இந்நாள் – அந்நாள்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘சுயமரியாதைத் திருமணச் சட்ட மசோதா’ நிறைவேறிய நாள் இன்று (28.11.1967)

‘சுயமரியாதைத் திருமணச் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறிய நாள் இன்று (28.11.1967)

1955 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் திருத்தம் செய்யப்பட்ட மசோதாவாக தமிழ்நாட்டின் முதலமைச்சர்  அறிஞர் அண்ணா தமிழ்நாடு சட்டமன்றத்தில்   28.11.1967 அன்று கொண்டுவந்தார்

சட்டமன்ற விவாதத்திற்குப் பின்பு அப்போ திருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 17-01-1968இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று 20-01-1968இல் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமாக்கப்பட்டது.

சுயமரியாதைத் திருமணச் சட்டம், தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் மைல்கல் ஆகும். தந்தை பெரியாரின் சீரிய முயற்சியால் உருவான இந்தச் சட்டம், பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றிருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்கு முறைகளை உடைத்தெறிந்து, திருமண உறவில் பெரும் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத் தியது. முதல் சுயமரியாதைத் திருமணம் அருப்புக் கோட்டையையடுத்த சுக்கிலநத்தத்தில் 1928இல் தந்தை பெரியாரால் நடத்தி வைக்கப்பட்டது.

சட்டத்திற்கு முன்பு இருந்த நிலை

சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் திரும ணங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

திருமணங்கள் பார்ப்பனர்களால் மட்டுமே நடத்தப்பட்டன. அவை, சடங்குகள், மந்திரங்கள், ஹோமம் மற்றும் ஜாதகப் பொருத்தம் போன்ற சம்பிர தாயங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

திருமணம் என்பது ஆடம்பரத்தின் அடையாள மாகவும், அதிகப் பொருட்செலவுடையதாகவும் இருந்தது. இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக விளங்கியது.

திருமணச் சடங்குகள் பெரும்பாலும் ஆண் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதாகவும், பெண் களைக் கீழ்மைப்படுத்துவதாகவும் இருந்தன.

சடங்குகள் இன்றி நடந்த எளிய திருமணங்கள் சட்டப்பூர்வ செல்லுபடியைபெறவில்லை. இதனால், அத்திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுக்குச் சொத்துரிமை மறுக்கப்பட்டது; அதுமட்டுமின்றி, அத்திருமண உறவுக்குச் சமூக அங்கீகாரமும் இல்லாமல் போனது.

சுயமரியாதைத் திருமணம்

சுயமரியாதைத் திருமணம் என்பது வெறும் திருமண முறை மாற்றம் அல்ல, அது ஒரு தத்து வார்த்தப் புரட்சி

சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை; இவை மனிதனின் சுதந்திர சிந்தனையைக் கட்டுப்படுத்துகின்றன. இவற்றை நீக்கி, அறிவையும் சுயமரியாதையையும் திருமணத்தின் மய்யமாகக் கொண்டுவர இந்த முறை அவசியப்பட்டது.

தேவையற்ற ஆடம்பரச் சடங்குகளைக் களைவதன் மூலம், ஏழைக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க முடிந்தது.

மணமக்கள் இருவரும் சமம் என்பதை உறுதி செய்வதற்காக, பார்ப்பனப் பண்ணையம் நீக்கப்பட்டது. திருமணம் என்பது இருவருக் கிடையேயான வாழ்க்கை ஒப்பந்தம்  மட்டுமே என்று நிலைநாட்டப்பட்டது.

சடங்குகள் இன்றி எளிமையாகத் திருமணம் செய்துகொள்ளும் இணையருக்குச் சட்டப் பாதுகாப்பையும், அவர்களின் குழந்தைகளுக்குச் சொத்துரிமையையும் பெற்றுத் தருவது இந்தச் சட்டத்தின் தலையாய நோக்கமாக இருந்தது.

சட்டமாக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட புரட்சிகர மாற்றம்

தமிழ்நாடு அரசால் 1967-இல் சட்டமியற்றப் பட்டு, இந்து திருமணச் சட்டம், 1955-இல் (Hindu Marriage Act, 1955) திருத்தம் கொண்டு வரப்பட்டு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப் பூர்வமாக்கப்பட்டன.

இந்தச் சட்டம் ஏற்படுத்திய முக்கியப் புரட்சிகள்:

திருமணங்கள், மதகுருமார்கள் இன்றி, மணமக்களோ அல்லது அவர்களின் நண்பர்களோ/உறவினர்களோ முன்னிலையில் நடத்தப்படலாம்.

மாலை மாற்றுதல், மோதிரம் அணிவித்தல் அல்லது மணமக்களில் ஒருவர் மற்றவரை வாழ்க்கை இணையாக ஏற்றுக்கொள்வதைத் தெளிவாக அறிவித்தல் மட்டுமே இந்தத் திருமண முறைக்கு போதுமானது. இது திருமணத்தை மிக மிக எளிமையாக்கியது.

சடங்குகள் இல்லாமல் செய்யப்படும் சுய மரியாதைத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் (Legally Valid )என்று அங்கீகரிக்கப்பட்டது. இதனால், கோடிக்கணக்கான எளிய மக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

திருமணச் சடங்குகளில் இருந்த ஜாதி, மத மற்றும் வர்க்கப் பாகுபாடுகளை இந்தச் சட்டம் தகர்த்தது. இது ஜாதி மறுப்புத் திருமணங்கள் மற்றும் கைம்பெண் திருமணங்கள்  போன்ற சமூக நீதியை நிலைநாட்டும் உறவுகளுக்குச் சட்டப் பாதுகாப்பை வழங்கியது.

சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்பது வெறும் பெயரில் ஏற்பட்ட மாற்றம் அல்ல; அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் பகுத்தறிவு ஆகிய திராவிடக் கொள்கைகளைத் தனிமனித வாழ்வியல் உறவுக்குள் கொண்டுவந்த மகத்தான புரட்சி ஆகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *