சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களுக்கான பரிந்துரைகளில் சமூகநீதி புறக்கணிப்பா? *எல்லாம் பார்ப்பனமயமா?  மதச்சார்பின்மைக்கு ஆபத்து! தொடர் போராட்டங்கள் வெடிக்கும்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளுக்கு உரிய பரிந்துரைப் பட்டியலில் சமூகநீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. நீதிபதி பதவிகளில் எல்லாம் பார்ப்பனமயமாகும் நிலைக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் வெடிக்கும்! என்று எச்சரிக்கை விடுத்து தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளுக்கு, பரிந்துரைப் பட்டியல் ஒன்று அனுப்பப் பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல், பெரிதும் உயர்ஜாதிப் பார்ப்பனர்களையே மீண்டும் மீண்டும் நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரைக்கப்படுவதாகத் தெரிகிறது.

பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற குரல் எழுந்தால்,   அதிலும் ‘மிக தந்திரமான முறையில்’ ஒவ்வொரு முறையும் பாலின நீதி என்ற சாக்கில் உயர்ஜாதிப் பார்ப்பனப் பெண்கள் உட்பட அவர்களையே 2, 3 என்று நியமிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. அதில்  ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினப்  பெண்களுக்குப் போதிய அளவு வாய்ப்புத் தரப்படுவ தில்லை.  சமூகநீதியை உள்ளடக்கிய பாலின நீதி வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயம் இவர்களை எட்டாதா?

தமிழ்நாட்டின் நீதித் துறையில் நெடிய அனுபவம் மிக்க மூத்த வழக்குரைஞர்கள் பலர் இருக்கும்போது, உயர்ஜாதிப் பார்ப்பன சமூகத்திலிருந்து மட்டும் நீதிபதிகளை நியமிக்க மீண்டும் மீண்டும் பரிந்துரைகள் அனுப்பப்படுகின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 150 ஆண்டு கால வரலாற்றில் இன்று வரை நீதிபதிகளாக நியமிக்கப்படாத பல ஜாதியினர், வகுப்பினர் இன்னமும் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் உள்ள சில ஜாதியினருக்கு இதுவரை எந்த பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டதில்லை. மாறாக, 100-க்கு 3 பேராக உள்ள பார்ப்பன ஜாதியினருக்கு மட்டும் எல்லா பட்டியல்களிலும்  முதன்மையும், முன்னுரிமையும்  கிடைக்கிறதே எப்படி?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றோர், ஆர்.எஸ்.எஸ்.சில் செயல்படுவோர், இந்துத்துவச் சிந்தனை கொண்டோர், ஒன்றிய அரசின் வழக்குரைஞர்கள் என்று முழுக்க ஒரு சார்புடையோராகவே சென்னை உயர்நீதிமன்றத்தினை நிரப்பும் உள்நோக்கமா? அதுதான் தேர்வுக்கான தகுதியா?

இஸ்லாமியர் ஒருவர்கூட இல்லையே ஏன்?

கடந்த 4 ஆண்டுகளில் எந்த நீதிபதிகள் பரிந்துரைப்  பட்டியலிலும் ஓர் இஸ்லாமியர் கூட இடம் பெறவில்லையே ஏன்?

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைதானே! அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, நீதிபதிகள் நியமனப் பரிந்துரைப் பட்டியலில் இப்படி ‘‘சமூகஅநீதி’’ நிகழ்வதை ஏற்க முடியுமா?

மதச் சிறுபான்மையினர், பழங்குடியினர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் போன்றோர், வழக்குரைஞர்களாக இருந்து நீதிபதிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் (Bar to Bench) சேர்க்கப்படுவதில்லையே, ஏன் இந்தப் புறக்கணிப்பு?

தற்போது செய்யப்பட்டிருக்கும் பரிந்துரைகள் அனைத்திலும் ஒன்றியத்தை ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின்  ‘இந்துத்துவா’ ஆதரவாளர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்று வரும் செய்தி சமூகநீதிச் சிந்தனையாளர்கள், மதச்சார்பற்றோர் அனைவரையும் கொதிப்புறச் செய்கிறது!

நீதித் துறையில் இந்துத்துவ சிந்தனைவாதிகளா?

நீதித் துறையில் இந்துத்துவச் சிந்தனையாளர்கள் இருந்தால் எத்தகைய சிக்கல்கள் எழும் என்பதைப் பல வழக்குகளில் தமிழ்நாடு கண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மேலும் அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தி, மறைமுகமாகத் தமிழ்நாட்டை ஆளும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூகநீதி வேண்டும் என்று வெளிப்படையாகவே வழக்குரைஞர் அமைப்புகள் வேண்டுகோள் வைக்கின்றன; மதச்சார் பின்மை காக்கப்பட வேண்டும் என்று முறையிடுகின்றன என்றால், இங்கு உள்ள நிலைமை என்ன என்பதை நீதித் துறையின் உயர்பொறுப்பில் இருப்போர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஓரணியில் திரண்டு போராட்டம் வெடிக்கும்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை நிலைநாட்ட, மதவாத – ஜாதியவாத மன்றமாக சென்னை உயர்நீதிமன்றம் மாறும் ஆபத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா? இதைத் தடுக்க எப்போதும் திராவிடர் கழகம் முன் நிற்கும் -அனைவரையும் ஓரணியில் திரட்டிப் போராட்டங்கள் வெடிப்பதைத்  தடுக்க முடியாது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்!

இது சலுகையல்ல; உரிமை – நமது அரசியலமைப்புச் சட்டப்படியான வாய்ப்பு!

சமூகநீதியும், மதச்சார்பின்மையும் தொடர்ந்து இப்படி புறக்கணிக்கப் பட்டால், சமூகநீதி மண்ணாகிய தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்கள் எழுவதை எவராலும் தடுக்க முடியாது!

 

கி.வீரமணி
தலைவர்,

   திராவிடர் கழகம்

28.11.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *