மீனாம்பாள் சிவராஜ் நினைவு நாள் இன்று (30.11.1992)
தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் இணைந்து, முக்கியப் பங்காற்றியவர் மீனாம்பாள் சிவராஜ். இந்தியாவின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதி மற்றும் 32 முக்கிய அமைப்புகளில் தலைமைப்பெறுப்பில் இருந்தார். இதில் சென்னை மாநகர துணைமேயர் பதவியும், மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைமைப்பதவியும் ஆகும், சமூக சீர்திருத்தவாதி மீனாம்பாள் – தந்தை பெரியார் உடனான நட்பு, அதன் மூலம் சமூகப்பணிகளில் காட்டிய ஈடுபாடு இந்திய வரலாற்றில் பல மாற்றங்கள் உருவாக முக்கிய காரணியாக இருந்தன.
மீனாம்பாள், அவரது வாழ்விணையர் என். சிவராஜ் மூலம் தந்தை பெரியாருக்கு அறிமுகமானார். என். சிவராஜ் அவர்கள் நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளான சமூகச் சமத்துவம், பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண் விடுதலை ஆகியவற்றால் மீனாம்பாள் ஈர்க்கப்பட்டார்.
இவர் தீவிரமாகச் சுயமரியாதை இயக்கத்தில் செயல்படத் தொடங்கினார். பெரியாரின் கூட்டங்களில் உரையாற்றுவதுடன், பெண்கள் மத்தியில் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பும் முக்கியப் பொறுப்பை ஏற்றார்.
மீனாம்பாள் அவர்கள் பெண்ணுரிமைக்காகப் போராடியபோது, பெரியார் அவருக்குத் தன் இதழான ‘குடியரசு’ மற்றும் பொது மேடைகள் மூலம் மிகுந்த ஆதரவு அளித்தார். 1938-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இம்மாநாட்டில் தான் ‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்டது.
இந்த மாநாடுகளும், அவரது பொதுப் பேச்சுகளும் திராவிட இயக்கத்தின் பெண்ணியச் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றன.
பகுத்தறிவுக் கொள்கைகள்
பெண்களுக்குச் சொத்துரிமை, திருமணத்தில் சமத்துவம் மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை மீனாம்பாள் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றார்.
மீனாம்பாள், தந்தை பெரியாரின் இயக்கத்தில் முக்கியமான முகங்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் சுயமரியாதை இயக்கத்தோடு அவர் கொண்ட ஈடுபாடு, பிற்காலத்தில் இந்தியச் சமூகச் சீர்திருத்த இயக்கங்களில் உள்ள பல்வேறு சிந்தனைகள் மற்றும் அரசியல் பாதை களைக் கடந்து, ஜாதி, மதம், பாலினம் ஆகிய தடைகளை உடைக்க ஒரு முக்கியமான காரணியாக திகழ்ந்தார்.
சுயமரியாதை வீராங்கனை மீனாம்பாள் சிவராஜ் மறைந்த நாள் இன்று (30.11.1992).
திராவிடர் தொழிலாளர் கழகக் கொடி உருவாக்கமான நாள் இன்று 30.11.1980

திராவிடர் தொழிலாளர் கழகக் கொடி உருவாக்கமான நாள் இன்று 30.11.1980
தமிழ்நாட்டில் தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி மற்றும் திராவிடக் கொள்கைகளை முன்னிறுத்தி திராவிடர் கழக இயக்கத்தின் தொடர்ச்சியாக, 1980களில் தொழிலாளர் பிரச்சினைகளை மய்யமாகக் கொண்டு திராவிடர் தொழிலாளர் கழகம் உருவானது.,
திராவிட தொழிலாளர் கழகத்தின் கொடி சூரிய உதயத்தைப் போன்று, திராவிடர்களின் விடுதலைக்கான உழைப்பைக் குறிக்கிறது.
இந்தக் கொடி திராவிடர் கழகத்தின் கொடியினைப் பின்பற்றி உருவாக்கப்பட்டது, ஆனால் தொழிலாளர் கழகத்தின் சூழலுக்கு ஏற்ப தனித்துவமாக மாற்றப்பட்டது. 1980இல், தொழிலாளர் இயக்கங்கள் வலுப்பெற்றக் காலத்தில், திராவிடர் தொழிலாளர் கழகம் தனது அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில் இக்கொடியை உருவாக்கியது. இது தொழிலாளர் உரிமைகள், ஜாதி ஒழிப்பு மற்றும் பெண் உரிமைகளை வலியுறுத்தும் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டது. தொழிலாளர் வேலைநிறுத்தங்கள், ஹிந்தி எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் சமூகப் போராட்டங்களில் செயல்பாட்டாளர்கள் இக்கொடியினை ஏந்தி பங்குகொண்டனர்.
