அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக, பல வகையான தோல் சார்ந்த பிரச்சினைகள் வருவது, விடு முறை காலமான கோடையில் தான்.
வியர்க்குரு, அரிப்பு, எரிச்சலுடன் கூடிய சிறிய மணல் துகள்களை போன்ற தடிப்புகள், கட்டிகள், வியர்வை சுரப்பியை மூடக்கூடிய தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள்.
முகம், உடலில் ஏற்படும் பருக்கள், அதிக வியர்வையால் ஏற்படும் பூஞ்சை தொற்று, தோல் மடிப்பு பகுதிகளில் பாக்டீரியா தொற்று உருவாகி, துர்நாற்றத்தை தருவது, புற ஊதா கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் எரிச்சல், சின்னம்மை, தட்டம்மை போன்ற வைரஸ் தொற்று கள், பொதுவாக வரும் பிரச்சினைகள்.
கொசு உட்பட சிறு பூச்சிகள், வண்டுகள் எல்லாம் கோடையில் தான் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் வரும். அதனால் கடிபட்டு, தோல் சிவந்து, எரிச்சலுடன் நீர் கோர்த்த கட்டிகள் வருவது சகஜம். இது தவிர, ஏற்கெனவே இருக்கும் தோல் நோய்களின் பாதிப்பு, அதிக உஷ்ணத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உடலை இறுக்காத சுத்தமான பருத்தி ஆடைகள் அணிவது, பாக்டீரியா தொற்றை நீக்கி, குளிர்ச்சியாக இருக்க தினமும் இரண்டு வேளை குளிப்பது, வாசனை இல்லாத மென்மையான கிரீம்கள், லோஷன்கள் உபயோகிப்பது, வெயில் குறைவாக இருக்கும் காலை, மாலை வேளைகளில் திறந்தவெளியில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது, கோடை தரும் பொதுவான பாதிப்புகளை குறைக்க உதவும்.
நீச்சல் குளத்தில் உள்ள நீரில் அதிக அளவு குளோரின் இருக்கும். இதனால் தோல் வறண்டு, கறுத்து விடும் அபாயம் உள்ளது.
எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குளிப்ப தற்கு முன், கிரீம்களை உடல் முழுதும் தடவிய பின், குளத்தில் குளிக்க வேண்டும். குளித்த பின், உடனடியாக நல்ல தண்ணீரில் மென்மையான சோப்பு, ஷாம்பு போட்டு குளித்து விட வேண்டும்.
கோடையில் வரும் தோல் பிரச்சினைகளுக்கு, வெப்பத்தால் தான் என்று நாமாகவே கிரீம்கள், களிம்புகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. இது, பிரச்னையை அதிகப் படுத்தும். உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.