சென்னை, நவ. 30–- பீகாரைச் சேர்ந்த 28 வயதுத் தொழிலாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகக் கையைப் பொருத்திய ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை மருத்துவர்களை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
பீகார் தொழிலாளி
பீகாரைச் சேர்ந்த அந்த 28 வயதுத் தொழிலாளி, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது இடது கை தோள்பட்டையிலிருந்து முழங்கை வரை மிக மோசமாகச் சிதைந்துபோனது. அதேபோல், வலது கை மணிக்கட்டுப் பகுதி வரை சிதைந்திருந்தது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு கைகளும் சிதைந்திருந்த நிலையில், அவருக்கு இடது கையில் மணிக்கட்டிலிருந்து கீழே உள்ள பகுதியை வலது கையோடு இணைத்து, கரங்களை மாற்றிப் பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்தச் சிக்கலான, சவால் மிகுந்த அறுவை சிகிச்சையை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பி. ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். சிகிச்சையில் இரத்தக் குழாய் மறுசீரமைப்பு முடிந்தவுடனேயே இணைக்கப்பட்ட கை புத்துயிர் பெற்றது.
இந்த சவால் மிகுந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்களைச் சென்னை முகாம் அலுவலகத்துக்கு அழைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் (28.11.2025) பாராட்டினார். இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தாராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “சென்னையில் பணியாற்றி வந்த பீகார் தொழிலாளி எதிர்பாராதவிதமாக ரயில் விபத்தில் சிக்கிக் கைகளை இழந்த நிலையில், அவருக்கு, ராஜீவ்காந்தி மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து, அவரது இடது கையின் ஒரு பகுதியை வலது முழங்கையுடன் இணைத்து சாதனை படைத்துள்ளனர்.
மிக அரிதான கரங்களை மாற்றிப் பொருத்தும் அறுவை சிகிச்சை நமது நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அறுவை சிகிச்சையைத் திறமையாகச் செய்த மருத்துவர்களுக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்தார்.
