
– பாவலர் சுப.முருகானந்தம்
மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
தமிழ்நாடு.
பள்ளிசெல்லும் வயதினிலே
பகுத்தறிவை அடைகாத்து
பழுத்தமரம் ஆனபின்னும்
பாரெல்லாம் அதைவிதைத்து
துள்ளிவரும் இவர்கண்டு
பூமிநிலா சுற்றிடுமே!
தொண்டறத்தார் வாழ்வதனை
தொல்லுலகம் கற்றிடுமே!!
அள்ளிவரும் ஆதாரம்
ஆரியத்தின் சேதாரம்!
அய்யாசொல் ஒன்றேதான்
அவர்வாழ்வின் அடிநாதம்!!
தள்ளிவைத்துத் தனிவாழ்வைத்
தந்தாரே ஊருக்கு!
தாய்மனத்தால் நமையழைத்துச்
செல்வாரே போருக்கு!!
அன்னைதந்தை இல்லாதே
அரற்றிநின்ற தமிழ்நாட்டில்
அய்யாவின் அடிச்சுவட்டில்
அனுதினமும் நடைபோட்டே
எண்ணிறந்த பணிசெய்தார்
இவர்போல யாருண்டு?
எதுவசந்தம் எனக்கேட்டால்
‘மிசா’வென்னும் பதிலுண்டு!!
புண்ணாக்குக் கீதைக்கும்
மறுபக்கம் இவர்தந்தார்!
போருக்கே ஆயுதமாய்
கலைஞருமே அதைக்கொண்டார்!!
மன்பதைக்காய் அவரளித்த
வாழ்வியலோ பலவுண்டு!
மாசற்றார் அவர்மொழி… தேன்
வழிகின்ற கற்கண்டு!!
அய்யிரண்டில் மேடைகண்ட
பூங்காற்று!
பெரியார்கை அகலாமல்
பிடித்துயர்ந்த புதுநாற்று!!
புராணங்கள் பொய்புரட்டைச்
சிதைக்கவந்த இடிமுழக்கம்!
பொதுவுரிமைப் புரட்சிசெயப்
புறப்பட்ட போர்மேகம்!!
கேட்போரின் மெய்சிலிர்க்க
உரைபொழியும் கருவானம்!
சொல்வதெல்லாம் மேதினியில்
வரலாற்றை உருவாக்கும்!!
பெரியார்சொல் உய்யவைக்கும்
உலகத்தை என்றுரைத்து
நாள்தோறும் விழிக்கின்ற
செங்கதிரோன் வீரமணி
வாழியவே!!
