கோவை, நவ.25- கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.11.2025) திறந்து வைக்கிறார்.
இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அமைதிப் பூங்காவில் உருவாகும் அழகியப் பூங்காக்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்
பூங்காக்கள் பூக்கள் நிறைந்திருக்கும் இடம் மட்டுமல்ல, மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இடம். குழந்தைகளுக்குக் குதூகலம் தரும் குருகுலம். நடைபயிற்சி மூலம் உடல்நலத்தைக் காக்கும் இயற்கை மருத்துவமனை. மனதின் பாரம் இறங்கும் இடம்.
நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் சந்தித்துக்கொள்ள உதவும் ஜங்ஷன். கனவுகள் பறக்கும் வனம் என நிறைய நன்மைகளை விதைக்கும் விளை நிலமாக இருக்கிறது பூங்காக்கள். அதனால் தான் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் அதே நேரத்தில் பூங்காக்களையும் பூக்க வைத்து வருகிறோம்.
கோவை செம்மொழிப் பூங்கா
கோவை செம்மொழிப் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்போகும் நேரத்தில் என் இதயத்தில் மகிழ்ச்சிப்பூக்கள் பூக்கின்றன. இவை இயற்கையின் அடையாளங்கள் மட்டுமல்ல. இன்றைய மனிதனின் அன்றாடத் தேவையாக இருக்கின்றன. இதனை இன்றைய தலைமுறையும் உணர்ந்தே இருக்கிறது என்பதை நான் அறிவேன்.
தமிழ்நாடு அமைதிப்பூங்கா மட்டுமல்ல, புத்தகப்பூங்கா, ஜவுளிப் பூங்கா, தொழில் பூங்கா, டைடல் பூங்காக்களால் நிரம்பியவை.
தி.மு.க. ஆட்சியில் பூங்காக்கள்
சென்னையில் செம்மொழிப் பூங்கா, தொல்காப்பியப் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா, அண்ணாநகர் பூங்கா என பல, பல பூங்காக்களை உருவாக்கியது தி.மு.க. ஆட்சிதான்.
2021இல் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சென்னை மாநகராட்சியில் 704 பூங்காக்களும் 610 விளையாட்டு அரங்குகளும் இருந்தன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்த 4½ ஆண்டு காலத்தில் 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்குகளும் என உயர்ந்திருக்கிறது.
4½ ஆண்டு காலத்தில் சென்னையில் மட்டும் ரூ.81 கோடி செலவில் 204 பூங்காக்கள் புதிதாக அமைக்கப் பட்டுள்ளன. ரூ.24 கோடி செலவில் 37 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டன. ரூ.8 கோடியில், 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2025-2026ஆம் நிதியாண்டில் ரூ.60 கோடியில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
அ.தி.மு.க.வின் 10 ஆண்டு ஆட்சியில் தொல்காப்பியப்பூங்கா எந்த கவனிப்பும் இல்லாமல் இருந்தது. 2021இல் தி.மு.க. அரசு அமைந்த பிறகு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலமாக ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மய்யம் மற்றும் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், திறந்தவெளி அரங்கம், இணைப்புப்பாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவைக் கடந்த மாதம்தான் நான் திறந்து வைத்தேன். அந்தத் தொல்காப்பியப் பூங்காவைப் பார்க்க மாலை நேரத்தில் வாசலில் பல நூறு பேர் காத்திருப்பதைப் பார்க்கிறோம். புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவிற்குள் சென்று வந்தவர்கள் அந்த களிப்பை காணொலிகளாக அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.
மலர்க் கண்காட்சி
சென்னை மாநகரை எழிலூட்டி சிங்காரச் சென்னையாக மேம்படுத்தும் முயற்சியில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே 8 ஏக்கர் பரப்பில் செம்மொழிப் பூங்கா 2010 நவம்பர் 24ஆம் தேதி கலைஞரால் திறக்கப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்காவை சென்னையிலேயே பார்க்க முடியும் என்ற அளவுக்குச் செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டது.
கலைஞர் உருவாக்கிய அந்தச் செம்மொழிப் பூங்காவைத் திராவிட மாடல் அரசு 2.0வாக மாற்றியது. 2021இல் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தோட்டக் கலைத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இங்கே மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டி மலர்க்காட்சிக்குக் கூடும் கூட்டத்தைப் போலச் செம்மொழிப் பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர்க் கண்காட்சிக்கு அலை அலையாய் மக்கள் வருகிறார்கள்.
திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு செம்மொழிப் பூங்கா அமைந்த அதே கதீட்ரல் சாலையின் எதிரே ரூ.46 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவை 2024 அக்டோபரில் நான் திறந்து வைத்தேன். அந்த இடம் தற்போது சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் என்னால் அறிவிக்கப்பட்ட இந்தப் பூங்கா மிகக் குறுகிய காலத்திலேயே உருவாக்கப்பட்டது இன்னொரு சாதனை.
கிண்டியில் சுற்றுச்சூழல் பூங்கா
இதுதவிர சென்னையில் சுற்றுச் சூழல் பூங்கா ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சென்னை கிண்டியில் 118 ஏக்கரில் பல்வேறு இயற்கை சார்ந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்காவைத் திராவிட மாடல் அரசு அமைத்து வருகிறது.
அதன் பணிகளை இரண்டு வாரம் முன்புதான் தொடங்கி வைத்தேன். மழைநீரைச் சேகரிக்கும் வகையிலும் சென்னையின் மய்யப்பகுதியைப் பெரும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும் இந்தப் பூங்காவில் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இன்னொரு மைல் கல்லாக உருவெடுத்து நிற்கிறது திறப்பு விழாக் காணும் கோவை செம்மொழிப் பூங்கா.
கடையேழு வள்ளல் சிலைகள்
காந்திபுரம் மத்தியச்சிறைச்சாலை பகுதியில் 45 ஏக்கரில் செம்மொழிப் பூங்கா அமைக்கக் கடந்த 2023 டிசம்பரில் அடிக்கல் நாட்டினோம். ரூ.214.25 கோடி மதிப்பீட்டில் செயற்கை மலைக்குன்றுகள், அதன் ஊடே நீர்வீழ்ச்சி, கடையேழு வள்ளல்களின் சிலைகள், 23 வகையான பூந்தோட்டம், ரோஜாச் செடிகள், வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அரிய வகை மரங்கள், 1,000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதியுடன் மாநாட்டு மய்யம், உணவகம், விசாலமான நடைபாதைகள், புல்வெளிகள், ஓய்வுப் பகுதிகள், சிறுவர் விளையாட்டு அமைப்பு, வாகனங்களை நிறுத்தும் வளாகம் எனப் பல வசதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கோவை செம்மொழிப் பூங்கா.
இயற்கையுடன் வாழ்வோம்
கோவையில் மாநாடு நடத்தி செம்மொழிக் கனவை நிறைவேற்றினார். கலைஞர். உலகத் தமிழ் செம்மொழியின் தனித்துவத்தையும் வரலாற்றுப் பெருமையையும் பிரதிபலிக்கும் வகையில் செம்மொழி மாநாடு நடந்த மண்ணில் செம்மொழிப் பூங்காவை உருவாக்கியிருக்கிறோம். இந்தச் செம்மொழி பூங்கா கலைஞர் முன்வைத்த திட்டம். இந்தச் செம்மொழிப் பூங்கா, கோவையின் புதிய அடையாளமாக மாறும்.
கோவைக்கு வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்க நினைப்போர் இருக்கும் சூழலில், செம்மொழிப் பூங்கா, பன்னாட்டு கிரிக்கெட் மைதானம், பெரியார் அறிவு சார் மய்யம் என கோவையில் பல சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். வாக்களித்த மக்கள் வருந்தாத அளவிற்கும். வாக்களிக்காதவர்கள் ‘தவறு செய்துவிட்டோமோ’ என்று வருந்தும் அளவிற்கும் ஆட்சியை நடத்தி வருகிறோம்.
தமிழ்நாடு அனைவருக்குமான பூங்கா. இங்கு எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும். தமிழ்நாடு அமைதிப் பூங்கா. வளர்ச்சிப் பூங்கா. மக்கள் அனைவருக்குமான பூங்கா. இயற்கையுடன் வாழ்வோம். இனிய பயணத்தைத் தொடர்வோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
