ஈராண்டு சாதனை; இணையற்ற சாதனை
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று, நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஈராண்டிலேயே இணையற்ற சாதனைகளை படைத்து, 200 ஆண்டுகள் மலரும் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மறைந்த கலைஞர் கருணாநிதி, “சொன்னதை செய்வேன்; செய்வதைத்தான் சொல்வேன்” என்பார். ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் சொன்னதையும் செய்வேன்; சொல்லாததையும் செய்வேன்; சொல்லாமலும் செய்வேன்” என்ற வகையில், தேர்தல் அறிக்கைகளில் சொல்லாத பல திட்டங்களையும் வெற்றிகரமாக மக்களுக்காக நிறைவேற்றி வருகிறார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அவர் 505 வாக்குறுதிகளை அளித்திருந்தார். இந்த 2 ஆண்டுகளில் அவற்றில் 80 சதவீதத்துக்கு மேலான வாக்குறுதிகளை நிறைவேற்றியதே முதல் சாதனையாகும். அவர் பொறுப்பேற்ற நேரத்தில், கொடிய கரோனாவின் தாக்கத்தால், பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தது. அந்த நேரத்திலும், அவர் 2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.75 லட்சம் கோடி பொருளாதார நாடாக மாற்றுவேன் என்று சூளுரைத்தார். பள்ளத்தில் இருந்த தமிழக அரசின் நிதி நிலையையும், தமிழகத்தின் பொருளாதார நிலையையும் மீட்டெடுக்க பல புதுமையான திட்டங்களை நிறைவேற்றினார்.
அவர் பதவியேற்ற நேரத்தில், தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 3.28 சதவீதமாகவும், நிதிப் பற்றாக்குறை 4.61 சதவீதமாகவும் இருந்தது. இந்த பற்றாக்குறைகள் 3 சதவீதத்துக்கு மேல் இருந்தால், மாநிலத்தின் பொருளாதாரம் சீராக இல்லை என்று பொருள் கொள்ளலாம். இந்த இரு ஆண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் தேவையற்ற செலவுகளை குறைத்து வருவாயை பெருக்கிய காரணத்தால், வருவாய் பற்றாக்குறை நன்றாக குறைந்து, இப்போது ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதத்துக்கு கொண்டுவந்து, பொருளாதாரத்தை, மாநிலத்தின் வளர்ச்சியை சரியான பாதையில் கொண்டுவந்து, பீடுநடை போட வைத்துவிட்டார். அடுத்த 3 ஆண்டுகளில் படுவேகம் எடுக்கவைத்து விட்டார். பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
அவர் எப்போதும் கூறும், ‘நம்பர்-1’ என்ற பெயரை தமிழ்நாடு பெறப்போகும் நாள் தூரத்தில் இல்லை. நாடு வளர்ச்சி அடைய திராவிட மாடல் வளர்ச்சி, அதாவது எல்லோருக்கும் எல்லா முன்னேற்றமும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில், சென்னையை சுற்றிலும் அடைந்துவந்த தொழில் வளர்ச்சி, மாநிலம் முழுவதும் ஏற்படவேண்டும் என்ற வகையில், பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் அறிவித்து ஒரு தொழில் புரட்சியை உருவாக்கியுள்ளார். அமைதிப்பூங்காவாக திகழ்வது, மக்களையும், தொழில் முனைவோர்களையும் நிம்மதி அடைய செய்துள்ளது. அவர் சாதனையில் பூத்த மலர்களில் மணம் வீசும் மலரான புதுமைப்பெண் திட்டம் மூலம், அரசு பள்ளிக்கூடங்களில் படித்து உயர் படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தால், பெண் கல்வியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடிக்கல்வி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு, கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்று ஒரு நீண்ட சாதனைகளுடன் இரு ஆண்டுகளை கடந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி, தொழில் துறை உள்பட அனைத்து துறைகளிலும் நித்தமும் ஒரு முத்திரை பதித்து கொண்டிருக்கிறது.
நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம் 8.5.2023