திருச்சி, நவ. 28- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பள்ளியில் நூறு நாட்கள் நிறைவு செய்ததை முன்னிட்டு, இம்மாணவர்கள் கடந்த 100 நாட்களில் கற்றுத் தெளிந்த திறன்களை பெற் றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தும் “நூறாவது நாள் கொண்டாட்டம்” 21.11.2025 அன்று காலை பள்ளியின் நாகம்மையார் கலையரங்கத்தில் சிறப்பாக நடை பெற்றது.
விழாவிற்கு பள்ளி முதல்வர் டாக்டர் க. வனிதா தலைமை தாங்கினார். மொழிவாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், யூ.கே.ஜி மாணவி ஆர். ஜனனி தனது இனிய மழலை மொழியில் வரவேற்புரையாற்றி அனை வரையும் அன்புடன் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, மழலையர் பிரிவு மாணவர்கள் இதுவரை கற்றிருந்த பல்திறன்களை மேடையேறி நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினர். தமிழ் மற்றும் ஆங்கில மழலைப்பாடல்கள், கதைகள், திருக்குறள், தன்னறி முகம், எண் அடையாளம், 1 முதல் 100 வரை எண்ணங்களை வரிசையாகவும் 100 முதல் 0 வரை பின்னோக்கியும் கூறுதல், தமிழ்–ஆங்கில எண் பெயர்கள், மாதப்பெயர்கள், கிழமைப் பெயர்கள், உடலுறுப்புகள், புலன்கள் மற்றும் அவற்றின் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பான வெளிப்பாடுகளை அவர்கள் அளித்தனர். மேலும், ஆங்கில உரையாடல், உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் போன்ற செயல்பாடுகளும் மாணவர்களால் சுவாரஸ்யமாக முன்வைக்கப்பட்டது.
பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 106 மாணவ–மாணவிகள் எந்தவித தயக்கமுமின்றி தெளி வாகத் தங்கள் திறன்களை வெளிப்படுத்தி பெற்றோர்களின் மனதைக் கவர்ந்தனர்.
சிறார்களின் திறமையை கண்டு பல பெற்றோர்கள் உணர்ச்சி பெருக் கில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குழந்தைகளின் தன்னம்பிக்கை, சரியான உச்சரிப்பு, ஒழுக்கம், மேடைப்பயிற்சி ஆகியவற்றைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்த பெற்றோர்கள், “எங்கள் குழந் தைகளின் முன்னேற்றம் கண் முன்னே தெளிவாகத் தெரிகிறது; இவ்வளவு சிறப்பாகப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி” என பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியின் நிறைவில் யூ.கே.ஜி. மாணவி ஜோவினா ஆண்டனி நன்றியுரை நிகழ்த்தினார். பின்னர் நாட்டுப்பண்ணிசை ஒலியுடன் விழா இனிதே நிறைவுற்றது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி எஸ். ரம்யா நிகழ்ச்சியை நயத்துடனும் தெளிவுடனும் தொகுத்து வழங்கி பாராட்டைப் பெற்றார்.
இந்நிகழ்வில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறார்களின் திறமைகளை ரசித்தனர். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு மழலையர் பிரிவு ஆசிரியர்களும் அலுவலகப் பணித்தோழர்களும் ஒருங்கிணைந்து சிறந்த ஏற்பாடு களைச் செய்திருந்தனர்.
