டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்
சென்னை, நவ. 30– பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் விரைவில் நிறைவுபெறும் என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலையம்
சென்னை விமான நிலைய அபிவிருத்தி குறித்த ஆய்வுக் கூட்டம் மீனம்பாக்கத்தில் உள்ள அதன் வளாகத்தில் 28.11.2025 அன்று நடைபெற்றது. இதற்குக் விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமை வகித்தார். இதில் சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர், சட்டமன்ற உறுப்பினர்கள்
எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து, சரக்குகள் கையாள்வது குறித்தும், அதன் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அதன்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு நிறைய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் இல்லாத வசதியாக, இங்கு மாநகரப் பேருந்துகள் விமான நிலையம் உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வரவுள்ளது. அதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு வேகமாகச் செய்து வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அந்த விமான நிலையம் வந்தால் சென்னையில் வாகன நெரிசல் தவிர்க்கப்படும். பரந்தூர் விமான நிலையம் அமைக்க 5,700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதில் 2,000 ஏக்கர் அரசுக்குச் சொந்தமானது. 3,700 ஏக்கர் தனியாருக்குச் சொந்தமானது. அதில் 1,300 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள நிலத்தை வாங்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தப்படும். அதன்பின் பணிகள் தொடங்கப்படும். பயணிகள் கோரிக்கையை ஏற்று பன்னாட்டு விமான நிலையத்தின் உட்பகுதியில், முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் பதிவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றார்.
