சென்னை, நவ.26- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு நேற்று (25.11.2025) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.
தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் அடிப் படை உரிமைகளைப் பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் ஆகும். கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்குட்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். தமிழ்நாடு அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிவகைகளை உருவாக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 15 (3)-வது பிரிவின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்தமையால், தனது செயல்பாடுகளில், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் அவற்றை செயல்படுத்தி, அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76ஆவது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று (26.11.2025) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார் நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
