தமிழ்நாட்டில் பயங்கரவாதம் என்று அவதூறு பேசும் ஆர்.எஸ்.எஸ். ஆளுநரே; தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் அல்லது கமலாலயத்தில் அமர்ந்து அரசியல் செய்யுங்கள்; எதிர்கொள்ளத் தயார்!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மன்னார்குடி கழக மாவட்டம் சார்பாக ‘‘பெரியார் உலகம்” நிதி ரூ.30,28,000/- வழங்கப்பட்டது!
குண்டுவெடித்தது செங்கோட்டையிலா? செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலா?
மன்னைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரடி சவால்!

மன்னை, நவ.28 ‘‘குண்டுவெடித்தது செங்கோட்டையிலா? செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலா?’’ தமிழ்நாட்டில் பயங்கரவாதம் என்று அவதூறு பேசும் ஆர்.எஸ்.எஸ்.ஆளுநரே; தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்; அல்லது கமலாலயத்தில் அமர்ந்து அரசியல் செய்யுங்கள்; எதிர்கொள்ளத் தயார் என்று மன்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நேரடி சவால் விடுத்துள்ளார்.

திராவிடர் இயக்கத்தின் பழைய தலைமுறை வரலாறு ஆகிவிட்டது; இன்றைய தலைமுறை செயல்பாட்டில் இருக்கிறது; நாளைய தலைமுறை கொள்கைப் பயிற்சி பெற்று தயாராகிக் கொண்டிருக்கிறது. அதனால் திராவிடர் இயக்கத்தை யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என்று மன்னார்குடியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் பெருமிதத்துடன் உரை யாற்றினார்.

மன்னார்குடி கழக மாவட்டம் சார்பில்…

செங்கல்பட்டு மறைமலை நகரில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் ‘திராவிட மாடல்’ அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த சூளுரைத்து, ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.ஆட்சி; இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவோம் என்று பிரகடனம் செய்தார். அதன் அடிப்படையில் பிரச்சா ரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், மன்னார்குடி கழக மாவட்டம் சார்பில்,  மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ள சிட்டி ஹால் அரங்கில், நேற்று (27.11.2025) காலை 10.30 மணியளவில் கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

நிகழ்வில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமையில், மாவட்டச் செயலாளர் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராசு, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மன்னை வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த், மேனாள் ஊராட்சிக் குழுத் தலைவர் தலையாமங்கலம் பாலு, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம், நீடாமங்கலம் ஒன்றிய மேனாள் பெருந்தலைவர் சோம.செந்தமிழன், காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் நீலன் அசோகன், தி.மு.க. திருத்துறைப்பூண்டி நகர் மன்றத் தலைவர்  கவிதா பாண்டியன், முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், நகர்மன்ற உறுப்பினர் மீனாட்சி சூர்யபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கணேசன், ஆர்.எஸ்.அன்பழகன், மாவட்டத் துணைத் தலைவர் இன்பக்கடல், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ரமேஷ், திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் சித்தார்த்தன், மாவட்டத் துணைச் செயலாளர் புஷ்பநாதன், கழக சொற்பொழிவாளர் இரா.அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உமாநாத், இராம.அன்பழகன்  ஆகியோர் முன்னிலையேற்று உரை யாற்றினர்.

கழக வெளியீடுகளை மக்களுக்கு அறிமுகம் செய்து வாங்கிப் பயன்பெற வேண்டுகோள் விடுத்து மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அறிவிப்புச் செய்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பணிகளை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நெறிப்படுத்திச் சிறப்பித்தார். கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் சிறப்புரை வழங்கினார்.

‘பெரியார் உலக’த்திற்கு மன்னார்குடி மாவட்டம் சார்பில் ரூ.30,28,000/-

முன்னதாக அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி சாராத பொது மக்கள் பெருமிதத்துடன் கழகத் தலைவருக்கு ஆடையணி வித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பெரியார் உலகத்திற்கு நிதியளித்த தோழர்களின் பட்டியலை மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் வாசித்தார். உரியவர்கள் மேடைக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் காசோலை கொடுத்து மகிழ்ந்தனர். மொத்தம் மன்னார்குடி மாவட்டம் சார்பில் ரூ.28,60,000/– வழங்கப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மாலைக்குள் 30 லட்சமாக முழுமையாக்கி விடுகிறோம் என்று கழகத் தலைவரிடம் உறுதியளித்தனர். நிதியளிப்புக் குழுவினர் அனைவரும் கழகத் தலைவருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு கழகத் தலைவர் நிறைவுரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஆசிரியர் தமது உரையில், ‘‘மன்னார்குடி சுயமரி யாதைப் பாசறை” என்று தொடங்கினார். தொடர்ந்து கொள்கையாளர்களை எப்படி உருவாக்குகிறது என்பதை, “பழைய தலைமுறை வரலாறு ஆகிவிட்டது! இன்றைய தலைமுறை செயல்பாட்டில் இருக்கிறது! நாளைய தலைமுறை கொள்கைப் பயிற்சி பெற்று தயாராகிக் கொண்டிருக்கிறது” என்று பாசறைக்கு விளக்கம் சொல்லிவிட்டு, “அப்படிப்பட்ட திராவிடர் இயக்கத்தை யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்று கொள்கை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். அரங்கம் கையொலிகளால் அதிர்ந்தது.

ஒன்றிய அரசே பதிவு செய்துள்ளது!

மேலும் அவர், “இங்கே கருப்பு இருக்கிறது; கருப்பில், சிவப்பும் கலந்திருக்கிறது; நீலமும் உடனி ருக்கிறது. கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றாக இருக்கிறது” என்று முடிக்கும் முன்னரே மக்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். தொடர்ந்து, “வண்ணங்கள் ஒன்றாக இருக்கிறது; வர்ணங்களை வீழ்த்துவதற்கு” என்று முடித்ததும், கையொலிகளால் அரங்கம் நிறைந்தது. தொடர்ந்து பிறந்தநாள் காணும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருக்கு வாழ்த்துச் சொல்வதற்காக, “அறிவுத்திருவிழாவை அகில மெல்லாம் பரப்பிக்கொண்டிருக்கும் மானமிகு மாண்பு மிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்” என்று வாழ்த்தினார். தமிழ்நாடு முத லமைச்சர், துணை முதலமைச்சருக்குத் தான் தொகுத்த, ‘தாய்வீட்டில் கலைஞர்’ புத்தகம் பிறந்தநாள் பரிசாக வழங்கியதை தாய்வீடு சார்பாக பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார். மேலும் அவர், மன்னார்குடி மாவட்டம் சார்பாக ’பெரியார் உலக’ நிதியாக ரூ.28,60,000 வழங்கியதைப் பாராட்டினார். ரூ.30 லட்சம் ஆக்கி விடுவதாக அறிவித்ததையும் பாராட்டினார். தந்தை பெரியார் தன்னிடம் வந்ததையெல்லாம் மக்களுக்கே விட்டுச் சென்றதை நாம் அல்ல, வாஜ்பேயி பிரதமராக இருந்த ஒன்றிய அரசு பதிவு செய்துள்ளது என்ற அரிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

பெரியார் தான் தமிழ்நாட்டின் அடிவேர்!

அதைத் தொடர்ந்து, ‘‘தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் சந்தித்த கொள்கை எதிரிகள் நாணயமான எதிரிகள். இன்றைய முதலமைச்சர் சந்திக்கின்ற எதிரிகள் நாணயமற்ற எதிரிகள். ஆனாலும், துணிச்சலுடன் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்று போராடி வருகிறார்” என்று சொல்லிவிட்டு, இந்தத் துணிச்சலுக்குக் காரணம் தந்தை…. பெரியார்…. என்று முடிப்பதற்குள் எழுந்த கைதட்டலில் பொறி பறந்தது. ஆகவே, ‘‘பெரியார் தான் தமிழ்நாட்டின் அடிவேர். அதனால்தான் இதை பெரியார் மண்” என்கிறோம் என்று முடித்தார்.

மேலும், “இந்த அடிப்படையில்தான் ராஜாஜி கொண்டு வந்த ‘குலக்கல்வி’ ஒழிக்கப்பட்டது; இந்த அடிப்படையில்தான் இன்றைய முதலமைச்சர் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதுகெலும்புடன் மறுத்திருக்கிறார்” என்று தமிழ்நாட்டின் முதலமைச்சரின் துணிச்சலுக்கான கொள்கைப் பின்னணியை எடுத்துரைத்தார். அத்துடன் திராவிடர் இயக்கத்தின் இன்னொரு முக்கியமான கொள்கையான பெண்ணுரிமை மீட்பு என்பதை, “ஜாதி, மத, இனம் தாண்டி இந்த அமைப்புதான் கரண்டி பிடிக்கிற கைகளெல்லாம் முரண்டு பிடித்து பேனாவைப் பிடித்து, பின்னர் நாற்காலியையும் பிடித்திருக்கிறது” என்று திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால பெண்ணுரிமைப் போராட்டக் களங்களை ஒற்றை வாக்கியத்தில் அடக்கிப் பேசினார். ஆசிரியரின் கூற்றை, மக்கள் குறிப்பாக அரங்கத்தில் இருந்த பெண்கள் தன்னிச்சையாகக் கைதட்டி வரவேற்றனர்.

குண்டு வெடித்தது செங்கோட்டையிலா?
செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலா?

தொடர்ந்து, ‘திராவிடம் என்பது வெள்ளைக்காரர்களின் சூழ்ச்சி’ என்ற பொருள்பட பேசிய தமிழ்நாடு ஆளு நரின் அடாவடியைக் கண்டிக்கும் வகையில், ‘‘அசல் மனுதர்மம்” என்ற புத்தகத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, “அத்தியாயம் 10 சுலோகம் 44 இல் உள்ளதை படிக்கிறேன் கேளுங்கள்” என்று முன்னோட்டமாக சொல்லிவிட்டுத் தொடர்ந்தார். “பவுண்டரம், அவுண்டரம். திராவிடம், காம்போசம், சீனம், பால்கீகம்” என்று படித்துக் காட்டிவிட்டு, “இதில் வருவதெல்லாம் தனி நாடுகளின் பெயர்கள். இதென்ன வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு எழுதப்பட்டதா? தமிழ்நாட்டில் பயங்கரவாதமா? குண்டு வெடித்தது செங்கோட்டையிலா? செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலா?” என்று அதிரடியாகக் கேள்வி கேட்டு, “அவதூறு பேசுகிற ஆர்.எஸ்.எஸ். ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள். இல்லையென்றால் கமலாலயத்தில் அமர்ந்து அரசியல் செய்யுங்கள்; நாங்கள் சந்திக்கத் தயார்” என்று சவால் விட்டுப் பேசினார். மக்கள் கொதிநிலை அடைந்தனர்.

டிசம்பர் 4 இல் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர் தொடர்ந்து, “வருகிற 4 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் ஒத்த கருத்துள்ளவர்கள் உடன் இணைந்து ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்’’ என்று அறிவித்தார். மக்களின் கடமையை நினைவூட்ட, மிசா காலத்தில் தான் சிறையிலிருந்த போது, இருட்டில் ஒருவர் தன் மீது வந்து விழுந்தார். யார் என்று கேட்டபடியே தாங்கிப் பிடித்தேன். ‘நான் தான் ஸ்டாலின்’ என்றது விழுந்தவரின் குரல். அன்றைக்குத் தாங்கிப் பிடித்த கைதான் இன்றைக்கும் விடவில்லை. வருகிற 2026 தேர்தலில் மறுபடியும் அவர் ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து தமது உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

ஜப்பான் தோழர் செந்தில், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் தன்ராஜ், திருவாரூர் மாவட்டத் தலைவர் அருண் காந்தி, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். அத்துடன் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அரங்கு நிறைந்து அடுத்திருந்த மற்றொரு அறையில் LED மூலம் மேடை நிகழ்வுகளை ஒளிபரப்பி அங்கிருந்த மக்களும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறைவாக நகரச் செயலாளர் அழகேசன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், திருத்து றைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றியப் பகுதிகளி லிருந்து கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர். கழகத் தலைவர் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மாலையில் நடைபெறவுள்ள பட்டுக்கோட்டைக் கூட்டத்தில் கலந்து கொள்ள, தனது பிரச்சாரப் படையுடன் புறப்பட்டார்.

குறிப்பு: டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஆளுநர்
ஆர்.என்.ரவியின் அடாவடிப் பேச்சை எதிர்த்து நடைபெறுகிறது. தோழர்களே, செயலில் இறங்கிவிட்டீர்களா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *