சென்னை, மே 7 தமிழ்நாட்டில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி குழந்தை களுக்கு காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி மூலம் ஏற்கனவே 28 பள்ளிகளில் படிக்கும் 5,318 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. வடசென்னை பகுதி குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் 325 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 60 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இதற்காக 29 சமையல் கூடங்கள் அமைக்கப்படும் பணி முழுவீச்சில் நடக்கிறது. 15 மண்டலங்களிலும் காலை சிற் றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. விரிவாக்கப்படும் திட்டத்தின் மூலம் 363 மாநகராட்சி பள்ளிகளில் 65 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 15 மண்டலங்களிலும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சமையல் கூடங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. சமையல் கூடங்களில் இருந்து பள்ளிகளுக்கு விரை வாக உணவை எடுத்து செல்லக்கூடிய வகையில் நவீன சமையல் கூடம் அமைகிறது. அங்கிருந்து உணவை எடுத்து செல்ல 33 வாகனங்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு உணவு வினியோகிக்கப்படும். சமையல் பணியில் ஈடுபட ஊழியர்களும் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர்.