சென்னை, நவ.29- ஆடிட்டர் துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்; இந்த துறைகளில் இட ஒதுக்கீடு வேண்டும் எனவும், உயர் பதவிகளில் இட ஒதுக்கீடு முறை இல்லை; கூட்டுவது பெருக்குவது போன்ற 4ஆம் தர வேலைகளில் தான் இட ஒதுக்கீடு உள்ளது, அதையும் தற்போது தனியார்மயமாக்கப்படுகிறது என விசிக தலைவர் தொல்.திருமா வளவன் கூறியுள்ளார்.
இந்திய வணிகவியல் பட்ட தாரிகள் சங்கம் சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் “சமூகநீதிக் குரல்” விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் கோவி. செழியன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன்,” அக்கவுண்டன்ஸ், ஆடிட்டிங் துறைகளில் கல்வி தகுதி சான்று பல்கலைக்கழக விதிப்படி வழங்கப்படுகிறதா? ஏன் வழங்கக்கூடாது?
திருமாவளவன் பேச்சு
சிஏ படிப்பு ஏன் பல்கலைகழகங் களில் இருக்கக் கூடாது? ஏன் பல்கலைகழகங்களில் சிஏ துறையை சேர்த்து இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களை சேர்த்து ஏன் கல்வி, பயிற்சியை கொடுக்கக்கூடாது? ஏன் அவர்களின் திறனை வளர்க்கக் கூடாது? இதை இதற்கென்று இருக்கும் சில நிறுவனங்கள் மட்டுமே செய்கின்றன. விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு இதைப்பற்றிய ஒரு அறிமுகமே இல்லாமல். இதை புறம்தள்ளும் நிலை உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அல்லது உயர்ஜாதிய வகுப்பை சார்ந்தவர்கள் மட்டுமே பரம்பரைபரம்பரையாக இந்த கல்வியை கற்று ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது.
ஆடிட்டர் துறை
இந்தியாவில் இருந்தும் ஆடிட்டர் களில் எத்தனை சதவீதம் பேர் பட்டியலின மக்கள்? எத்தனை பேர் ஒபிசி? சொற்பமான எண்ணிக் கையில்தான் இருப்பார்கள். இவர்கள் எப்படியோ போராடி படித்து, முறைசாரா நிறுவனங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி பணிக்கு சேர்கிறார்கள். எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் 6 சதவீதத்திற்கு மேல் அந்தத் துறையில் இருக்க முடியாது. முதல் தலைமுறையாக தேர்ச்சி பெற்று வருபவன் அந்த 6 சதவீதத்திற்குள் வர வேண்டும். இது எவ்வளவு கடினமானது? இது எவ்வளவு பெரிய சமூக நீதி புறக்கணிப்பு? எனவே இந்தத் துறைகளில் இடஒதுக்கிடு வேண்டும் academic educationக்கு இது வர வேண்டும்.
ஜாதி ஆதிக்கம்
விளிம்பு நிலை மாணவர்களும் இந்த கல்வியை பெற்று அரசின் கொள்கை வகுப்பாளர்களாக மாற வேண்டும். ஒரு அரசு வரவு, செலவை அடிப்படையாக கொண்டுதான் இயங்குகிறது. பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இந்தத் துறைகளில் படிக்கும் மாணவர்களுக்குதான் இதைப்பற்றிய அறிவு இருக்கிறது. ஒருவன் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகி விடலாம். நிதி அமைச்சர் ஆகிவிடலாம் அதற்கு அவர் சிஏ படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பட்ஜெட்டை நிதி அமைச்சரால் தனித்து தயாரிக்க முடியாது. நான் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்கலாம். ஆனால், தனித்து சட்ட மசோதாவை தயாரிக்க முடியாது.
அதை நான் அறிமுகம்தான் செய்ய முடியும். அதில் ஞானம் இருந்தால்தான் தயாரிக்க முடியும். எவ்வளவு பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் அவரை வழி நடத்தும் திறன் ஒரு ஆடிட்டருக்குதான் உண்டு. ஒரு அரசை வழி நடத்தும் இடத்தில், ஒரு தேசத்தின் பொருளாதார கொள்கை வகுக்கும் இடத்தில். இந்த துறைகளில் இருப்பவர்தான் இருக்கிறார்கள். ஆடிட்டர் துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். வறுமையில் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இது தனி ஒருவருக்குரிய வணிக உரிமை என்ற அடிப்படையில் மட்டுமே இயங்கிக்கொண்டு இருக்கிறது” என்றார்.
