சட்ட எரிப்பு சுடரொளிகள் நினைவுப் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
இலால்குடி, நவ. 26- ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 69 ஆம் ஆண்டு வீரவணக்க மாநாட்டில் கழகக் கொடியை, கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். சட்ட நகலை எரித்து சிறை சென்ற கருஞ்சட்டை வீரர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்து கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாநாட்டின் காலை கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இலால்குடி கழக மாவட்டம் சார்பில் பெரியார் திருமண மாளிகையில் 26.11.2025 அன்று காலை 9 மணியளவில், ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 69 ஆம் ஆண்டு வீரவணக்க மாநாடு, நன்னிமங்கலம் பே.கணேசன் மற்றும் இடையாற்றுமங்கலம் இ.ச.தேவசகாயம் ஆகியோரை நினைவூட்டும் விதமாக அவர்களது பெயரில் நினைவரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆ.அங்கமுத்து அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் வால்டேர் தலைமை தாங்கி சிறப்பித்தார். காலை கருத்தரங்கில் சட்ட எரிப்புப் போரில் பங்கேற்று சிறை சென்ற தியாகிகளான திருமங்கலம் வை.மருதை, அங்கமுத்து, கோவிந்தன், மைக்கேல், பிலவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து மரியாதை செய்தும், மாலை மாநாடு நடக்க இருக்கும் கீழவாளாடி பத்மாவதி பேலஸில் மருத்துவ முகாமைத் தொடங்கியும் வைத்தார்.

முன்னதாக இலால்குடி ஆங்கரை பெரியார் குடில் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு பொதுச்செயலாளர் வீ,அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் ஆல்பர்ட், மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, இளைஞரணி மாநிலச் செயலாளர் பொன்முடி, மாவட்டத் துணைத் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து பறை இசை முழங்க, இருசக்கர வாகனங்கள் வழிகாட்ட, மாநாட்டு அரங்கிற்கு பேரணியாக வருகை தந்தனர். கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் முன்னிலையில் சட்டத்தை எரித்து சிறை சென்ற வை,மருதை, அங்கமுத்து, கோவிந்தன், மைக்கேல், பிலவேந்திரன் ஆகியோர் கழகக் கொடியை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பெரியார் பிஞ்சு சித்தார்த்தன் பெரியார் – அவரது தொண்டர் ஆசிரியர் ஆகியோரைப் பற்றி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பொதுச்செயலாளர் வீ,அன்புராஜ், ”ஜாதி ஒழிப்புக்குச் செயலாற்ற வேண்டிய களங்கள்” கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்று உரையாற்றினார். முன்னதாக சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்ற ஆரோக்கியமேரி – பாபு ஆகியோரின் மகள் திராவிடமணி அவர்களுக்கு கழகப்பொதுச்செயலாளர் ஆடையணிவித்து சிறப்பு செய்தார்.

‘‘ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தலும், பாதுகாத்தலும்” எனும் தலைப்பில் பொறியாளர் தேவ.நர்மதா, “ஜாதி மத தலைப்புகளை பாடத்திலிருந்து நீக்குதல்” எனும் தலைப்பில் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, “ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவுகளை நீக்குதல்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, “பகுத்தறிவுக் கொள்கைப் பரப்புரை” எனும் தலைப்பில் இராம.அன்பழகன், “ஜாதி மத வெறியூட்டும் அமைப்புகளை தடைசெய்தல்” எனும் தலைப்பில் இரா.பெரியார் செல்வன், “ஆகமக் கோயில்கள் உட்பட அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குதல்” எனும் தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றினர்.

மாநாடு தொடக்கத்தில் புள்ளம்பாடி பொற்செழியன் குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
