நமது அருமைத் தோழர் கவிப்பேரருவி
ஈரோடு தமிழன்பன் தமது 92ஆம் வயதில் நேற்று (22.11.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரின் இழப்பு எளிதில் ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பாகும்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பரம்பரை என்று போற்றத் தகுந்த கவிஞர்களுள் முதல் வரிசையில் திகழ்ந்தவர். முற்போக்குச் சிந்தனையாளர்! இன உணர்வாளர்! சமூகநீதியாளர்! மானுடநேயர்!
சென்னிமலையில் பிறந்தாலும், எந்தச் சிறப்பைப் பெற்றாலும், எந்த விருதினை ஏற்றாலும் அவை அத்தனையும் ‘ஈரோட்டுப் புகழே’ என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தன்னுடைய பெயருக்கு முன்னால், ஈரோட்டை இணைத்துக்கொண்டு, வெறும் பெயரோடு என்றில்லாமல், அந்த உணர்வோடு கலந்துவிட்ட பெரியார் பற்றாளர், அற்புதமான ஒப்பற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்; மறைந்த பெரும்புலவர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களின் மாணவர் ஆவார். நம் இயக்கத் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில், கவியரங்குகளில் பங்கு கொண்டும், கவியரங்குகளுக்குத் தலைமையேற்றும் மகிழ்ந்தவர்!
மரபுக் கவிதையில் தொடங்கி நவீன புதுக்கவிதை முறைக்கு முன்னோடியாகப் பாதை அமைத்தவர். ஏராளமான கவிஞர்களை உருவாக்கியவர்; இளந் தலைமுறைக் கவிஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது’, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ‘உலகத் தமிழ்ப் பீட விருது’ போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றவர்.
இவரின் படைப்புகள் 90க்கும் மேற்பட்ட கவிதை உரைநடைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. ‘வணக்கம் வள்ளுவ’ என்ற கவிதைப் படைப்பு நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
உலகின் பல நாடுகளுக்கும் பயணித்து, கவிதைச் சிறகை விரித்தவர். தொலைக்காட்சியில் முதல் முறையாக நற்றமிழைப் பரவ விட்டவர்.
சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய கலைமாமணி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு சாந்தகுமாரி என்ற வாழ்விணையரும், பாப்லோ நெருடா (டாக்டர்) (சிலி நாட்டின் உலகப் புகழ் பெற்ற கவிஞரின் பெயர் இது), பாரதிதாசன் (டாக்டர்) ஆகிய இரு மகன்களும் உண்டு.
அவரின் மறைவு தனியொரு குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு அல்ல; தமிழுக்கு, சுயமரியாதை இயக்கத்துக்கு ஏற்பட்ட இழப்பு; தமிழ்க் கவியுலகம் தலைமையை இழந்திருக்கிறது. தனித்தன்மையான சிந்தனையாளரை, நண்பரை நாம் இழந்திருக்கிறோம். நேரடி இழப்பை எதிர்கொண்டுள்ள அவரின் குருதிக் குடும்பத்திற்கும், தமிழ்கூரும் நல்லுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், கவிஞர்களுக்கும், கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை தலைவர்,
22.11.2025 திராவிடர் கழகம்
