இந்தியாவின் மருத்துவக் கல்வியில் ஏழை உயர் ஜாதியினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு குறைவான குடும்பங்களுக்கானதாம். (ஆக, ரூ.66,666 மாத ஊதியம் பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உயர்ஜாதி ஏழைகளாம்!)
போலி EWS சான்றிதழ் பெற்ற மருத்துவ மாணவர்கள் தனியார் கல்லூரிகளின் மெனேஜ்மென்ட் கோட்டா அல்லது என்.ஆர்.அய். கோட்டா இடங்களைப் பெற்று, ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி மற்றும் ரூ1.25 கோடி வரை உயர் கட்டணம் செலுத்தியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது இ.டபுள்யூ.எஸ். கோட்டாவின் தவறான பயன்பாட்டை அப்பட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்த விவகாரம் ‘நீட்’ கவுன்சிலிங் தேர்வுகளுக்குப் பிறகு வெளி வந்தது. உயர்ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவானவர்களுக்கு என்று நிர்ணயிப்பதில் பெரும்பாலும் பயன் அடைபவர்கள் பார்ப்பனர்களே!
‘நீட்’ தேர்வு முடிவுகளின்படி நவம்பர் 2025 இறுதியில் வெளியான முதல் சுற்று இடங்களின் ஒதுக்கீட்டில், ஏழைப் பார்ப்பனர்கள் என்ற பெயரில் 148 மாணவர்கள் இட ஒதுக்கிட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளின் மெனேஜ்மென்ட் மற்றும் என்.ஆர்.அய். கோட்டா இடங்களைப் பெற்றுள்ளனர்.
இந்தப் பிரிவிற்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையாகும். படிப்பை முடிக்கும் வரை ரூ.3 முதல் 5 கோடி வரை கட்டணமாகக் கொடுக்க வேண்டும்!
பெலகாவி (கருநாடகம்) ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் டெர்மட்டாலஜி என்.ஆர்.அய். படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் கட்டணம்.
மைசூரு ராஜராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரியில் ரேடியாலஜி என்.ஆர்.அய். இடத்திற்கு மொத்தம் ரூ.2.7 கோடி)
புதுச்சேரி சிறீ லட்சுமி நாராயண இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸில் ஆர்த்தோபீடிக்ஸ் மெனேஜ்மென்ட் இடத்திற்கு ரூ.1.6 கோடியாகும்.
‘நீட்’ தரவுகளின்படி இளங்கலை மருத்துவப் படிப்பிற்கு, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இ.டபுள்யூ.எஸ். கோட்டாவில் தனியார் சுயநிதி பல்கலைக்கழகங்களில் இடங்களைப் பெற்றுள்ளனர்.
ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை. 2024-ஆண்டு 378 மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டது
ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை பெறும் குடும்பங்கள் மட்டுமே இ.டபுள்யூ.எஸ் சான்றிதழ் பெறலாம். ஆனால், ரூ.1 கோடி செலுத்தும் திறன் உள்ளவர்கள் எப்படி இந்த சான்றிதழைப் பெறுகின்றனர்?
உயர்ஜாதி ஏழைகள் என்ற போர்வையில் (EWS) போலிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு, தர வரிசையில் இடங் கிடைக்காத நிலையில் தனியார்க் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் கட்ட எப்படி முடியும்?
இதைப்பற்றி நியாயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ஒன்றிய பிஜேபி அரசால் அவசர அவசரமாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் 2019 ஜனவரி 6ஆம் தேதியும், மாநிலங்களவையில் மறுநாளும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனவரி 12 அன்று ஒப்புதல் அளித்தார். அதாவது ஆறே நாட்களில் நிறைவேற்றப்பட்டது. இதுபோல் வேறு எந்த சட்டமாவது, இவ்வளவுக் குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டதுண்டா? உயர் ஜாதிகாரர்களுக்கானது என்றால் எவ்வளவு அவசரம்! அவசரம்!!
ஆர்.எஸ்.எஸின் தலைமை இடமான நாக்பூரில், இதற்கான சான்றிதழ்கள் இலகுவாகக் கிடைக்கின்றன. பொருளாதாரத்தில் வலிமையானவர்களே இதனை விலை கொடுத்து வாங்க முடியும் என்பதே உண்மை நிலை!
இடஒதுக்கீடு என்பதில் பொருளாதார அளவுகோல் என்பதே சட்டப்படி தவறானது. அதிலும் அதிக வருமானம் பெறுவதை (ஆண்டுக்கு 8 லட்சத்தை) குறைந்தபட்ச வரம்பாக காட்டுவது அசல் மோசடியாகும். பல முறை உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பொருளாதார அளவுகோலை ஈ.டபுள்யூ.எஸ். என்ற மோசடி முறையில் இச்சட்டத்தைக் கொண்டு வந்து உயர் ஜாதி ஏழைகள்(!) குறிப்பாகப் பார்ப்பனர்கள் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. அதிலும் சான்றிதழ்களை விலை கொடுத்து வாங்க முடிகிறது என்றால் இந்த அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது! ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் தேவை விழிப்புணர்வு!
