தந்தை பெரியார் காலந்தொட்டு, தற்போது தமிழர்தலைவர் வரும் காலம் வரை எப் போதெல்லாம் சிங்கப்பூர் – மலேசியா வருகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களுக்குத் தனியான வரவேற்பு – விருந்தோம்பல் நிகழ்த்துவது அம் மண்ணின் பண்பாடு. அதில், தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான சான்றோர்கள், ஆய்வாளர்கள், அதிகாரிகள், பல்துறை அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பல்துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்பது வழமை.
கருத்துப் பரிமாற்றம்
மேடையில் உரையாற்றுவதுடன் நிகழ்ச்சி முற்றுப்பெறும் கூட்டங்களைப் போல் அல்லாமல், ஒவ்வொருவருடனும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும், அய்யம் களைந்துகொள்ளவும் இச் சந்திப்புகள் பயன்படுவதுண்டு.

அத்தகையதொரு நிகழ்ச்சி சிங்கப்பூரின் கால்சா அரங்கத்தின் நான்காவது தளத்தில் நவம்பர் 11 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் ஆசிரியர் அவர் களுக்குச் சிறப்பு செய்தார். மன்றத்தின் தலைவர் க.பூபாலன் அனைவரும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
பெரியாரின் ஒளியில் – பெண் முன்னேற்றத்தின் தொடரும் பயணம்
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் மதியுரைஞர் சி.சாமிக்கண்ணு, அயலகத் தமிழர் நல வாரியத்தின் உறுப்பினர் ஜி.வி.ராம், தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் அழகிய பாண்டியன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் சு.முத்துமாணிக்கம், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர் நா.ஆண்டியப்பன், புதிய நிலா ஜஹாங்கீர், பெரியாரியப் பற்றாளரும், சிறந்த தன்முனைப்புப் பேச்சாளரும், அமெரிக்க அய்.டி. நிறுவனத்தின் ஆசிய கிளை இயக்குநருமான பொறியாளர் ரவிசந்திரன் சோமு,சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் தொழிலதிபர் அ.முகமது பிலால், தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம் இலியாஸ், சிங்கப்பூர் “மக்கள் மனம்” இதழ் ஆசிரியர் கவிஞர் பிச்சுனிக்காடு இளங்கோ, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக்கின் துணைத் தலைவர் பெரியார் விருது பெற்ற திரு மு.அ.மசூது, பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற திருமதி சுசிலா மூர்த்தி, பெரியார் விழா 2025 கருத்தரங்கத்தில். “பெரியாரின் ஒளியில் – பெண் முன்னேற்றத்தின் தொடரும் பயணம்” என்ற தலைப்பில் உரையாற்றிய பிலவேந்தர்ராஜ் சுந்தர் ஆரோக்கியராஜ், “மலாயாவில் பெரியாரின் வருகையும் தாக்கமும்” என்ற தலைப்பில் உரையாற்றிய விஜயகுமார் அருள் ஆஸ்வின் ஆகியோருடன் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தமிழர் தலைவரின் வாழ்விணையர் மோகனா அம்மையார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ.1 லட்சம் நன்கொடை
எஸ்.என்.ஆர். இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.பழனிநாதன் அவர்கள் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள அறிவியல் அருங் காட்சியகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்கள்.

சிங்கப்பூர் நாகப்பட்டினம் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜே.சாதிக், கவிமாலை அமைப்பின் மதியுரைஞர் கவிஞர் இறை.மதியழகன். அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் மூர்த்தி, தமிழ் உணர்வாளர்கள் ஆசிரியர் அவர்களுக்குச் சிறப்பு செய்து ஓளிப்படம் எடுத்துக்கொண்டனர்.

பங்கேற்றோரின் கேள்விகளுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பதிலளித்தார். தமிழ் இளைஞர்களிடம் தமிழை அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்த கேள்விக்கு ஆசிரியர், அதற்கான முயற்சிகளை தமிழ்நாட்டிலும், பிற நாடுகளிலும் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார். ஆங்கிலத்திலும் போட்டிகளும், பயிற்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்று வைக்கப்பட்ட வேண்டு கோளை மன்றம் செயல்படுத்தும் என்று அதன் தலைவர் பூபாலன் தெரிவித்தார்.

பெரியார் உலகம்
கூடியிருந்த தோழர்களின் வேண்டுகோளுக் கிணங்க, திருச்சி சிறுகனூரில் உருவாகிவரும் பெரியார் உலகம் குறித்த காணொலி, படங்களைக் காட்டி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.
மன்றத்தின் உட்கணக்காய்வாளர் மாறன், செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மன்றத்தின் பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மன்ற உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். குடும்பம் குடும்பமாகத் தமிழர் தலைவர், அவர்தம் வாழ்விணையர் மோகனா அம்மையார் ஆகியோருடன் ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அனைவருக்கும் விருந்து உணவு வழங்கப்பட்டது. செவிக்கும், கண்ணுக்கும், வயிற்றுக்கும் விருந்தாக அமைந்தது தமிழர் தலைவர் உடனான சந்திப்பு நிகழ்ச்சி!
