சட்டத்தைக் காட்டி அச்சுறுத்தி எங்களைப் பணிய வைக்கலாம் என எண்ணி விடாதே!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

l தந்தை பெரியார்

பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! மற்றும் கழகப் பெரியோர்களே! தலைவர்களே! தோழர்களே!

இங்குக் கூட்டப்பட்டிருக்கும் மாநாடு காலையிலே இருந்து சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

குறிப்பாக நமது வரவேற்புக் குழுத் தலைவர் (கி.வீரமணி) காலையில் மிகச் சிறப்பான உரையை நிகழ்த்தினார். அதற்கு மேல் ஒன்றும் நான் சொல்வதற்கு என்று ஒன்றும் இல்லை.

நாம் மனித இழிவை ஒழிக்க வேண்டும் என்ற இலட்சியத்திற்காகக் கூடி இருக்கிறோம். வேறு எந்தப் பலனையும் எதிர்பார்த்து நாம் கூட்டம் கூடவில்லை. நூற்றுக்கு 97 பேராக உள்ள மக்களை சட்டத்தில் ஈனஜாதி என்று எழுதி வைப்பது என்ன நியாயம்?

‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி’

நான் சொல்கிறேன், சட்டத்தில் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறோம் என்றால் இதைவிட கேவலம் ஒன்றும் இல்லை. ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி’ என்றெல்லாம் சொல்லி வந்திருக்கிறோமே யல்லாமல் காரியத்தில் ஒன்றும் நடைபெறவில்லை.

சட்டத்திலேயே இழிவு பொறிக்கப்பட்டு இருக்கிறதே, அதை மாற்று என்கிறோம். யோக்கியமான அரசாங்கம் என்றால் என்ன செய்ய வேண்டும். ‘சரி இதுவரை நாங்கள் அதைக் கவனிக்கவில்லை மாற்றி விடுகிறோம்’ என்று ஏற்பாடு செய்வது தானே நியாயம். அதை விட்டுவிட்டு நியாயம் கேட்கிற என்னைப் பார்த்து, ‘நாட்டுப் பிரிவினை கேட்கிறான் – ஏழு வருடம் ஜெயிலில் போடு’ என்றால் இது என்ன நியாயம்?

‘‘இந்தியாவுக்கே நாம் வழிகாட்டியாக இருக்கப் போகிறோம். நமக்கு வேண்டியதெல்லாம் தைரியம் தான். தைரியம் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். வசதி உள்ளவர்கள் மூட்டை கட்டிக் கொண்டு வந்து விடுங்கள். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் நமக்குக் கிட்டாது.

நம்முடைய கிளர்ச்சி பதவி பிடிக்க அல்ல – மந்திரியாகவல்ல. நம் மான உணர்ச்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே!’’

– தந்தை பெரியார்

எந்த நாட்டுக்காரன் இந்தக் கொடுமையைப் பொறுத்துக் கொள்வான்? நாம் தானே இந்த இழிவைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறோம். இதில் என்ன வேதனை என்றால், நாம் என்ன கூறுகிறோம் என்பதைக் கூட இந்தியாவை ஆளுகின்ற கூட்டம் புரிந்து கொண்ட தாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லையே.

 பிரிவினை என்பது நியாய விரோதமா?

பிரிவினை கேட்கிறேன் என்கிறாய். சரி ஒப்புக் கொள்கிறேன் பிரிவினை கேட்டால் என்ன தப்பு?

பிரிவினை கேட்டால் குற்றம் என்று சட்டத்தில் எழுதி மனிதனை மனிதன் இழிவுப்படுத்தும் சட்டத்தை எழுதி வைத்து இருக்கலாமே தவிர, நியாய விரோதம் என்று கூற முடியுமா மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் சட்டத்தை எழுதி வைத்து இருக்கிறாய். மாற்று என்றால் அபவாதம் பேசுகிறாயே.

இந்தியா ஒரு நாடு என்கிறாயே, நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்கிறாய். எங்களிடம் உண்மையில் நேசமாக நடந்து கொள்கிறாயா?

நான் தான் கேட்கிறேன். உனக்கும் எனக்கும் என்ன உறவு? நீ யாரு நான் யாரு? எப்படி நமக்குள் சம்பந்தம்? எதில் ஒற்றுமை இருக்கிறது உனக்கும் எனக்கும்? நீ பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்கிறாய். என்னைக் காலில் பிறந்தவன் என்கிறாய். இந்த இலட்சணத்தில் நான் உன்னோடு இணைந்தே இருக்க வேண்டும். என்று பலவந்தப்படுத்துகிறாய். கிரமமாக சொல்கிறேன். இந்தக் காரியம் இல்லாவிட்டால் உண்மையில் இந்த நாட்டை விட்டு நாம் பிரிந்தாக வேண்டியவர்கள் தானே!

நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? உலகத்தில் எந்த நாட்டிலாவது அந்த நாட்டு மக்கள் மைனாரிட்டி மக்களுக்குத் தேவடியாள் மக்களாக இருக்கிறார்களா?

சட்டத்தை மாற்ற முடியாதா?

இங்குதானே அந்தக் கொடுமை இருக்கிறது. இதை நாம் பொறுத்துக் கொண்டு தான் தீர வேண்டுமா?

சட்டம் இன்று நமது இழிவை நிலை நிறுத்துகிறது. இதை மாற்ற முடியாதா? சின்னக் காரியம் தானே. இதை மாற்றவில்லை என்றால் உன்னை மாற்றித்தான் தீர வேண்டும். இதை வைத்துக் கொண்டே உன்னை ஒழித்துக்கட்ட வேண்டியது தான். சட்டத்தைக் காட்டி அச்சுறுத்தி எங்களைப் பணிய வைக்கலாம் என்று மட்டும் எண்ணி விடாதே -பயந்தவர்கள் நாங்கள் என்றால், இந்தக் காரியங்களில் எல்லாம் ஈடுபடு வோமா? எங்களை மிரட்டித்தான் பாரேன் என்று நாங் களும் சரி, ஒரு கை பார்ப்போம் என்று கீழே இறங்கி வந்து விடுவோம்.

இந்து என்று சொல்லிக் கொள்கிறோமே, அதற்கு அடிப்படை உண்டா?

‘இந்து’ என்றால்  திருடன்

இந்து என்றால் கருப்பன், திருடன் என்ற அர்த்தமும் உண்டு. உலகிலேயே இதைப் போன்ற குழப்பமான காட்டுமிராண்டி மதம் வேறு எங்கும் கிடையாது. இதிலிருந்து நாம் விடுபட்டால் தான் நம் மானம் மிஞ்சும்.

சுயமரியாதை சங்கம் நம் நாட்டில் தோன்றுகிற வரை நம் நாட்டில் இந்து ஸநாதன சங்கம் என்ற பெயரில் அமைப்புகள் இருந்து வந்தன. ஸநாதன சங்கம் என்றால் வருணாசிரம் தருமத்தைக் காப்பாற்றுவதுதான். சுயமரியாதை இயக்கம் தோன்றியதற்குப் பிறகு தான் அவை எல்லாம் மறைந்தன.

‘சுதந்திரத்தால்’ அரசியல் லாபம்

இந்த நாட்டிற்கு சுதந்திரம் மட்டும் வராமல் இருந்திருந்தால் அவை எல்லாம் அடியோடு அழிந்து போயிருக்கும். சுதந்திரம் வந்து அரசியல் புகுந்து விட்டதால் அவனவனுக்கு அரசியல் இலாபம் அனுபவிப்பதிலேயே காலம் சரியாக இருந்தது.

நாங்கள் அரசியல் – ஓட்டு என்று போகாத காரணத்தினால் தான் துணிச்சலாக எதையும் சொல்கிறோம் செய்கிறோம். மற்ற நாட்டுக்காரன் குறிப்பாக ரஷ்யாவை எடுத்துக் கொண்டால், கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டிய கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி முன்னேறினான்.

எப்போது உண்டானவை?

நம் நாட்டில் என்னடா என்றால் தடுக்கி விழுந்தால் கோயில்கள் இவை எல்லாம் இருந்து நமக்கு என்ன பிரயோசனம்? நம்மை எல்லாம் சூத்திரனாக்கியது தானே!

கோயில்களும், மதமும் எப்போதோ உண்டானவை- அவற்றில் ஏதோ பேதம் இருக்கிறது – வைத்துக் கொள்வோம். இப்போது உண்டாக்கிய சட்டத்திலேயே பேதத்தைப் புகுத்தி விட்டாயே -இதைச் சொன்னால் உனக்குக் கோபம் வருகிறதே -செய்கிற அக்கிரமங்கள் எல்லாம் நீ – அதை எடுத்துச் சொன்னால் சட்டம், ஜெயில் என்று பயமுறுத்தினால் என்ன அர்த்தம்?

யாருக்காக நாங்கள் பாடுபடுகிறோம்?

நாங்கள் பாடுபடுவது எல்லாம் எங்கள் நன்மைக்காக அல்ல – மனித சமுதாய நன்மைக்காக. ஆனால், ஆஸ்திகம் பேசுகிற நீ செய்யக் கூடியது எல்லாம் உனது சுயநலத்திற்காகவும், மனித சமுதாயக் கேட்டிற்கும் தானே!

நான் கடைசியாகக் கேட்டுக் கொள்வ தெல்லாம் அரசாங்கத்திற்கும், மதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இருக்கக் கூடாது. மதம் என்றால் அது மக்களின் தனிப்பட்ட விவகாரம். அதை அரசாங்கம் இழுத்துப் போட்டுக் கொள்ளக் கூடாது.

நாம் நிபந்தனை வைத்து தான் எந்தக் கிளர்ச்சியையும்  துவங்குவோம். அரசாங்கம் நமது கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போட்டாலும் சரி நாம் நமது முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். நமது முயற்சி யாருக்கும் தனிப்பட்ட தொல்லையைக் கொடுப்பதாக இருக்காது. எந்தப் பொதுச் சொத்துக்கும் நாசம் இருக்காது.

ஆயிரக்கணக்கில் கிளர்ச்சியில் ஈடுபட இருக்கிறோம். பிடிக்கப் பிடிக்க தொண்டர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கஷ்ட, நஷ்டங்களுக்கு நாம் ஆளாகித்தான் தீர வேண்டும். தாய்மார்கள் குறிப்பாக, இந்தப் போராட்டங்களில் அதிகம் கலந்து கொள்ள வேண்டும்; ஏனெனில் பார்ப்பானுக்குத் தாசிமக்கள் என்று குறிப்பிடும்போது அவர்களைத் தான் அது அதிகம் பாதிக்கிறது.

இந்தியாவுக்கே நாம்தான் வழிகாட்டிகள்

நாம் கிளர்ச்சியைத் துவக்கினால் அது இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பரவும். ஏனெனில் சூத்திரன் இந்தியா பூராவும் இருக்கிறானே!

எனவே ‘‘இந்தியாவுக்கே நாம் வழிகாட்டியாக இருக்கப் போகிறோம். நமக்கு வேண்டியதெல்லாம் தைரியம் தான். தைரியம் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். வசதி உள்ளவர்கள் மூட்டை கட்டிக் கொண்டு வந்து விடுங்கள். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் நமக்குக் கிட்டாது.

நம்முடைய கிளர்ச்சி பதவி பிடிக்க அல்ல -மந்திரியாகவல்ல. நம் மான உணர்ச்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே!’’

ஆகவே, இதை யாரும் குற்றம் சொல் முடியாது. தமிழ்நாட்டில் பார்ப்பான் தவிர்த்து நாம் நான்கு கோடி பேர். இந்த நான்கு கோடி பேரும் சாத்திரப்படி, சட்டப்படி சூத்திர மக்கள். இந்த நான்கு கோடியில் பத்தாயிரம் பேர் துணிந்து சிறை சென்றால் போதும் ஆடிடுவான். இதன் முடிவு பிரிவில் கொண்டு போய்த் தான் முடியும்.

ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்
உரை குறித்து தந்தை பெரியார்

தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

சுமார் 1.30 மணி அளவில் ஆகிவிட்ட நிலையில், அடுத்து அய்யா அவர்கள் பேசத் துவங்கினார்கள். “இவ்வளவு அருமையான உரையை வீரமணி அவர்கள் நிகழ்த்திய பிறகு நான் பேசவேண்டாம்; பேசி அவர் உருவாக்கிய உணர்வைக் கலைத்துவிடக் கூடாதே என்று கருதி பேசாமலே முடித்து விடலாம் என்று கருதுகிறேன்; என்றாலும் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்களே நான் பேசாவிட்டால் என்பதால்தான் ஒருசில வார்த்தைகள் கூற முன்வந்துள்ளேன்” என்று கூறினார்கள்.

கடவுள் ஒழியாதவரை நமது இழிவு ஒழியாது

நீங்கள் ஒவ்வொருவரும் இந்தக் கிளர்ச்சியில் ‘நாம் செய்த பங்கு என்ன?’, ‘நாம் செய்த பங்கு என்ன?’ என்று எண்ணி, எண்ணி ஒவ்வொருவரும் பயன்பட வேண்டும்.

நாம் இந்த வடநாட்டான் கீழ் அடிமையாக இருப்பதை அவமானமாகக் கருத வேண்டும். அடுத்து நம்மைக் கீழ்மக்களாக்கும் இந்தக் கடவுள்களை ஒழித்துக் கட்ட வேண்டும்.

இந்தக் கடவுள்களின் கதைகள் எல்லாம் நம்மை அடிமைப்படுத்தும் கடவுள்களாகவும், நம்மைக் கீழ் ஜாதி என்று கூறும் கடவுள்களாகவும், நமக்கு அவமானத்தையும், செலவையும் ஏற்படுத்தும் கடவுள்களாகவும் தானே இருக்கின்றன.

இந்தக் கடவுள் சங்கதிகள் ஒழியாதவரை நமது இழிவும் இருந்து கொண்டுதான் இருக்கும். நமது எல்லை அதை ஒழித்துக் கட்டுவதில் தான் முடிய வேண்டும்.

இழிவு ஒழியாவிட்டால் பிரிவினைதான்!

நான் உலகம் சுற்றி இருக்கிறேன். அங்கெல்லாம் பக்தி இருக்கிறது. ஆனால், அங்கு பக்தியின் பேரால் ஒரு சிறு கூட்டம் மெஜாரிட்டி கூட்டத்தை இழிவுபடுத்தி வைக்கவில்லை. இங்குதான் அந்தப் பிறவிக் கொடுமை இருக்கிறது. ஏய்ப்புத் தன்மையில் தான் எதை எடுத்தாலும் இங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கொடுமை இன்று நேற்றல்ல, ஆயிரம், ஆயிரம் ஆண்டு காலமாக இருந்து வருகிறது. இதை மாற்ற வேண்டுமானால் ரோஷத்துடன் சிந்திக்க வேண்டும்.

நமது இழிவை ஒழிக்கும் காரியத்தில் பல கஷ்டங்களையும் நாம் கடந்து தான் தீரவேண்டும்.

ஆகவே, தோழர்களே! மீண்டும் மீண்டும். சொல்கிறேன், “நமது இழிவு ஒழியாவிட்டால் பிரிவினை தான்! நமது இழிவு ஒழியாவிட்டால் பிரிவினை தான்! பிரிவினை தான்!!” இதில் இன்னொரு முக்கிய விஷயம், நம் இழிவை ஒழித்துக் கொள்வதற்கு நாம் உண்மையாக இருக்கிறோமா இல்லையா? என்பதை எதிரிகள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு நமது இனத்தவர்கள் பெருவாரியாக இதில் ஈடுபட வேண்டும். குறிப்பாகப் பெண்கள் அதிகம் ஈடுபட வேண்டும்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

9.12.1973 அன்று தந்தை பெரியார் அவர்கள் மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை’ 10.12.1973)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *