மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் பாராட்டு
கந்தர்வக்கோட்டை நவ. 30– தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து பள்ளிக்கல்வித்துறையில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தி கல்வி வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கரோனா களத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்புகளைச் சரி செய்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக 2021 -2022 முதல் 2024-2025 வரை ரூ 660.35 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1.65 லட்சம் தன்னார்வலர்களும், 95.97 லட்சம் மாணவர்களும் பயனடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் இல்லம் தேடி கல்வித் திட்டம் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 7.97 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
வாசிப்பு இயக்கத்தின் மூலம் அன்றாட வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வாசிப்பு இயக்கம் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்றுநர்கள் மூலம் நலம் நாடி செயலி மூலம் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப் பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாதிரி பள்ளி வீதம் 38 மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களிடமும், ஆசிரியர் களிடமும் கற்றல் நிலைகளை விரிவு படுத்த 28 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளிடம் மறைந்திருக்கும் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் பட்டமும், மாணவிக்கு கலையரசி பட்டமும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் 8,209 அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு கணினி அறிவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைப்பு, ஆசிரியர்களுக்கு கையடக்கணினிகள், மாணவர்கள் நலனுக்காக 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் ,ஆறு உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும், அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.
97 வட்டார கல்வி அலுவலர்கள் நியமனம், 3,043 முதுகலை ஆசிரியர்கள் நியமனம், 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம், 2,768 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், புத்தகக் கண்காட்சிகள், இலக்கிய திருவிழாக்கள், இளைஞர் இலக்கிய திருவிழா, சிறந்த கற்போர் மய்யங்களுக்கு விருதுகள், புதிய எழுத்தறிவு திட்டம், சிறைவாசிகளுக்கான சிறந்த எழுத்தறிவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித்துறையில் சிறப்பாக செயல்படுத்தி தமிழ்நாடு கல்வியில் முன்னணி மாநிலமாக ‘திராவிட மாடல்’ ஆட்சியில் திகழ்வதற்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
