எளிமையே இவருக்கு அணிகலன்!

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

– எஸ்.நாராயணன்,
மூத்த பத்திரிகையாளர்

“காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன்

அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்”

என்ற வள்ளுவர் குறளுக்கு உயிரோவியமாகத் திகழ்ந்து, தமிழ்நாட்டை உலக அரங்கில் ஒளிரச் செய்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

எளிமையை அணிகலனாகப் பூண்டு நல்லதை நினைத்து, நல்லதை செய்து, நல்லவராக வாழ்ந்து, நாளும் பெரியார் மாணவராகக் காட்சி தரும்  பெருந்தகை.

93 வயதில் அடியெடுத்து வைத்து முதுமையை தன் காலடியில் மிதித்து எழுச்சி நடைபோடும் ஒரே தலைவர்!

வாதத் திறமை

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இயக்கத் தலைவர் மட்டுமல்ல; பத்திரிகை ஆசிரியர், பத்திரிகைப் பதிப்பாளர், பல்கலைக்கழக வேந்தர், வழக்குரைஞர், சிறந்த எழுத்தாளர், நூலாசிரியர், மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். இருப்பினும் ‘ஆசிரியர்’ என்ற அடையாளத்தை எப்போதும் ஏற்பவர்.

‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்பதற்கேற்ப மாற்றுக் கருத்து உடையோரிடமும் அன்பு பாராட்டுவார். அறம் சார்ந்த பெருந்தன்மையால், வாதத் திறமையினால் அவர்களைத் தன் பக்கம் இழுத்திடும் இனிய பண்பாளர்.

இன உணர்வும், மொழி மான உணர்வும் இவரது குருதியில் நிறைந்தவை. தமிழினப் பாதுகாப்போடு தமிழ்நாடு எழுச்சிப் பெற வேண்டும் என்ற தன்மான உணர்ச்சியோடு, “கெடல் எங்கே தமிழர் நலன் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க” என்ற புரட்சிக்கவிஞரின் பாடல் வரியை வாழ்வு நெறியாகக் கொண்டு, சமூக நீதிக்கு ஊறு விளைகின்ற போதெல்லாம் பேச்சு, எழுத்து, அனைத்திலும் எழுச்சி வேகத்தை விளைவிக்கச் செய்து, போர்முரசம் கொட்டி தமிழ் மக்களை அணிதிரட்டி களம் கண்டு வெற்றி வாகை சூடும் தளகர்த்தர்.

தமிழ்நாட்டில் புதிய மறுமலர்ச்சிக்கும், சமூக மாற்றத்துக்கும் வித்துகளை விதைத்து மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு விடை கொடுத்துப் பகுத்தறிவு, அறிவியல் அறம் சார்ந்த ஆண், பெண் பேதமற்ற சமத்துவ கொள்கைக் கோட்பாடுகளைத் தந்தை பெரியார், திராவிடர் கழகத்தை அமைத்து செயலாக்கம் கண்டார்.

தந்தை பெரியாரின் எண்ணம், சொல், செயலை அமல்படுத்த அவர் விதைத்த விதை முளையிட்டு வளர்ந்து பரவி, பூத்துக் குலுங்கி, காய்த்து, கனிந்து மற்றவர்களுக்கு சுவை வழங்குகின்ற அந்தத் தன்மையை ஓயாது, ஒழியாது செயலாக்கிடும் உன்னதப் பணியினை ஆசிரியர் அவர்கள் செய்து வருவது கண்கூடு.

“தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே” என்ற உயரிய இலட்சியத்துடன் தந்தை பெரியாரை உலக மயமாக்க உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியில் தமிழர் மனங்களை ஈர்த்தார்.

‘பசி நோக்கார், கண் துஞ்சார், கருமமே கண்ணாயினார்’ என்ற முதுமொழிக்கேற்ப சமுதாய நலனுக்காக தன்னலம் துறந்து, கொண்ட கொள்கையில் சமரசமின்றி, எது வரினும் எடுத்த செயலில் முனைப்பு காட்டி, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்தும்’ விடா முயற்சியால் தமிழ் சமுதாயத்தை உயர்த்தினார்.

கண்ணதாசன் பாராட்டு!

உடல் உபாதைக்கு மருத்துவ சிகிச்சைப் பெற்ற நேரத்திலும் ‘பயணத்தைக் குறைத்து ஓய்வெடுக்க வேண்டும்’ என்ற மருத்துவர்களின் அறிவுரையைப் புறந்தள்ளி, பயணத்தைத் தொடர்ந்து கழகத் தோழர்களின் இன்முகத்தைக் காண்பதே எனக்கு ‘மாமருந்து’ எனக் கூறும் ஆசிரியரைப் போல ஒரு மாபெரும் தலைவரை காண்பதரிது.

40 ஆண்டுகளுக்கு முன்பு (1984) சேலத்தில் முன்னணி நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றிய காலத்தில் மறைந்த பெரியவர் மாரியப்பன் (டாக்டர் மரகதம் மாரியப்பன்) அவர்கள் மூலம் ஆசிரியர் அவர்களிடம் அறிமுகம் ஆகும் நல்வாய்ப்பு கிட்டியது. தொடர்ந்து புதுச்சேரி, கோவை, திருச்சி, வேலூர், தஞ்சாவூர், சென்னை ஆகிய நகரங்களில் செய்தி ஆசிரியர் பணியைத் தொடர்ந்த போதிலும் ஆசிரியர் அவர்களுடன் இடைவிடாது தொடர்பு கொண்டு இருந்தேன். தஞ்சாவூரில் பணியாற்றிய காலத்தில் பலமுறை அவர்களிடம் ‘நேர்காணல்’ காணும் நல்வாய்ப்பு அமைந்தது.

உலகச் செய்திகளை விரல் நுனியில் வைத்து இருக்கும் அவர்களின் பேராற்றலைக் கண்டு நான் பலமுறை பிரமித்ததுண்டு. அவர்கள் அறிவுரை எனக்கு நல்வழிகாட்டியது.

பொங்கல் திருநாளின்போது கழகத் தோழர்களுக்கு அவரே தன் கைப்பட வாழ்த்துக் கவிதை எழுதி அனுப்பி வைத்து இருக்கிறார். ஆசிரியரின் சிந்தனையில் விளைந்த ‘மருத்துவப் பயனாளிகள்’ என்ற கருத்துருவை அரசே அங்கீகரித்து அரசாணை வெளியிட்டது ஆசிரியரின் சொல்லாடலுக்குக் கிடைத்த வெற்றி!

கவியரசர் கண்ணதாசனே ஆசிரியரின் கவிப் புலமையைப் பாராட்டி இருக்கிறார். ஒருமுறை கவிஞர் எழுதிய ஒரு பாடலில் காணப்பட்ட கருத்துப் பிழையை ஆசிரியர் சுட்டிக்காட்ட அதை கண்ணதாசன் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டு திருத்தி இருக்கிறார். இது ஆசிரியரின் கவிப் புலமைக்கு கிடைத்த நற்சான்று.

அபார நினைவாற்றல்

தொலைப்பேசியில் யார் தொடர்பு கொண்டாலும் ஆசிரியரே எடுத்து பேசுவார்கள். தொடர்பு கிடைக்காத சூழலில், தன்னை அழைத்தவர்களின் எண்ணைப் பார்த்து அவர்களே தொடர்பு கொள்வார்கள். இதைப் போல் என்னிடம் பலமுறை பேசி இருக்கிறார்கள்.

ஆசிரியரின் பெரிய பலம் அவரது நினைவாற்றல். ஒருவர் ஒரு விஷயத்தைக் கூறினால் கம்ப்யூட்டர் போல் அவர் மனதில் பதிந்துவிடும். மறுமுறை சந்திக்கும்போது அதுபற்றி பேசி வியப்பில் ஆழ்த்தி விடுவார்.

ஒருமுறை தொலைபேசியில் ஆசிரியர் அவர்களை தொடர்புகொண்டு கட்டுரை கேட்டேன். எப்போது வேண்டும் என்று கேட்க, 2 நாளில் தரவேண்டும் என்றேன். பார்க்கலாம் என்று கூறினார். கட்டுரை பிரசுரமாவதற்கு முன்தினம் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் சென்றுவிட்டார். ஆசிரியரிடம் கூறிவிட்டால் எப்படியும் வந்துவிடும் என்ற நம்பிக்கை.

காலையில் ஆசிரியரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது, வழக்கத்திற்கு மாறாக உதவியாளர் பேசினார். ஆசிரியர் அவர்கள் காலையில் வந்ததில் இருந்தே ‘என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று தோழர்களிடம் கூறிவிட்டு அறையில் அமர்ந்து முக்கியமாக எழுதிக்கொண்டு இருக்கிறார். அவரிடம் தாங்கள் பேசியதாக தெரிவிக்கிறேன் என்றார். இக்கட்டான சூழ்நிலையில் செய்வதறியாது திகைத்துக் கொண்டு இருந்தபோது ஆசிரியரிடம் இருந்து தொலைப்பேசி வந்தது. “உங்கள் கட்டுரையை எழுதி அனுப்பி விட்டேன்” என்று கூறி மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

ஆசிரியர் நினைத்து இருந்தால் உதவியாளரிடம் குறிப்புகளைக் கொடுத்து எழுதச் சொல்லி இருக்கலாம்.  ஆனால், எந்த ஒரு செயலையும் அவரே முன்னின்று செய்வது ஆசிரியரின் கண்டிப்பான வழக்கம். அவர்தான் ஆசிரியர்.

புதுக்கவிதைகளின் பூ ராகம்!

தமிழ்மொழி, தமிழினம், தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையில் அவர் படைத்து வரும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ கட்டுரைகள் புகழ்பெற்றவை. இதுவரை 18க்கும் மேற்பட்ட தொகுதிகள் வெளிவந்துள்ளன. அந்தக் கட்டுரைகள் அனைத்தும் எளிய நடையில் புதுக்கவிதைகளின் பூ ராகமாகத் திகழ்கின்றன.

இந்தக் கட்டுரைகளை ஆசிரியர் அவர்கள் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் புறப்படும்போது எழுதத் தொடங்கி அலுவலகத்துக்கு வரும்போது எழுதி முடித்து விடுவார் என்பது வியப்புக்குரிய செய்தி.

ஆசிரியர் அவர்களின் கருணை ததும்பும் விழிகள் காமிரா சக்தி கொண்டவை. ஆயிரக்கணக்கான தோழர்கள் கூடும் கூட்டத்திலும் மேடையில் அமர்ந்தபடியே யார் வருகிறார், எங்கு அமர்கிறார் என்பதைத் துல்லியமாகப் படம் பிடித்து காட்டிவிடும். எந்த ஊருக்குச் சென்றாலும் ஞாபகத்துடன் கழகத் தோழர்கள் பெயரைச் சொல்லி அழைப்பது, அந்த ஊரில் பல்லாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வுகள் அதில் பணியாற்றிய தோழர்களின் பெயர்களையும் கூறி பிரமிக்கச் செய்து விடுவார்.

வரலாறாய் வாழ்ந்து வழிகாட்டி வரும் தமிழர் தலைவர் அவர்கள் இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்த பெருமைக்குரிய முதுபெரும் தலைவர் ஆவார். ஆட்சிப் பீடத்தில் உள்ளவர்களுக்கு அரிய சட்ட ஆலோசனைகளை வழங்கி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனி மனிதரல்லர்; ஓர் இயக்கம். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம். அவருடன் பேசினோம், உறவாடினோம் என்பது நமக்குக் கிடைத்த பெரும்பேறு! வருங்கால தலைமுறைகளுக்கு அவர்தம் இருப்பு அவசியம் தேவை. இது புகழ்ச்சி அல்ல; உண்மையின் வெளிப்பாடு!

எம் மொழி காக்க, எம் இனம் செழிக்க, இன்னுமொரு நூறாண்டிரும்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *