விஜயவாடா, நவ.29 சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிச் செல்கின்றனர். பல நகரங்களில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற விமான நிலையங்களுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று, அங்கிருந்து பம்பை வழியாக கோயிலை சென்றடைகின்றனர்.
ஆனால், பக்தர்களின் இருமுடியை விமான நிலையத்தில் சோதனை செய்த பின்னரே கையோடு (ஹேண்ட் லக்கேஜ்) விமானத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இருமுடியில் உள்ள பொருட்களை வெளியில் எடுத்து மீண்டும் இருக்கமாக கட்டுவது உட்பட பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. எனவே, ‘புனித’மான இருமுடியை சோதனையிடாமல் அனுமதிக்க பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், வழக்கமான சோதனை எதுவும் இல்லாமல் விமானத்துக்குள் எடுத்துச் செல்ல இருமுடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விசயத்தில் பாதுகாவலர்களுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை விமான துறை அமைச்சர் கே.ராம்மோகன் நேற்று (28.11.2025) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நேற்று (28.11.2025) முதல் ஜன. 20-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
