திருச்சி, நவ.27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வாரவிழாவினையொட்டி (16-22, நவம்பர் 2025) மருந்தியல் துறையின் சேவைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் பல்வேறு சமுதாயப் பணிகள் நடைபெற்றது.
ஆய்வுக்கட்டுரை
எழுதுதல் போட்டி
64ஆவது தேசிய மருந்தியல் வாரவிழாவின் மய்யக் கருத்தான “தடுப்பூசியினை நிர்வகிப்பவர்கள் மருந்தாளுநர்களே” என்ற தலைப்பில் இணைய வாயிலான ஆய்வுக்கட்டுரை எழுதுதல் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மருந்தியல் கல்லூரிகளிலிருந்து 26 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
தடுப்பூசி குறித்த சமுதாய விழிப்புணர்வு
அதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்களுக்கிடையே வகையில் துண்டறிக்கைகள் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், கலைஞர் கருணாநிதி நகர் மற்றும் சுந்தர் நகர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் வழங்கப்பட்டது.
சிறப்புக் கருத்தரங்கம்
தேசிய மருந்தியல் வார விழாவின் நிறைவுநாள் நிகழ்வாக 22.11.2025 அன்று மாலை 3 மணியளவில் “தடுப்பூசியினை நிர்வகிப்பவர்கள் மருந்தாளுநர்களே” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார்.

திருச்சி மண்டல மருந்து கட்டுப்பாட்டுத்துறை மருந்து கண்காணிப்பாளரும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேனாள் மாணவியுமான டி.தீபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே மருந்தாளுநர்களின் கடமைகள் குறித்து உரையாற்றினார்.
மேலும் பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயின்றதால்தான் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பதாகவும், தாம் மட்டுமின்றி பல பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் அரசுத்துறையிலும் தனியார் துறைகளிலும் மிகப்பெரிய அளவில் சாதித்து வருவதாகவும் கூறினார்.
எதிர்கொள்ளும் துணிச்சல்
பெரியார் நிறுவனம் கல்வி மட்டுமல்லாது எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையினையும் தந்திருப்பதாகவும் உரையாற்றினார். தடுப்பூசிகளை பொதுமக்கள் சரியான காலத்தில் போட்டுக் கொள்வதால் நோயிலிருந்து மக்களை காக்க முடியும் என்றும் அத்தகைய தடுப்பூசிகளை பாதுகாப்பது அதன் தரத்தை உறுதி செய்வது என பொதுமக்களுக்கு அவை சென்று சேரும் வரை மருந்தாளுநர்களின் கடமை தொடர்கின்றது என்றும் தரமும் பாதுகாப்பும்தான் தடுப்பூசியின் பயனை முழுமையாக அளிக்க வல்லது என்றும் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியினை உதவி பேராசிரியர் எஸ்.பிரியதர்ஷினி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நூலக வாரவிழா
தேசிய நூலக வாரவிழாவினை யொட்டி (14-20, நவம்பர் 2025) மருந்தியல் கல்லூரி கலைஞர் கருணாநிதி நூலகம் “வாசிப்பை சுவாசிப்போம்” என்ற தலைப்பில் சிறந்த வாசகப் போட்டியினை நடத்தியது. இதில் மருத்துவம், பொறியியல், மருந்தியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து 131 பேர் பங்கு கொண்டு தங்களது வாசகங்களை இணைய வழியில் சமர்ப்பித்தனர்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் எஸ். பிரின்சு என்னாரெசு பெரியார் தமிழில் பெறப்பட்ட 74 வாசகங்களில் சிறந்த 5 வாசகங்களையும் ஆங்கிலத்தில் பெறப்பட்ட 57 வாசகங்களில் சிறந்த 5 வாசகங்களையும் தெரிவு செய்தார்.
தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாளில் பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
