வரலாறு படைத்த லால்குடி – கீழவாளாடி

4 Min Read

‘எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும் – ஆதிக்கம் செலுத்தவும் கூடாது’ என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ இரண்டணா, நான்கணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவது என்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் இரண்டணா கூலி உயர்த்தித் தருவார்களேயானால், தொழிலாளர்களால் செய்யப்படும் சாமான்களின் (விலை) பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா அதிகப்படுத்துவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளர்களேயாவார்கள். ஆகவே முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலதுகையில் கூலி சற்று அதிகம் கொடுத்து, இடது கையில் அதையும் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள்.

‘‘முதலாளிகளுடன் கூலித் தகராறு என்பது முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்’’ (‘குடிஅரசு’ 1.10.1933) என்றார் தந்தை பெரியார்.

இந்த சாராம்சத்தை உள்வாங்கித் தொடங்கப்பட்டதுதான் திராவிட தொழிலாளர் கழகமும், திராவிடவிவசாய தொழிலாளர் சங்கமும், இரயில்வே தொழிலாளர் (SRMU) சங்கமும் ஆகும்.

குறிப்பாக 1952ஆம் ஆண்டுக்குப் பிறகு தந்தை பெரியார் அவர்களின் ஆணைப்படி தொடங்கப்பட்டதுதான் திராவிட விவசாய தொழிலாளர் சங்கமாகும்.

லால்குடி, திருவாரூர், கீழவேளூர், நன்னிலம், செம்பனார் கோயில் மணல்மேடு, தஞ்சாவூர் வட்டாரப் பகுதிகளில் திராவிட விவசாய தொழிலாளர் சங்கங்கள் செழிந்தோங்கின.

நேற்று (26.11.2025) லால்குடி பகுதியில் திராவிடர் கழகத்தின்  சார்பில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு மாநாடு என்று எடுத்துக் கொண்டால், அந்தப் பகுதியில் திராவிடர் கழகம் வலிமையாக வளர்ந்ததற்கே அடிப்படைக் காரணம் திராவிட விவசாய தொழிலாளர் சங்கமே!

அந்த வட்டாரங்களில் நிலவுடைமைக்காரர்களாக இருந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களே! பார்ப்பனரல்லாதவர்களான விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என்ற நிலையில்தான் இருந்தனர்.

அந்தக் கூலிகூட வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல; நிலச்சுவான்தாரர்கள் விருப்பப்பட்டு, பிச்சை போடுவது போல்தான்!

இந்த நிலையில் திராவிட விவசாய சங்கம் அந்தப் பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட பிறகுதான் பெரும் புரட்சி ஏற்பட்டது!

‘விளைச்சலில் சரி பகுதி’ என்கிற அளவுக்கு உரிமைக் குரல் ஓங்கியது! அடுத்து…. ‘நிலத்திலும் சரி பகுதி’ என்கிற அளவுக்கு அடுத்த பரிணாமத்தை எட்டியது.

‘பண்ணையாள் சட்டம்’ வருவதற்கு முன்பாகவே திராவிட விவசாய சங்கத்தின் முயற்சியால், லால்குடி வட்டாரத்தில் அந்த நிலை உருவாக்கப்பட்டது என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

‘ஆணுக்கும், பெண்ணுக்கும் சம அளவில் கூலி’ என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

‘நிலத்தில் வேலை செய்பவர்கள் இனி பண்ணைகளின் பசப்பு வார்த்தைக்கு மயங்கி விடக் கூடாது; உழவிலிருந்து வரப்பு வெட்ட, களை எடுக்க, பாத்தி பறிக்க, நீர் பாய்ச்ச, நாற்று நட, அறுவடை செய்ய, களத்து மேட்டுக்குக் கொண்டு செல்ல, போரடிக்க, தூற்ற மற்றும் சுமைக்கூலி முதற் கொண்டு தனித்தனியாகக் கணக்கிட்டு, பணமாகவோ, நெல்லாகவோ கொடுக்க வேண்டும் என்று திராவிட விவசாய சங்கம் வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றியது.

குறிப்பாக, வாளாடி கிராமம் முழுவதுமே பார்ப்பனர்கள் தான் நிலவுடைமைக்காரர்கள்!

‘திராவிட விவசாய சங்கம்’ புரட்சிகரமான தீர்மானங்களை நிறைவேற்றி செயல்பாட்டுக் களத்தில் இறங்கிய நிலையில் வாளாடியில் ஓர் அதிசயம் நடந்தது!

‘விவசாயம் ஒரு பாவத் தொழில்(!)’ என்ற மனுதர்மக் கொள்கைவாதிகளான பார்ப்பனர்கள் வாளாடி கிராமத்தில் வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பார்ப்பனப் பெண்களும் வயலில் இறங்கினார்கள். (காவல் துறையினரை நான்குப் பக்கங்களிலும் காவலுக்கு வைத்து)

ஆனாலும் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை பார்ப்பனர்களால்! இறங்கி வந்தனர்; திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் தீர்மானத்திற்கு அடி பணிந்தனர்.

இத்தகைய பகுதிகளை உள்ளடக்கிதான் காலையில் லால்குடியிலும், மாலையில் எழுச்சி மிக்கப் பேரணியோடு கீழவாளாடியிலும் மாநாடுகள் வரலாற்றுச் சிறப்புகளுடன் நடைபெற்றன.

ஏதோ விவசாயம், அது சார்ந்த தொழிலாளர்களின் கூலிப் பிரச்சினை என்கிற அளவில் மட்டும் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்படவில்லை.

திராவிடர் கழகத்தின் கொள்கை எதுவோ, அந்தக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டவர்கள்தான் திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தினர்.

அதன் காரணமாகத்தான், ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதிகளை எரிக்கும் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தினரும் ஏராளமாகக் குடும்பம் குடும்பமாக ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக லால்குடி  வட்டத்தில் தான் அதிகமானோர் – கிட்டத்தட்ட நானூறு பேர் ஈடுபட்டு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையை இன்முகத்துடன் ஏற்றனர்.

சிறையில் பலரும் மாண்டனர்; அதிலும் லால்குடி பகுதியில் ஜாதி ஒழிப்புக்காக சிறை சென்று மரணித்தவர்கள் அதிகம்! ஆம், லால்குடி கருப்பு மெழுகுவர்த்திகளின் பாசறை!

சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற மாவீரர்களில் இன்னும் ஆறு பேர் அந்தப் பகுதியில் தொண்ணூறு வயதிலும் அதே கொள்கை உணர்வோடு வாழ்ந்து கொண்டுள்ளனர். நேற்றைய மாநாட்டில், அந்த அரும்பெரும் தியாக சீலர்களை மேடையில் அமர்த்தி, கழகத் தலைவர் சிறப்பு செய்த அந்தச் சீர்மையை என்ன சொல்ல!

1957 நவம்பர் 27 – ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு மரணத்தைத் தழுவிக் கொண்ட அவர்களின் – ‘கொள்கை’ வாரிசுகள் கருஞ்சட்டை அணிந்து கொள்கை முழக்கமிட்டுப் பேரணியில் வீறு நடைபோட்டு வந்ததும். நாள் முழுவதும் இரு மாநாடுகளிலும் பங்கு கொண்டதும் கண் கொள்ளாக் காட்சியாகும்.

ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு மாநாட்டில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது! அந்தச் சுயமரியாதைச் சுடர்களை அடையாளப் படுத்தும் வகையில் சுயமரியாதைச் சுடர் படத்தை கழகத் தலைவர் திறந்து வைத்தபோது ‘‘வீர வணக்கம்! வீர வணக்கம்! சுயமரியாதை வீரர்களுக்கு வீர வணக்கம், ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்!’’ என்று மாநாட்டில் பங்கு கொண்டவர்கள் எழுந்து நின்று முழக்கமிட்ட காட்சி அந்த மாவீரர்கள் மரணம் அடையவில்லை – கொள்கையால் நம்மோடு வாழ்ந்து கொண்டுள்ளனர் என்ற உணர்வை ஊட்டியது. மாநாட்டில் ப(வ)டித்த தீர்மானத்தின்படி அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியை ஒழிக்கச் செய்யும் வரை நமது போராட்டம் தொடரும்! தொடரும்!! (மீண்டும் எழுதுவோம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *