நகைச்சுவையில் புரட்சி செய்த ‘நாகரிகக் கோமாளி’ என்.எஸ்.கே. பிறந்த நாள் இன்று (29.11.1908)
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) அவர்கள் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்லர் – அவர் ஒரு பகுத்தறிவுச் சீர்திருத்தவாதி. பக்தி மற்றும் புராணத் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில், தனது நகைச்சுவை நடிப்பையும், வசனங் களையும், பாடல்களையும் சமூக சீர்திருத்தக் கருத்து களைப் பரப்புவதற்கான கருவியாகப் பயன்படுத்தினார்.
என்.எஸ்.கே.வின் கலையுலகத் தொண்டின் அடித்தளமாக விளங்கியது தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையும், சுயமரியாதை இயக்கத்தின் சித்தாந்தங்களுமே ஆகும். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளால் ஆழ்ந்து ஈர்க்கப்பட்ட கலைவாணர், அவற்றை மக்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் வகையில், நகைச்சுவைத் தேனில் குழைத்து வழங்கினார். அவர் நடித்த ஒவ்வொரு நகைச்சுவைக் காட்சியிலும், பாடலிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் விடுதலை போன்ற பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள் ஆழமாகப் பதியப்பட்டிருந்தன.
மூடநம்பிக்கைகள் மீது தாக்குதல்
புராணப் படங்களாக இருந்தாலும், சமூகப் படங்களாக இருந்தாலும், அதில் வரும் மூடநம்பிக்கை சார்ந்த சடங்குகள், ஜோதிடம் போன்றவற்றைத் தனது பாத்திரங்கள் மூலம் கிண்டல் செய்வார். உதாரணமாக, ஒரு பக்தர் திருஞானசம்பந்தர் பற்றி “சின்ன வயசிலே அழுதபோது பார்வதியே வந்து பால் கொடுத்தாராம்” என்று கூறினால், அதற்கு என்.எஸ்.கே.வின் பதில், “எந்த பார்வதி? நம்ம பலசரக்கு கடை பரமசிவம் செட்டியார் சம்சாரம் பார்வதியா?” என்றவாறு இருக்கும். இத்தகைய நெற்றியடி பதில்கள் மக்களைச் சிரிக்க வைத்த அதே நேரத்தில், பகுத்தறிவு கேள்வியையும் எழுப்பியது.
போலி சாமியார்கள், பூசாரிகள் மற்றும் கபட நாடகங்கள் ஆடும் வேடதாரிகளைத் தனது நகைச்சுவைக் காட்சிகள் மூலம் கடுமையாக விமர்சித்தார். பக்திப் படமான ‘பாரிஜாதம்’போன்ற படங்களில்கூட, பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டு நையாண்டி நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து, ‘பக்திப் படத்திலும் பகுத்தறிவுக் கருத்து’ என்ற புதிய பாணியை அறிமுகப்படுத்தினார்.
டாக்டர் சாவித்திரி திரைப்படத்தில் ஒரு பாட்டு! “காசிக்குப்போனா கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு – இப்ப ஊசியைப் போட்டா உண்டாகுமென்ற உண்மை தெரிஞ்சு போச்சு” என்ற பாடல், கலைச் சேவை மூலம் பகுத்தறிவு அறிவியல் கருத்துகளைப் பரப்புவதையே தனது பணியாகக் கொண்டிருந்தார். உடுமலை நாராயண கவிதான் இத்தகைய பாடல்களை எழுதியவர் ஆவார்.
கலைவாணரின் பகுத்தறிவுப் பணிக்குத் தந்தை பெரியார் மிகுந்த ஆதரவு அளித்தார். என்.எஸ்.கே.வை சுயமரியாதைக் கண்ணோட்டத்துடன் பார்த்த பெரியார், கலைத் துறையில் அவர் ஆற்றிய அரும்பணியைப் பலமுறை புகழ்ந்து பேசியுள்ளார்.
“இன்று என்.எஸ். கிருஷ்ணன் செத்தாலும் சரி, ‘அன்னக் காவடி கிருஷ்ணன்’ ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப் பட்டால் அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால் அச்சரித்திரமே தீண்டப்படாததாகிவிடும்” என்று ‘குடிஅரசு’ இதழில் (11.11.1944) பெரியார் குறிப்பிட்டது. கலைவாணரின் பங்களிப்பை அவர் எவ்வளவு உயர்வாக மதிப்பிட்டார் என்பதை இது காட்டுகிறது.
கலைவாணர், தான் ஈட்டிய செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கும், சீர்திருத்த இயக்கங்களுக்கும் வாரி வழங்கிய ஒரு வள்ளலாகவும் திகழ்ந்தார். திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகர்களுக்கெனத் தனிப்பாதையை உருவாக்கி, நகைச்சுவை என்பது வெறும் கேளிக்கைக்காக மட்டுமல்ல, மக்களை சிந்திக்கவும் சீர்திருத்தவும் பயன்பட வேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்த முற்போக்கு சிந்தனையாளர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஆவார்.
பாலர் அரங்கம் என்றிருந்ததை கலைவாணர் அரங்கம் என்று மாற்றியவர் முதலமைச்சர் கலைஞர் ஆவார்.
