கோபி, ஈரோடு கழக மாவட்டங்கள் சார்பில், ‘பெரியார் உலக’ நிதியாக
ரூ. 26,41,111/-அய் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்
‘‘உங்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டால், உங்கள் குடியுரிமையும் பறிக்கப்படும்!’’
கோபி, நவ.24 எதிர்ப்பு என்பது திராவிடர் இயக்கத்திற்கும், ‘திராவிட மாடல்’ அரசுக்கும் உரம் போன்றது. எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெறுவது திராவிடர் இயக்கத்தின் திறம் என்று கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற மாநாடு போன்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கொள்கை எதிரிகளுக்குப் பதிலடி கொடுத்தார்.
மொடச்சூர் சாலை, ஜியோன் திரையரங்கம் அருகில் நேற்று (23.11.2025) மாலை 6 மணியளவில், “பெரியார் உலகம்” நிதியளிப்பு விழா மற்றும் ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைப் பயணத்திற்கான பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகள் கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையேற்று உரையாற்றினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். பெரியார் பெருந்தொண்டர்கள் இரா.சீனிவாசன், பெ.இராஜமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம், மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம், மாவட்டத் துணைத் தலைவர் பொன்.முகிலன், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம், மாவட்டத் துணைச் செயலாளர் ஜி.கே.மூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ.குப்புசாமி ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
ஒரு மாநாடு போல….
பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இலேசான தூறல் இடைவெளியில்லாமல் சிந்திக் கொண்டே இருந்தது. சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்த மாவட்டத் தலைவர் சென்னியப்பன், எவ்வளவு மழை பொழிந்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடந்தே தீரும் என்று, கடைசி நேரத்தில் மேடையையும் இணைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மேற்கூரையை அமைத்து. பொதுக்கூட்ட நிகழ்விற்கு ஒரு மாநாடு போன்ற தோற்றத்தைக் கொடுத்துவிட்டார். கூட்டமும் திட்டமிட்டதைப் போன்றே சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பெரியார் காண விரும்பிய உலகம் எது?
பெரியார் உலகம் என்று சொல்ல வேண்டுமானால், அது வெறும் 95 அடி உயர சிலை – 60 அடி பீடம் – மொத்தம் 155 அடி உயர கட்டுமானம் என்பது மட்டுமல்ல. திருச்சி சிறுகனூரில் 27 ஏக்கரில் அமையவுள்ள அந்த பெரியார் உலகம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய அளவுக்கு சிறப்பானது. திராவிடர் இயக்கம் இதுவரை என்ன செய்தது என்பதை ஒரு நாள், இரண்டு நாள் தங்கியிருந்து பார்க்கக் கூடிய வகையில் அமையவுள்ளது. நம்முடைய முதலமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை பெரியார் உலகத்திற்கு வழங்கி, எங்களையெல்லாம் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். அதன்பிறகு மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்கள் மனம் உவந்து தருகிறார்கள். தந்தை பெரியார் அவர்களுக்கு 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறோம். 150 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாளில், “பெரியார் உலகம்” பெரும் பணிகள் முடிந்து திறக்கக் கூடிய அளவில் வாய்ப்புகள் இருக்கின்றன.
பெரியார் உலகம் என்பது வெறும் கட்டடமல்ல. ஒரு நல்லாட்சி அமைந்து, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று வந்தால், அதுதான் பெரியார் காண விரும்பிய உலகம்! பெரியார் உலகத்தை நாம் நிறுவிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெரியார் காண விரும்பிய உலகம் எது? ஜாதியற்ற உலகம்! பேதமற்ற உலகம்! பெண்ணடிமை நீங்கிய உலகம்! மூடநம்பிக்கையற்ற உலகம்! எனவே, பெரியாருடைய பணியினால் நாம் எப்படி பெரியார் உலகத்தை பார்க்கிறோம் என்பது ஒரு பக்கம். அதேசமயம் பெரியார் காண விரும்பிய உலகத்தை படைத்து விட்டால் யாருக்கும் தொல்லை இல்லை.
காங்கிரஸ் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.வி.சரவணன், தி.மு.க.அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், தி.மு.க. கோபி நகர் மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ், தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், தி.மு.க. மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் கோ.வெ.மணிமாறன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பெ.பொன்னுச்சாமி, நம்பியூர் காமராஜ் கல்வி நிறுவனங்கள் தலைவர் என்.கே.பாஸ்கரன், ஈரோடு மாவட்டத் தலைவர் நற்குணன், மாவட்டச் செயலாளர் மணிமாறன், குருவரெட்டியூர் சத்தியமூர்த்தி, தி.மு.க. மகளிரணி அ.சரண்யா, ஈரோடு அனிச்சம் கனிமொழி, நம்பியூர் என்.சி.சண்முகம், நம்பியூர் சண்முகசுந்தரம், தமிழ்ப்புலிகள் கட்சிப் பொறுப்பாளர் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்தி உரையாற்றினர். அதைத் தொடர்ந்து கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார்.
பெரியாரால் பயன்பெற்ற அனைவரும்…
கழகத் தலைவர் உரைக்கு முன்னதாக, தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில், பெரியாரால் பயன்பெற்ற அனைவரும் பெரியார் உல கத்திற்கு அவரவர்களால் எவ்வளவு முடியுமோ அதை வழங்க வேண்டும். அவ்வளவு முக்கியமானது ‘பெரியார் உலகம்’ என்று குறிப்பிட்டார்.
கோபியில்,
அனைவரின் கவனத்தை ஈர்த்த கழகக் கொடிகள்!
நேற்று (23.11.2025) அன்று கோபிசெட்டி பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாவட்டத்தின் சார்பில் நிகழ்ச்சியை நன்றாக விளம்பரப்படுத்தும் விதத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக, புதிய உத்தியாக கேடயத்தின் மீது இரண்டு வாட்கள் குறுக்கே வைத்தது போன்று, முக்கிய சாலைகளின் நடுவில் இரண்டிரண்டு கழகக் கொடிகள் வைக்கப்பட்டு, கவனத்தை பளிச்சென்று ஈர்த்தன. 10 அடி உயர வட்டத்தில் 360 டிகிரியில் ஆரம் போல கழகக் கொடிகள் வைக்கப்படுவது வழமை தான் என்றாலும், அதன் நடுவில் உள்ள வாசகங்களான, ‘‘சலிப்பே அறியாத சரித்திரமே”, “பெரியாரை உலக மயமாக்கிவரும் பேராசானே”, “தங்கத்தால் எடை போடப்பட்ட தங்கத் தலைவரே”, ”தமிழர் தலைவரே”, “தமிழர்களின் தலைமை வழிகாட்டியே”, “தகைசால் தமிழரே”, “சமூகநீதிக் காவலரே”, “93 வயது இளைஞரே” என்று திராவிடர் கழகத் தலைவரை வருக! வருக! என்று வரவேற்றிருந்த வாசகங்கள் கவனத்தைக் கவ்வின.
இதுவரை இல்லாத அளவுக்கு மேடைக்கு அருகில் 35 அடி உயர 20 இரும்புக் கம்பங்களில் 15 அடியில் மா…பெரும் கழகக் கொடிகள் பறந்து, புருவங்களை உயர்த்த வைத்தன. மேலும் மாவட்டம் முழுவதும் நிகழ்ச்சியை முரசறையும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. அத்தோடு எப்போதும் போல் கட்டப்படும் கழகக் கொடிகளும் காணும் இடங்களில் எல்லாம் தென்பட்டன.
முன்னதாக கோபிசெட்டிபாளையம் மாவட்டத் தலைவர் பெரியார் உலகம் நிதி அளித்தவர்கள் பட்டியலை வாசித்தார். வரிசையாக வந்து கழகத்தலைவரிடம் காசோலையை மகிழ்ச்சியுடன் வழங்கினர். கோபி செட்டிபாளையம் மாவட்டம் சார்பில் ரூபாய் 14,35,000/- வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைமை செயற்குழு உறுப்பினர் ஈரோடு த,சண்முகம் நிதி அளித்தவர்கள் பட்டியலை வாசிக்க, உரியவர்கள் மேடையேறி வந்து கழகத் தலைவரிடம் பெரியார் உலகம் நிதிக்கான காசோலையை வழங்கிச்சென்றனர். ஈரோடு மாவட்டம் சார்பில் வழங்கப்பட்ட நிதி ரூபாய் 12,06,111/- ஆகும். இரண்டு மாவட்டங்களும் சேர்ந்து ரூபாய் 26,41,111/- ஆகும். அத்துடன் மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் ப.திலகவதி 10 க்கும் மேற்பட்ட பெரியார் பிஞ்சுகளுடன் மேடையேறி, கழகத் தலைவரிடம் 10 பெரியார் பிஞ்சு இதழுக்கான சந்தா தொகையை வழங்கினார். மேடையை நிர்வகித்துக் கொண்டிருந்த கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், “திராவிடர் கழகத்தின் குடும்பத்தினர் மட்டும், எல்லோரும் சந்தா செலுத்தி தங்களின் குழந்தைகளின் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளலாம். எதிர்காலத்தில் பாசிச சக்திக ளிடம் அவர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு இது பயன்படும் என்று குறிப்பிட்டார். நிறைவாகக் கழகத் தலைவர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கழகத் தலைவர் தமது உரையில், மழையின் அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டும் வண்ணம், ‘‘கொட்டும் மழையானாலும், கொளுத்தும் வெய்யிலானாலும் கொள்கைப் பிரச்சாரம் நடந்தே தீரும்” என்று பலத்த கைதட்டலுடன் தொடங்கினார். கோபி மாவட்டத் தலைவர் கடுமையாக உழைத்திருப்பதையும், ஈரோடு – பெரியார் மாவட்டம். ஆகவே பெரியார் உலகத்திற்கு ஒரு கோடி ரூபாய் அடுத்தடுத்து திரட்டி வழங்குவோம் என்று உறுதியளித்ததை சுட்டிக்காட்டி பாராட்டினார். தொடர்ந்து, ’நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பே தவிர, கொடுத்தவர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணமே ஆகும்’ என்று பெரியார் சொன்னதை நினைவூட்டி விட்டு, “நாங்கள் எதிர்பார்க்காலமேயே பெரியார் உலகத்திற்கு சிறப்பாக நிதி அளித்துள்ளீர்கள். அதற்கு எமது தலை தாழ்ந்த நன்றி” என்றார். பெரியார் உலகம் என்பது, கி.மு. – கி.பி. என்பது போல், தமிழ்நாட்டின் பெ.மு. – பெ.பி. (பெரியாருக்கு முன் – பெரியாருக்குப் பின்) என்ற வரலாற்றைச் சொல்லும் என்றார்.

மேலும் அவர், “ஏன் இவ்வளவு மக்கள் பணி செய்தும் ‘திராவிட மாடல்’ அரசை வீழ்த்த நினைக்கிறார்கள்? ஏன் நிதியைத் தர மறுக்கிறார்கள்? ஏன் மெட்ரோ திட்டத்தை மறுக்கிறார்கள்? ஏன் நம்முடைய முதலமைச்சர் நாள்தோறும் எதிர்நீச்சல் அடிக்க வேண்டி இருக்கிறது?” என்று கேள்விகளை அடுக்கி, “இவர்களால் அல்லவா ஜாதி ஒழிந்து கொண்டிருக்கிறது; இவர்களால் அல்லவா பெண்ணடிமை ஒழிந்து கொண்டிருக்கிறது என்கிற அச்சம் தான் காரணம்” என்று தான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுத்தார்.
எதிர்நீச்சல் அடித்து
வெற்றி பெறுவதுதான் நமது திறம்!
தொடர்ந்து அவர், “திராவிடர் இயக்கத்துக்கு, ‘திராவிட மாடல்’ அரசுக்கு எதிர்ப்பு என்பது உரம் போன்றது! அதில் எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெறுவதுதான் நமது திறம்” என்றார். “அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லிவிட்டோம். அதுதான் இப்போது பிரச்சினை. காரணம் மனுதர்மம் இதை கடுமையாக எதிர்க்கிறது. அது இன்னார்க்கு இன்னதுதான் என்கி றது. ஜாதி தர்மம் இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் சென்றிருக்கிறது. அதனால்தான் பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார்” என்று சொல்லிவிட்டு, ஜாதி ஒழிப்பிற்கு திராவிடர் இயக்கம் சமூகநீதியை எவ்வாறெல்லாம் கட்டிக் காத்துக்கொண்டிருக்கிறது என்கின்ற வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னார்.
‘திராவிட மாடல்’ அரசு மின்சாரம் போன்றது; மின்மினிப் பூச்சிகளால் எதுவும் செய்துவிட முடியாது!
அந்த சமூகநீதிக்கு தற்போது ஓட்டுத்திருட்டு மூலம் ஆபத்து வந்துள்ளதை சுட்டிக்காட்டி, அனைவரும் அவ ரவர் வாக்குகளை தவறாமல் சரிபார்த்துக் கொள்ளுங்கள். தற்போது உங்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டால் அடுத்து உங்கள் குடியுரிமை பறிக்கப்படும் ஆபத்து இருக்கிறது என்று எச்சரித்தார். அதைத் தொடர்ந்து அவ்வளவு சுலபத்தில் பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதை குறிப்பிடும் வகையில், “திராவிட மாடல் அரசு மின்சாரம் போன்றது. மின்மினிப் பூச்சிகளால் எதுவும் செய்துவிட முடியாது” என்று எச்சரித்து, “மீண்டும் திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்வது, எங்களுக்காக அல்ல, உங்களுக்காக; உங்கள் சந்ததிகளின் எதிர்கால நன்மைக்காக” என்று தமது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மா.சூர்யா நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
நிகழ்ச்சியில் தி.மு.க. தோழர்கள் எஸ்.ஏ.முருகன், எம்.எஸ்.சென்னிமலை, பவானிசாகர் பேரூராட்சித் தலைவர் தூ.அ.மோகன், பெரியகொடிவேரி பேரூராட்சித் தலைவர் தமிழ்மகன் சிவா, காசிபாளையம் பேரூராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல், வாணிப்புத்தூர் பேரூராட்சித் தலைவர் டி.எம்.சிவராஜ் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், மகளிரணி, இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தோழர்கள், பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
