கடையநல்லூர், நவ.27 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.
பேருந்துகள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்
ஆதார் ஆணையம் நடவடிக்கை
புதுடில்லி, நவ.27 இந்தியாவில் ‘ஆதார்’ என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்துக்காக வழங்கப்பட்ட அடையாள எண் ஆகும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அடையாள ஆவணமாக இருக்கக்கூடிய ஆதாரில் உள்ள விவரங்களை வைத்து பல வகையான நிதி மோசடிகளும் அரங்கேறுகின்றன. இத்தகைய மோசடிகளை தவிர்ப்பதற்காக பல்வேறு புதுப்பிப்புகளை ஆதார் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அடையாள மோசடியை தடுக்கவும், நலத்திட்டங்களுக்காக ஆதார் எண்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்தவும் மற்றும் தகவல்களை துல்லியமாக வைத்திருக்கவும் ஆதார் ஆணையம் இந்தியா முழுவதும் இறந்த நபர்களின் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை நீக்கி உள்ளது.
இறந்த நபர்களை அடையாளம் காண இந்திய பதிவாளர் ஜெனரல், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பொது வினியோக அமைப்பு மற்றும் தேசிய சமூக உதவி திட்டம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்து இதுதொடர்பான புள்ளி விவரங்கள் பெறப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட ஆதார் எண்கள் வேறு யாருக்கும் மீண்டும் ஒதுக்கப்பட மாட்டாது. ஒருவர் இறந்தவுடன், அது சட்டவிரோதமாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அவர்களின் ஆதார் எண்ணை நீக்குவது அவசியம் என்று ஆதார் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆதார் ஆணையம் ஒரு குடும்ப உறுப்பினரின் மரணம் தொடர்பாக புகார் அளித்தல் என்ற புதிய அம்சத்தை ‘மை ஆதார்’ என்ற இணையதளத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த சேவை தற்போது 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைக்க பணி நடந்து வருகிறது.
