஆர்வத்துடன் அந்த வகுப்பில் பங்கெடுத்துக் கொண்டனர். இறுதியாக பெரியார் பிஞ்சு ஆரா, ’ஏஞ்சாமி ஏஞ்சாமி’ எனும் பிரபலமான பாடலைப் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்னர் இரவு உணவுக்குப்பிறகு அனைவரும் அவரவர் அறைகளுக்குச் சென்றனர். மூன்றாம் நாளிலேயே தொடங்கி எத்தனை நாள் ஆயிற்று? இன்னும் எத்தனை நாள் இருக்கின்றது? என்ற கணக்குகளையெல்லாம் போட்டவாறு, அடடே தொடங்கிய உடனேயே முடிந்துவிட்டது போல இருக்கிறதே என்று கவலைப்பட்டபடியே உறங்கச்சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *