உலகில் சமூக – அரசியல் – பொருளாதாரம் என்ற பொது நோக்கில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. நாட்டின் முன்னேற்றத்திற்கு எதிரானவற்றைக் களைந்து – தேவைப்படும் புதிய சிந்தனைகளைச் சிந்தித்து, செயலாக்கி முன்னேற்றப் பாதையில் உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் பயணிக்கின்றன. அதற்கான அரசியல் உருவாகி சமூகப் பொருளாதாரம் வளர்த்தெடுக்கப்படுகிறது.
ஜாதிக்கு அடிப்படை ஸநாதன மதம்
உலகில் உள்ள நாடுகள் அனைத்திற்கும் பொது வான பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் ‘ஜாதி’ எனும் பிரச்சினை இந்திய ஒன்றியத்தைத் தவிர, வேறு எந்நாட்டிலும் இல்லை என்பதே மிக முக்கியமாக சிந்திக்க வேண்டியதாகும். ‘ஜாதித்துவம்’ எனும் கற்பனை; ஆனால், நிலை நிறுத்தப்பட்டுள்ள வலிமையான ஒன்று என்றால் அது பொய்யில்லை.
நம் நாட்டில் மட்டும் உள்ள இந்த ஜாதிக்கு அடிப்படை ஸநாதன மதம். அதன் இன்றைய பெயர் இந்து மதம். இந்த ஜாதி முறை நாட்டிலுள்ள மக்களை ஜாதியின் பெயரில் பிறப்பிலேயே பிரிக்கிறது. இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மமே இதற்கான அடிக்கட்டுமானம். இந்த ஜாதிமுறை கீழிருந்து மேலான பல அடுக்குகளைக் கொண்டுள்ளது.
கீழேயுள்ளவர் ‘தொட்டால் தீட்டு – பார்த்தால் பாவம்’ எனும் ஜாதிப் பிரிவினர். அதே போல் உச்சத் திலுள்ளோர் பார்ப்பனர் (பிராமணர்); இடைப்பட்டவர் சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் பிரிவினர்.
இந்த ஜாதிமுறை அதிலும் ‘மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு’ எனும் மனித உரிமைக்கு எதிரான கொடுமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றே கூற வேண்டும்.
‘ஜாதி’ – ஆரியர்களின்
பண்பாட்டுப் படையெடுப்பு
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து நிகழ்த்திய பண்பாட்டுப் படையெடுப்புமூலம் – திராவிடர்களை அடிமை கொள்ளச் செய்திட்ட சூழ்ச்சிதான் இந்த ஜாதிமுறை. ஜாதி ஆரியர்களுடைய பண்பாடு என்பதற்கு ஆதாரமே அது தமிழ்ச்சொல் அல்ல என்பதும், ‘ஸநாதன மதம்’, ‘வேத மதம்’ என்பவை தமிழ்ச்சொற்கள் அல்ல என்பதுவும் ஆகும்.
ஜாதிக் கொடுமையின் விளைவு சூத்திர, பஞ்சம மக்கள் படிக்கக் கூடாது – மீறிப் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் – காய்ச்சிய ஈயத்தை காதினுள் ஊற்ற வேண்டும் – கூலி பெறாமல் பார்ப்பனர்களுக்குச் சூத்திரர்கள் ஊழியம் செய்ய வேண்டும் – பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் – கணவர் இறந்தால் விதவையாகவே இருக்க வேண்டும் – பெண்களைக் கோயிலில் பொட்டுக்கட்டி விடல் வேண்டும் – தமிழ் அர்ச்சனை மொழியாகவும் தமிழன் கோயிலுக்கு அர்ச்சகராகவும் இருக்கக் கூடாது – கோயிலுக்குள் பார்ப்பனர்கள் மட்டுமே நுழைய வேண்டும் என்பன போன்ற உலகம் எங்கும் காணாக் கொடுமைகள் ஆரியத்தின் பண்பாட்டுப் படையெடுப்பால் திராவிடர்கள்மீது திணிக்கப்பட்டன.
இந்த ஜாதியை எதிர்த்துத் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். இழிவுக்கு காரணமான ஜாதியை ஒழிப்பதே தலையாய நோக்கமாகக் கொண்டு ‘திராவிடர் கழகம்’ போராடத் தொடங்கியது.
சட்ட எரிப்புப் போராட்டம்
‘ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம்’, ‘பிராமணர் பெயர் அழிப்பு’ எனத் தொடங்கி, ஜாதியை அங்கீகரிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்திடும் ‘அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் விரைவில் நடத்தப்படும்’ என அறிவித்தார் தந்தை பெரியார்.
அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால் தண்டனை என்ன என்று இல்லாத நிலையில், தந்தை பெரியார் ‘‘சட்ட எரிப்புப் போராட்டம் 1957 நவம்பர் 26 அன்று தமிழ்நாடெங்கும் நடத்தப்படும்’’ என்று ஆணையிட்டார். அதன்படி ஜாதியை அங்கீகரிக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளின் நகல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டியவை என்று 1957 நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற தஞ்சை தனி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் சட்ட எரிப்புக்கான தண்டனைக்கென அவசரமாகச் சட்டம் இயற்றப்பட்டது.
நான் குற்றவாளி என்று கருதப்பட்டால்…
போராட்டத்தில் கைதாகும் தோழர்கள் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டிய வாக்குமூலம்:
‘‘நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன், இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவில்லை. அச்சட்டத்தை, திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ள அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத் தினேன். இப்படி கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால், எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால், நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.’’
போராட்டத்தில் ஈடுபடும் தோழர்களை இப்படி தயாரித்து பண்படுத்திய கட்டுப்பாடுள்ள இயக்கம் திராவிடர் கழகத்தைப் போல் உலகில் வேறு எங்குமுண்டா?
1957 நவம்பர் 26
தந்தை பெரியாரின் ஆணையை ஏற்று திராவிடர் கழகத் தோழர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்ட உட்பிரிவுகள் 13(2); 25(1); 29(1) (2); 368 ஆகிய அய்ந்தின் நகல்களை 1957 நவம்பர் 26ஆம் நாள் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
ஜாதித் தீயால் ஆண்டாண்டு காலமாய் எரிந்து கொண்டிருந்த தமிழர்கள் – அந்த ஜாதியை அங்கீ கரிக்கும் சட்டப் பிரிவுகளை தீயிட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கினார்கள். 10,000க்கும் மேற்பட்டோர் கொளுத்தினார்கள். ‘2,884 பேர் அரசியல் சட்ட எரிப்பி்ல கலந்து கொண்டதற்காக கைதாகினார்’ என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அன்றைய ஒன்றிய அரசின் உள் விவகார அமைச்சர் பண்டித பந்த் பதிலளித்தார்.
பெரியார் சிறையிலிருந்தபோது…
தந்தை பெரியார் 25.11.1957 ஒரு நாள் முன் கூட்டியே கைது செய்யப்பட்டு மறுநாள் விடுதலை செய்யப்பட்டார். அவர்மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின்படி 14.11.1957 சிறைத் தண்டனை பெற்று 6 மாத தண்டனைக்குப் பின்பு 13.6.1958 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
தந்தை பெரியார் 6 மாத காலம் சிறையிலிருந்த காலத்தில் சிறையேகி இறந்த – சிறையிலிருந்து மீண்டபின் இறந்த – மற்றும் சிறையில் இருந்து கொண்டிருந்த தோழர்களின் வீடுகளுக்கு அன்னை மணியம்மையார் அவர்களும், ஆசிரியர் அவர்களும் நேரில் சென்று அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதலையும் தேவையான உதவிகளையும் செய்து வரலானார்கள். அவர்கள் சந்திப்பில் சிறையேகிய வீரர் – வீராங்கனையின் குடும்பத்தினர் காட்டிய கொள்கைப்பற்றைக் கண்டு வியந்தனர். கண்ணீர் மல்க ஆறுதல் கூறினர்.
இடையாற்றுமங்கலம் நாகமுத்து
இலால்குடி அருகிலுள்ள இடையாற்றுமங்கலம் நாகமுத்து சிறையில் நோயுற்று விடுதலை ஆன இரு மாதத்திற்குள் நோயின் கொடுமையால் இறந்து போனார். மதுரை மாநாட்டிலிருந்து அன்னையாரும் – ஆசிரியரும் விரைந்து வந்து கொண்டிருந்தனர். மழை அதிகமாகப் பெய்ததால் உடல் அடக்கம் முடிந்து விட்டது. மறைந்த நாகமுத்து அவர்களின் மனைவி சீனியம்மாளிடம் ஆறுதல் கூறினர். கணவரைப் பறிகொடுத்த அந்த அம்மையார், ‘‘என் கணவர் போய்விட்டார் என்று கதறி அழவில்லை – இதோ என் மகன் இருக்கிறான். பெரியார் அறிவிக்கும் அடுத்த போருக்கு உயிர் கொடுக்க – நான் இருக்கிறேன். உயிர்த் தியாகம் செய்ய’’ என்று (அழுது புலம்பாமல்) ஆர்ப்பரித்த காட்சியை இவ்வுலகம் கண்டதுண்டா? தமிழ்நாட்டில் தமிழர் வரலாற்றின் வீரம் கூறும் புறநானூற்றில் இதுபோன்று ஒரு காட்சி உண்டே தவிர, வேறு எங்குண்டு? புறநானூற்றுத் தாயை ஒக்கூர் மாசாத்தியார், ‘கெடுக சிந்தை கடிதிவள் துணிவே’ என்றுரைத்தார். ஆனால் இடையாற்று மங்கலம் சீனியம்மாளுக்கு நிகராக எந்தத் தாய்தான் உண்டு.
புவனகிரியில் விசுவராகவன் எனும் மாவீரன். அவருக்குப் பிறந்த குழந்தையைக் காட்ட சிறைக்கு வந்தபோது, பார்க்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டான். இந்த வீரனின் உறுதிக்கு நிகராக உலகம் எதைக்காட்ட முடியும்?
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ் வரத்தைச் சேர்ந்த ‘மொட்டையன்’ என்ற சட்ட எரிப்பு வீரரின் ஒன்றரை வயது குழந்தை இறந்த செய்தி சிறைக்கு வந்தது. ‘செத்துப் போனபின் பார்த்து என்ன வரப்போகிறது?’ என்று பிணையில் வர மறுத்துவிட்ட செய்தியைச் சிறை வரலாற்றில் வேறு எங்கு தேடினாலும் கிடைக்குமா?
‘சிறைப் பறவை’
மயிலாடுதுறையைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி கோவிந்தம்மாளுக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை. அவரோ 6 மாத கர்ப்பிணி அவரது 6 வயது மகளுடன் சிறைக்குச் சென்றார். சிறையில் பெண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு ‘சிறைப்பறவை’ என்று பெயர். அவரது கணவர் கலியபெருமாள் திருச்சி மத்திய சிறைக்குள் நுழையும்போது ‘பெரியார் வாழ்க’ என்று முழக்கமிட்டுச் சென்ற வரலாறு, தியாகம் செய்த குடும்பங்கள் என்று கூறப்படும் குடும்பங்கள் வேறு எங்கேனும் உண்டா?
நீடாமங்கலத்தைச் சேர்ந்த தோழர் ராஜமாணிக்கம் சிறை சென்ற சிறிது நேரத்திற்குள் தாயார் மரணச் செய்தி கிடைத்தது. ஆனால் இவரோ பிணையில் வர மாட்டேன் என்று கூறிவிட்டார். தாய் மரணித்தபோதும் தலைவனின் (தந்தை பெரியார்) ஆணையை நிறைவேற்றிய இந்த தொண்டனை என்னவென்று புகழ்வது?
மன நோயாளியான மனைவி
திருச்சி மாணிக்கம் திருமணமாகி ஒரு வாரத்தில் சிறையேகினார். மனைவி சிறைக்கு வருவதை விரும்பாது ‘‘இனிமேல் வராதே’’ என்று கூறிவிட்டார். மனைவியோ மன நோய்க்கு ஆளானார். விடுதலை ஆகி வந்த மாணிக்்கம் மன நோயாளி மனைவியை பார்த்து கலங்கினார். மன நோயாளியாகவே மனைவி மறைந்தார். மன நோயாளியோடு வாழ்ந்திட்ட மாணிக்கம் ‘கொள்கையில் மாணிக்கமன்றோ!’
திருவாரூர் முத்துகிருஷ்ணன், சிவசங்கரன் மனைவியர் மறைந்த போதும் பரோலில் வராத மாவீரர்கள் அன்றோ?
மீண்டும் கொளுத்துவேன்
இலால்குடி – வாளாடி சிறுவன் பெரியசாமியை கவர்னர் பிஷ்ணுராம்மேதி ‘‘விடுதலை செய்கிறேன்’’ என்று சொன்னபோது, ‘‘நான் போகிறேன் – ஆனால் … தந்தை பெரியார், சட்டத்தை கொளுத்தச் சொன்னால் மீண்டும் கொளுத்துவேன்’’ என்றான். கவர்னர் திகைத்துப் போனார். பெரியார் பெரும்படைச் சிறுவனின் நாணயத்திற்கும் – வீரத்திற்கும் இந்த உலகம் எதை உவமையாகக் காட்ட முடியும்?
கணவரைப் பறிகொடுத்த அந்த அம்மையார், ‘‘என் கணவர் போய்விட்டார் என்று கதறி அழவில்லை – இதோ என் மகன் இருக்கிறான். பெரியார் அறிவிக்கும் அடுத்த போருக்கு உயிர் கொடுக்க – நான் இருக்கிறேன். உயிர்த் தியாகம் செய்ய’’ என்று (அழுது புலம்பாமல்) ஆர்ப்பரித்த காட்சியை இவ்வுலகம் கண்டதுண்டா?
செங்கற்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட சிறுவர்கள் 8 பேர் மணக்கால், லெட்சுமணன், ஆங்கரை தவுஸ், வாளாடி பிரான்சிஸ், பொன்னுசாமி, பெரியசாமி, பேச்சிமுத்து, ரகுநாதன், தஞ்சை புத்தகரம், கோவிந்தராசன் ஆகியோராவர். வரலாற்றில் இன்று வரை அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போர் நடத்திய இவர்களைப் போல் வீர வரலாற்றுக்குச் சொந்தக்கார சிறுவர்கள் உண்டா?
இலட்சியத்திற்காக உயிர்த் தியாகம்
பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி இருவரும் திருச்சி மத்திய சிறையில் மாண்டனர். முதலில் இறந்து புதைக்கப்பட்ட இராம சாமி உடலைத் தோண்டி மீட்டெடுத்து, மூன்றாம் நாள் மாண்ட வெள்ளைச்சாமி உடலோடு இறுதி ஊர்வலம் நடத்தி – வீர வணக்கம் செலுத்திடப் போராடி உடல்களை மீட்டார் அன்னை மணியம் மையார். சிறைக்கு வெளியே அவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன. சட்ட எரிப்புப் போராட்ட வீரனின் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீட்டெடுத்த நிகழ்ச்சி எப்போதும் காணா சரித்திரம்.
சட்ட எரிப்புப் போரில் சிறைக்குள்ளே இறந்தவர்கள் 5 பேர்; சிறைக்கு வெளியே வந்து நோய் வாய்ப்பட்டு இறந்தவர்கள் 13 பேர் – என அரசியல் சட்ட எரிப்புப் போரில் இறந்தோர் மொத்தம் 18 பேர்கள். ஜாதியை ஒழிப்பதற்காக போராடி இலட்சியத்திற்காக உயிர்த் தியாகம் செய்திட்ட இதற்கு நிகரான ஒரு புரட்சிகர அமைப்பு போல் வேறு உண்டா?
‘பெயருக்குப்பின் ஜாதிப் பட்டம்’
ஒரு பெரும் வீர வரலாற்றை உருவாக்கிய ஜாதி ஒழிப்பிற்கான அரசியல் சட்டப் பிரிவுகளின் நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்று இன்றைக்கு 78 ஆண்டுகள் ஆகின்றன. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே வேரோடிய ஒரு பிரச்சினைக்குச் சற்றொப்ப முக்கால் நூற்றாண்டில் விடிவு காண முடியாதுதான் என்றாலும், ஒரு பெரும் மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘பெயருக்குபின் ஜாதிப் பட்டம்’ போட வெட்கித் தலைகுனியும் நிலை உருவாகி விட்டது. இன்று ‘பெயருக்குப்பின் ஜாதிப்பட்டம்’ என்பது முற்றிலும் நீங்கி விட்டது.
ஜாதியின் பெயரால் தடுக்கப்பட்டிருந்த அர்ச்சகர் பணிக்கும் இன்று கதவு திறக்கப்பட்டு விட்டது. எனினும், ஆணவக் கொலைகள் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கத்தான் செய்கின்றன. அதே நேரத்தில் பல ஜாதி மறுப்பு – மத மறுப்பு திருமணங்கள் நாள்தோறும் நடக்கின்றன என்பதே வெற்றியை நோக்கிய பயணமாகும்.
தமிழர் தலைவரால் தொய்வின்றி….
ஜாதியற்ற – பேதமற்ற சமுதாயம் உருவாக்கும் பெரும் பணி இன்றும் தொய்வின்றி தமிழர் தலைவர் – திராவிடர் கழகத் தலைவரால் தொடர்ந்து நடைபெறுகிறது. ஜாதியை ஒழிக்கச் சட்ட எரிப்புப் போரில் 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இலால்குடி போராட்டம் நடைபெற்ற அதே நாளில்… ஜாதி ஒழிப்பு மாநாடாக திராவிடர் கழகத்தால் இன்று (26.11.2025) நடத்தப் பெறுகிறது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் ஜாதியற்ற சமுதாயம் படைக்க ஜாதி ஒழிப்பு மாநாட்டில் உறுதியேற்போம் வாரீர்! ஜாதியின் வேரறுப்போம் வாரீர்! சமத்துவம் படைப்போம் வாரீர்!
