துணை முதலமைச்சர் உதயநிதி கூறியதில் என்ன தவறு?

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘‘சமஸ்கிருதம் குறித்து விமர்சித்துள்ள உதயநிதி, ராகுல் கொடுத்துள்ள இத்தாலிக் கண்ணாடியை மாற்றிவிட்டு, இந்திய கண்ணாடியை போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான் எல்லாம் சரியாக தெரியும்’’ என்று பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக் கூறி உள்ளார்.

சென்னையில் பிஜேபி அலுவலகமான கமலாலயத்தில் எஸ்அய்ஆர் சிறப்புத் திருத்தப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பிஜேபி தேசிய பொதுச் செயலாளர் தருண்சுக் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிஜேபி தமிழ்நாடு பொறுப்பாளர் அர்விந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாஜக மேனாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, பிஜேபி தேசிய பொதுச் செயலாளர் தருண்சுக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமஸ்கிருத மொழியை செத்த மொழி என்று துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தருண்சுக் அளித்த பதில் வருமாறு; ‘‘உலகத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பது இந்து மதம். யாருக்கும் எதிரானது இந்து மதம் அல்ல. அந்த மதத்தை பார்த்து ‘டெங்கு கொசு’ என்று சொல்கிறார் என்றால், அவர்(உதயநிதி) போட்டு இருக்கும் கண்ணாடி ராகுல் கொடுத்துள்ள இத்தாலிக் கண்ணாடி. – அந்தக் கண்ணாடியை மாற்றிவிட்டு இந்திய கண்ணாடியைப் போட்டால் எல்லாம் சரியாகத் தெரியும். கண்ணாடியை அவர் மாற்ற வேண்டும்.’’ இவ்வாறு தருண்சுக் பேட்டியளித்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு உதயநிதி கூறியதில் என்ன தவறு இருக்கிறது?

உண்மையைத் தானே சொன்னார் – 146 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் வெறும் 24,821 பேர் தானே! விழுக்காட்டு அளவில் சொல்ல வேண்டுமானால் 0.0002% தான்.

சமஸ்கிருதம் செத்த மொழிதான் என்பதற்கு இந்தப் புள்ளி விவரம் போதாதா?

சமஸ்கிருதத்தைச் சாகடித்தவர்களே, இந்தப் பார்ப் பனர்கள் தானே! சமஸ்கிருதம் ‘தேவபாைஷ’ என்றும் தமிழ் சூத்திராள் பாைஷ, ‘நீஷ மொழி’ என்று எழுத வைத்தவர்கள் யார்?

‘சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும், கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்’ என்று வேத வாக்காக ஆக்கினால், அந்த மொழி பேசுவோர் எப்படி அதிகரிப்பார்கள்?

ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் – இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ் கிருதமே என்று ‘ஞானகங்கை’யில் (Bunch of Thoughts) குறிப்பிட்டுள்ளார்.

இந்துத்துவம் என்பதை உருவாக்கிய சாவர்க்கர் என்ன சொல்கிறார்?

‘‘இந்துக்கள் என்போர் தம் அளவில் ஒரு தேசமாகவும் (Nation), ஜாதி ஆகவும் மட்டுமின்றி, ஒரு பொதுவான சமஸ்கிருதி (Sanskiriti) பண்பாட்டுக்கு உரியவர்கள் – இந்துவின் தாய்மொழி சமஸ்கிருதமே’’ என்றும் வரையறுக்கிறார்.

அந்த வழியில் வந்த ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிஜேபிவாதிகள் சமஸ்கிருதத்தைப்பற்றியோ, ஸநாத னத்தைப் பற்றியோ விமர்சித்தால் முண்டா தட்டுகிறார்கள்.

தேசியக் கல்வி என்ற பெயரால் மூன்றாவது மொழி யாக சமஸ்கிருதத்தைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில்லையா?

0.0002 விழுக்காடு பேசப்படும் சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய பிஜேபி அரசு 2014ஆம் ஆண்டிலிருந்து கொட்டி அழும் தொகை ரூ.2,532 கோடி;  இதே கால கட்டத்தில் தமிழுக்கு அளிக்கப்பட்டுள்ள தொகையோ வெறும் ரூ.147.56 கோடிதான்.

இந்த ஓர வஞ்சனையைச் சுட்டிக்காட்டினால் இந்த சங்பரிவார்க் கும்பலுக்குக் கோபம் கொப்பளிக்கிறது.

‘இத்தாலிக் கண்ணாடி அணிந்து கொண்டு பேச வேண்டாம்’ என்று துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு உபதேசம் செய்கிறார்கள்.

புரிகிறதா? ராகுல்காந்தி சமூகநீதி பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார். ஒன்றிய அரசின் செயலாளர்களில் மூன்றே மூன்று பேர்தானே ஓ.பி.சி. என்று குற்றம் சாட்டு கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் ‘உங்களில் எத்தனைப் பேர் ஓ.பி.சி.?’ என்று கேட்க ஆரம்பித்து விட்டாரே!

இந்த நியாயமான கேள்விக்குப் பார்ப்பனர் பார்வையில் இத்தாலிக் கண்ணாடியாம்!

இந்த உருட்டல் மிட்டலுக்கெல்லாம் அஞ்சுபவர் உதயநிதியல்ல – உண்மையான திராவிடர் இயக்கத்தில் முளைத்து வந்தவர் அவர் – உறுமிப் பார்க்க வேண்டாம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *