சென்னை, நவ.24– சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் இயங்கும் கடைகள், உணவகங்களில் குறைத் தீர்க்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே கடந்த வாரம் தொடங்கியது. அதன்படி உணவுப் பொருட்கள் தரமில்லாவிட்டால் கியூஆர் குறியீடு மூலம் புகார் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. இதன்மூலம் தரமற்ற உணவை விற்ற ஓர் உணவக ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தரமற்ற உணவுப் பொருட்கள்
ரயில் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தரமில்லாமல் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்கள் மீது புகார் செய்ய கியூஆர் குறியீடு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த கியூஆர் குறியீடுகள் ரயில் நிலைய உணவகங்கள் மற்றும் கடைகளில் இடம் பெற்றிருக்கும். பயணிகள் உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்வதையும், கருத்துகளை பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.
அதிகக் கட்டணம் வசூலித்தல், சேவையில் குறைபாடு, உணவின் மோசமான தரம், குறைவான அளவு, சுகாதாரமற்ற தண்ணீர் உள்ளிட்டவை தொடர்பான எந்தவொரு குறைகளையும் இதில் பதிவு செய்யலாம். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் அமைந்து உள்ள ஒரு சில கடைகளில் உணவின் தரம் மோசமாக இருப்பதாகவும், அதிக விலை வசூலிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.
கியூஆர் குறியீடு
ரயில்வே அதிகாரிகள் சரிபார்த்ததில் புகார்கள் உண்மையானவை என்பதை கண்டறிந்து கடைகளின் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்துள்ளனர். சென்னை கோட்டத்தில் உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும் 50 கடைகள் உள்ளன. கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகளுக்கு அந்த கடையின் இருப்பிடம் மற்றும் நிலைய குறியீடு பற்றிய விவரங்கள் வழங்கப்படுகின்றன. ஸ்கேன் செய்தவுடன், அவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து அனுப்பலாம்.
புகார் பதிவு செய்யப்பட்ட வுடன், புகார்கள் தொடர்பான எச்சரிக்கைகள் உடனடியாக அந்தந்த ஆய்வாளர்கள் மற்றும் ரயில் நிலைய மேலாளர்களுக்கு அனுப்பப்படும். இதனால் அவர்கள் பிரச்சினைகளை உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
உணவுப் பொருட்களின் மீது அதிகக் கட்டணம் வசூலிப்பதை தடுப்பது மட்டுமல்லாமல், கடைகளில் போலி உணவுப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும் உதவும் என்பதால் இந்த முயற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
