நாகப்பட்டினம், நவ. 30– ‘டிட்வா’ புயல் காரணமாக டெல்டா மாவட் டங்களில் 28.11.2025 அன்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப் பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தமிழ் நாட்டிலேயே அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 31.20 செ.மீ. மழை பதிவானது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் நேற்று முன்தினம் (28.11.2025) இரவு தொடங்கி இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. மேலும், ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டிருந்த நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
நாகை மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரிலும், மயிலாடுதுறையில் 30 ஆயிரம் ஏக்கரிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடிப் பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக நாகை, வேளாங்கண்ணி, தரங்கம் பாடி, பூம்புகார், பழையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது. முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காக மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சீர்காழி, தரங்கம்பாடி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். மேலும், அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், ஆட்சியர்கள் பாது காப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பிற்பகல் நிலவரப்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் 31.20 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இதேபோல, தோப்புத்துறையில் 20 செ.மீ., திருப்பூண்டியில் 20 செ.மீ., வேளாங் கண்ணி, வேதாரண்யத்தில் தலா 18 செ.மீ, நாகையில் 17 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. சென்னை, எண்ணூர், கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை: ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வகைப் பயிர்கள் குறித்து கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
