எளியதை செய்ய எவராலும் முடியும்
எதிர்கொள்ள பலரும் அஞ்சும் பணியைச் செய்ய
என்னால் முடியும் என்று துணிவு கொள்க!
– தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தந்தை பெரியாரோடு பழகிய ஆசிரியர், பத்து வயதில் பொது வாழ்விற்கு வந்து இன்று 93ஆம் வயதிலும் உலக தமிழர்களுக்காக தொண்டாற்றி வரும் – முதுமையிலும் சாதனை படைக்கும் ஆசிரியர் அவர்களிடம் 1989 முதல் 1995 வரையிலான கால கட்டங்களில் செய்யாறு பெரியார் பெருந்தொண்டர் தாடி பா.அருணாசலம் அவர்களால் பெரியார் திடலில் பணி செய்யும் வாய்ப்பு எனக்கும், விடுதலை தலைமைச் செய்தியாளர் வே.சிறீதர் அவர்களுக்கும் கிடைத்தது.
ஆசிரியரின் பழகு விதம் வியப்பளிக்கும்
பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார புத்தக விற்பனை பிரிவிலும், பிறகு ஆசிரியரோடு உதவியாளராக பணியாற்றும் மிகப் பெரிய வாய்ப்பும் கிடைக்கப் பெற்றேன். தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், டில்லி உள்பட இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் ‘போட்டோ’ பா.சிவகுமார், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகியோருடன் ஆசிரியரோடு பயணித்திருக்கிறோம். இந்திய அளவில் பெரும் ஆளுமையோடு இருந்த மேனாள் பிரதமர் வி.பி.சிங், கான்ஷிராம், மாயாவதி, தவத்திரு குன்றக்குடி அடிகளார், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோர் உள்பட பல தலைவர்களோடும், இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடனும் ஆசிரியர் பழகிய விதம் நேரடியாக கண்டு வியந்து போயிருக்கின்றேன்.
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மிக மிக எளிமையான தலைவர், அப்பழுக்கற்ற தலைவர், மிகவும் நாணயமான தலைவர், எல்லா தலைவர்களும் மதிக்கக்கூடிய தலைவர், பரிசுத்தமான தலைவர், அவரின் எளிமையை, சிக்கனத்தை, நல்லொழுக்கத்தை திராவிடர் கழகப் பொறுப்பாளர்களோடும், கழகத் தோழர்களிடம் பழகும் விதத்தை அறிந்து மகிழ்ந்து போய் இருக்கின்றேன். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நான் செய்த சில தவறுகளால் பல முறை திட்டும் வாங்கியிருக்கின்றேன். அவரின் கோபம்தான், அவரின் திட்டும் தான் வடமணப்பாக்கம் கிராமத்தில் கரடு முரடாக இருந்த நான் நல்ல மனிதனாக, அப்பழுக்கு அற்றவனாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ‘குட்டுப் பட்டால் மோதிரக் கையால் குட்டுப் படு’ என்ற பழமொழி போல அவரின் கண்டிப்பு என்னை முழு மனிதனாக மாற்றியது.
நான் பெரியார் திடலில் பணிபுரிந்த காலத்தில் ஆசிரியருக்கு உதவியாக, அவரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுகின்ற முதுபெரும் அறிஞர்கள், பகுத்தறிவாளர்களான அய்யா ஆளவந்தார், கழகப் பொருளாளராக இருந்த கோ.சாமிதுரை, மூதறிஞர் குழு தலைவராக இருந்த ஞான.அய்யாசாமி, பெரியார் பேருரையாளர் புலவர் ந.இராமநாதன், பேராசிரியர் இறையனார், பேராசிரியர் கு.வெ.கி.ஆசான், ஜஸ்டிஸ் பி.வேணுகோபால், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் பண்டரிநாதன், கல்வியாளர் சிவராசன் இன்னும் பல பெரிய ஆளுமைகளோடு பழகுகிற, பேசுகிற, செயல்படுகிற வாய்ப்பு பெற்றேன். ஆசிரியருக்கு பெரும் துணையாக இருந்தவர்கள் இன்று சுயமரியாதைச் சுடரொளிகளாகி விட்டார்கள்.
கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் உழைப்பை, உறுதியை, பலன் கருதாத அத்தூய தொண்டினை ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து நானும் நண்பர் வே.சிறீதர் அவர்களும் வியந்து போய் இருக்கின்றோம். ஆசிரியருக்கு பக்க பலமாக இப்பொழுதும் இருப்பது எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. விடுதலை மேலாளர் சீதாராமன், அண்ணன் அன்புராஜ் உழைப்பும் அளவிடற்கரியது.
சாதனைப் படைத்தார் தமிழர் தலைவர்
1994ஆம் ஆண்டு 69% சதவீத இடஒதுக்கீடு பாதுகாப்புச் சட்டம் 76ஆவது திருத்தம் கொண்டு வந்து 31சி-யின் கீழ் ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்புடன் சமூக நீதி இடஒதுக்கீடு சட்டத்தினை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசை, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அம்மையார் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை ஏற்கச் செய்தது – தமிழர் தலைவரின் மிகப் பெரிய சாதனை, சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல்கல். அக்காலகட்டத்தில் எங்களைப் போன்றவர்களிடம் ஆசிரியர் இட்ட கட்டளை மிக அதிகம். 31சி சட்டம் சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினர்களிடமும், அமைச்சர் பெருமக்களிடமும் ஆசிரியர் தரும் கடிதங்களையும், ‘விடுதலை’ நாளிதழ்களையும் ஒவ்வொருவரிடமும் வழங்கியதும், ஆசிரியரின் கடுமையான உழைப்பையும், அதற்காக அவர் பட்ட துயரங்களையும், இறுதியாக 31சி சட்டம் நிறைவேற்றப்பட்ட செய்தியையும், ஆசிரியர் அடைந்த அளவில்லா மகிழ்ச்சியையும் நேரடியாக கண்டுணர்ந்த வாய்ப்பு எனக்கு கிட்டியது வாழ்வில் மிகப் பெரிய அதிசயம்.
ஆசிரியர் அவர்களுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் கண் அறுவைச் சிகிச்சை நடந்த பொழுது, ஆசிரியரின் துணைவியார் மோகனா அம்மையாரோடு உடன் இருக்கும் வாய்ப்பையும், அறுவை சிகிச்சை முடிந்து சென்னை அடையாறு இல்லத்தில் சில நாட்கள் சென்று ஆசிரியரின் கண்கள் மூடியிருந்த நிலையில் தினசரி காலையில் வரும் தமிழ், ஆங்கிலம் செய்தித்தாள்களில் வரும் தலைப்புச் செய்தி களையும், முக்கிய செய்திகள் முழுவதையும் படித்து காட்டும் வாய்ப்பையும் பெற்றது வாழ்வின் மிகப் பெரிய பயன்.
ஆசிரியரின் அயராப் பணிகள்
– சொல்லி மாளாது
‘விடுதலை’ அலுவலகத்தில் பணிபுரிந்த பொழுதும், ஆசிரியர் சுற்றுப்பயணங்களில் உதவியாளராக பணிபுரிந்த பொழுதும், தினமும் விடுதலை நாளிதழுக்கு ஆசிரியர் அறிக்கையை வீட்டிலிருந்து எழுதி கொண்டு காரில் அலுவலகம் வரும் பொழுதே அச்சுப் பிரிவுக்கு கொடுத்து விடுவார்கள். பெரியார் அருங்காட்சியகத்தில் கடிதங்களை படிப்பது, பதில் எழுதுவது, திருமண நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்து கடிதம் எழுதுவது, அலுவலக நிர்வாக பணிகளை செய்வது, பார்வையாளர்களைச் சந்திப்பது, முக்கிய தலைவர்களிடம் பேசுவது, விடுதலை நாளிதழின் எட்டு பக்கங்களையும் அச்சாவதற்கு முன்பே சரி பார்ப்பது, நாட்டில் நடைபெறும் செய்திகளைப் பார்த்து, தமிழ்நாட்டில் எந்தத் தலைவரும் அறிக்கை வெளியிடும் முன்பாகவே ஆசிரியர் அறிக்கை வெளியிடுவது, பார்வையாளர்கள் மற்றும் அணிந்துரை வழங்கக் கோரும் புத்தகங்களை உடனுக்குடன் வாசிப்பது, முக்கிய வாழ்வியல் செய்திகளை ‘வாழ்வியல் சிந்தனைகள்’ மூலமாக ‘விடுதலை’யில் எழுதுவது, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிப்பது, நேரில் நலம் விசாரிப்பது, சாதனையாளர்களை பாராட்டுவது, இரங்கல் செய்தியை எழுதுவது, தம்மை பார்க்க வருபவர்களை இந்த வயதிலும் எழுந்து நின்று, கை குலுக்கி வரவேற்பது, ரயில் பயணங்களில் படிப்பது, எழுதுவது, காரில் நீண்ட தூரம் செல்லுகிற போது பழைய பாடல்களை கேட்பது, கழகத் தோழர்களின் இல்லங்களில் அன்பின் மிகுதியால் உபசரிக்கும்போது, கூடுதலான சைவ, அசைவ உணவுப் பண்டங்களை வீணாக்காமல் எங்களைப் போன்றவர்களுக்கு தருவது, இப்படி ஏராளமன செய்திகளை ஆசிரியரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆசிரியர் அவர்கள் நூறாண்டையும் கடந்து வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறோம்.
