பெரியார் திடல் – பிறந்தநாள் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, நவ.28– சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வினர் எழுச்சியோடு களப்பணியாற்ற வேண்டும் என்று தனது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
தி.மு.க. இளைஞரணி செயலாள ரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 49ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் ‘எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும், இதயங்கள் உதயத்தை வணங்கும்’ என்ற தலைப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (27.11.2025) நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர் வினோத் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வானவில் விஜய் முன்னிலை வகித்தார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களையும் வழங்கினார்.
மேலும் தி.மு.க. மூத்த உறுப்பினர் களுக்கு பொற்கிழியையும் வழங்கி கவுரவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
விழாவில், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- 365 நாட்களுக்கும் விழா நடத்தும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவருடைய பிறந்தநாளுக்கும் இதுபோன்று நிகழ்ச்சியை நடத்தவேண்டும். அந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஆகும். அனைவருக்குமான, அனைத்து சமுதாயத்தினருக்கான அரசாக இருப்பதுதான் திராவிட மாடல் அரசு, என்னுடைய பிறந்தநாள் விழாவும் திராவிட மாடல் அரசின் எடுத்துக்காட்டாக, ஒரு சாம்பிளாக நடந்துகொண்டிருக்கிறது.
7 நாட்களாக எனக்கு தொண்டை சரியில்லை. 4 நாட்கள் பேசாமல் இருங்கள் என்று எனக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள். நான் பல கூட்டங்களுக்கு சென்று வருகிறேன். மக்கள் என்னை பார்ப்பதற்காக வருவது இல்லை. என்னுடைய பேச்சை கேட்பதற்காகத்தான் வருகிறார்கள். எனவே நான் பேசாமல் இருந்தால் மக்கள் கோபித்துக் கொள்வார்கள். இதனால்தான் என்னால் பேசாமல் இருப்பது ரொம்ப கடினம் என்று சொல்லிவிட்டேன்.
குரல் எப்படி இருந்தாலும் பரவா யில்லை என்றுதான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.
பிறந்தநாள் செய்தி என்ன?
தி.மு.க.வினர் எழுச்சியோடு களப்பணியாற்ற வேண்டும். இந்த 4 மாதம் மிக மிக முக்கியமான காலம். நமது இலக்கு தலைவர் சொல்லியது போன்று 2026 சட்டமன்ற தேர்தலில் வெல்வோம் 200, படைப்போம் வரலாறு என்பதுதான். இதுவே என்னுடைய பிறந்தநாள் வேண்டு கோள் செய்தி ஆகும். இந்த 200 தொகுதிகளில் சென்னை கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் நம்முடைய மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசினார். பகுதி இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி நன்றி கூறினார்.விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
