சென்னை, நவ. 25- பீகார் வெற்றி தமிழ்நாட்டில் எடுபடாது என்றும், தமிழ்நாடு மக்கள் தேர்தல் ஆணையத்திடம் தோல்வி அடைய அனுமதிக்க மாட்டோம் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
அய்வர் குழு ஆலோசனை
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சு வார்த்தை நடத்த மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேசிய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் அடங்குவர்.
இந்த அய்வர் குழு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் (23.11.2025) ஆலோசனை நடத்தியது. அப்போது காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன? எந்தெந்த தொகுதிகளில் வலுவாக உள்ளது? தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களை கேட்டுப் பெறுவது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
அனுமதிக்க மாட்டோம்
கூட்டத்திற்கு பின்னர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்தோம். தமிழ்நாடு காங்கிரஸ் தற்போது பல்வேறு விதங்களில் வலுவாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வாக்கு திருட்டுக்கு எதிராக 1 கோடியே 14 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். எங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்து ஆலோசித்தோம். கூட்டணி கட்சியுடன் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும், தேர்தல் களத்தில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசித்தோம்.
பீகார் வெற்றி என்பது தேர்தல் ஆணையத்தின் வெற்றி. தேர்தல் ஆணையம் பீகார் மக்களை தோல்வி அடையச் செய்துள்ளது. தமிழ்நாட்டில் அது எடுபடாது. தமிழ்நாடு மக்கள் தேர்தல் ஆணையத்திடம் தோல்வி அடைய வருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்தகுழுவினர் கட்சியின் மேனாள் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.
