புதிய தொழிலாளர் நலச் சட்ட வரைவில் மறைந்துள்ள மனுதர்மம்?
பொள்ளாச்சி: ஒன்றிய அரசை அம்பலப்படுத்தி கழகத் தலைவர் ஆசிரியர் எழுச்சி உரை!
பொள்ளாச்சி. நவ.23 ஒப்பனைகள் ஒருபோதும் நீடிக்காது. ஒப்பனையைப் போட்டவர்களே விரைவில் கலைத்துத்தான் ஆகவேண்டும் என்றும், ‘திராவிட மாடல்’ அரசுக்கு பன்னாட்டளவில் புகழ் கிடைத்து வருகிறது என்றும் கழகத்தலைவர் பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
பொள்ளாச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி – இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைப் பொதுக்கூட்டம் நேற்று (22.11.2025) மாலை 6 மணியளவில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையேற்க, செயலாளர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பொள்ளாச்சி வடக்கு நகரச் செயலாளர் நவநீத கிருஷ்ணன், பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், தி.மு.க. தெற்கு நகரச் செயலாளர் அமுதபாரதி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து கழகத் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாடல் அரசு கல்விச் செல்வத்தை புகட்ட என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தது, ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் அதைத் தடுக்க என்னென்ன சூழ்ச்சிகளை செய்து வருகிறது என்பதை விளக்கி நோக்க உரையாற்றினார். அடுத்து, தி.மு.க. மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சை அம்பலப்படுத்தி,
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. இரண்டும் “மாட்டு” நேயத்தை அடிப்ப டையாகக் கொண்டது என்றும், திராவிட இயக்கம் “மனித”நேயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் நிறுவினார். நிறைவாக கழகத் தலைவர் சிறப்புரை, நிறைவுரை வழங்கினார்.
பொள்ளாச்சி, திருப்பூர், நீலமலை, மேட்டுப்பாளையம் மாவட்டங்கள் சார்பில்…
கழகத் தலைவரின் நிறைவுரைக்கு முன்னதாக பொள்ளாச்சி, திருப்பூர், நீலமலை, மேட்டுப்பாளையம் மாவட்டங்கள் சார்பில் முதல் தவணையாக, “பெரியார் உலகம்” நிதியாக 28,71,000/- ரூபாயைக் காசோலை மூலம் வழங்கினர். அதைத் தொடர்ந்து விடுதலை சந்தாக்களை வழங்கினர். உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள் கழகத் தலைவருக்கு மிகுந்த ஆவலுடன் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தனர். மாவட்டக் கழகத்தின் சார்பில் ஆசிரியருக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர் மேடையிலிருக்கும் பிரமுகர்களுக்கு மரியாதை செய்தார். பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர், தி.மு.க. மாணவரணிச் செயலாளர் இருவரும் அடுத்தடுத்து கழகத் தலைவருக்கு மரியாதை செய்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார். முதலில் நிதியளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடக்கத்தில் மிதமான மழை இருந்தது. எங்கே கூட்டம் சரிவர நடைபெறாமல் போய்விடுமோ என்ற சஞ்சலத்துடன் மக்கள் ஓரமாக ஒதுங்கியிருந்து ஆசிரியர் உரையைக் கேட்கத் தயாராக இருந்தனர். அதை உணர்ந்தே, “மழையை நாம் குறை சொல்லக்கூடாது. மழை பெய்யும் காலத்தில் நாம் கூட்டம் நடத்துகிறோம்” என்று கலகலப்புடன் தனது உரையைத் தொடங்கினார். திராவிட இயக்கத்தின் சிறப்பைப் சுட்டிக்காட்ட, “தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருமுறை தந்தை பெரியாரிடம், ‘தங்களுக்கு பிடித்த திருக்குறள் எது?’ என்று கேட்டதையும், ‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக்கெடும்’ எனும் குறளை தந்தை பெரியார் கூறியதைச் சுட்டிக் காட்டி, தந்தை பெரியார் தொடங்கி திராவிடர் இயக்கத் தலைவர்கள் காலம், நேரம் பாராமல் தமிழ்நாட்டு மக்களின் மீட்சிக்கு பாடுபட்டதை நினைவு படுத்தி, மழை பெய்தாலும் கூட்டம் நடைபெற்றே தீரும் என்பதை உணர்த்தி, மழையையும் ஒரு பிரச்சார ஆயுதமாக்கினார். இளைஞர்கள் ஆசிரி யரைஅருகில் காண ஆவலுடன் மேடையின் பக்கவாட்டில் நின்றதைக் கண்டு, போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு பொதுமக்களும், இளைஞர்களும் மிதமான மழையையும் பொருப்படுத்தாமல் இருக்கைகளில் அமர்ந்தனர்.
ஆசிரியர் தொடர்ந்து, “பெரியார் உலகம்” முக்கி யத்துவம் பற்றி சொல்ல வந்தவர், “நமது தமிழ்ச் சமுகம் பெரியாருக்கு முன் எப்படி இருந்தது? பெரியாருக்கு பின் எப்படி மாற்றம் பெற்றிருக்கிறது? என்பதை எடுத்துக் கூறுவதுதான் “பெரியார் உலகம்” என்று ஓர் அரிய வரலாற்று ஆவணமாக உருவாகிறது” என்று ரத்தினச் சுருக்கமாக விவரித்தார்.
தொழிலாளர் நலச் சங்கங்களுக்கு
உரிமையுடன் அழைப்பு விடுத்தார்
மேலும் அவர், ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படி யெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை எடுத்துரைத்துவிட்டு, அண்மையில் ஒன்றிய அரசு புதிதாக வெளியிட்டுள்ள, தொழிலாளர் நலக்கொள்கையால் விளையப்போகும் ஆபத்தை மனுதர்மம் – இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை எடுத்துவைத்துக் கொண்டு விளக்கினார். நவீன தொழிலாளர் கொள்கையை வடிவமைக்க மனுதர்மம், அர்த்த சாஸ்திரம், நாரதர் சாஸ்திரம் போன்றவற்றில் உள்ளவற்றை பயன்படுத்தியிருப்பதை படித்துக் காட்டினார். மனுதர்மத்தில் இருக்கும் தொழிலாளர் கொள்கை என்ன என்பதை மனுதர்மம் புத்தகத்தின் 8 ஆவது அத்தியாயம் 413 ஆம் சுலோகமான “பிராமணன், சூத்திரனுக்கு சம்பளம் கொடாமலேனும் வேலை வாங்கலாம்” என்பதை வாசித்துக் காட்டினார். 415 ஆம் சுலோகத்தில் ‘‘சூத்திரன் என்பவன் யார்?’’ என்ற கேள்விக்கு பச்சையாகக் கொடுக்கப்பட்டுள்ள, இன இழிவை வேதனையுடன் படித்துக் காட்டினார். மேலும் அவர், “கூலி உயர்வுக்காக போராடினால் மட்டும் போதாது. தொழிலாளர்களின் மான வாழ்வுக்காகவும் போராட வேண்டும்” என்று தொழிலாளர் நலச் சங்கங்க ளுக்கு உரிமையுடன் அழைப்பு விடுத்தார்.
அனைவரும் முதலில் அவரவர் வாக்குகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள்!
தொடர்ந்து, “நீதிக்கட்சி தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகிறது. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு 81 ஆண்டுகள் ஆகிறது! தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது! திராவிடர் இயக்கம் செய்த சாதனைகளால் உலகளவில் புகழ் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெட் வேகத்தில் சாதனைகளைச் செய்து வருகிறார். அப்படிப்பட்ட திராவிடர் இயக்கத்தை புதிதாக வந்த சிலர் ஒப்பனைகளால் வீழ்த்திவிடலாம் என்று கருதுகின்றனர். ஒப்பனைகள் (Mackup) ஒருபோதும் நீடிக்காது. ஒப்பனையைப் போட்டவர்களே விரைவில் அதைக் கலைத்துத்தான் தீரவேண்டும். திராவிடர் இயக்கத்தின் வேர்கள் அந்தளவுக்கு ஆழமாக உள்ளது. ஆகவே, இதை யாராலும் வீழ்த்த முடியாது” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். இறுதியாக, “மழைக்கும், நமக்கும் நடந்த போட்டியில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இயற்கைக்கு நன்றி” என்று கூறி, “அனைவரும் முதலில் அவரவர் வாக்குகளை சரி பார்த்துக்கொள்ளுங்கள். மறுபடியும் திராவிட மாடல் அரசுதான் வரவேண்டும். அது எங்களுக்காக அல்ல, உங்களுக்காக; உங்கள் சந்ததிகளுக்காக” என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
‘தமிழ் நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் தான்! அவர்களது வகுப்பு மாலை நேரத்தில் தொடங்கும்!’ என்பது அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற சொற்றொடர். அதை நினைவுபடுத்தியது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரை. அது திராவிடர் இயக்கத்தின் தத்துவ விளக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்றோர்
பொதுக்குழு உறுப்பினர் செழியன், மாவட்டத் துணைத்தலைவர் ஆனந்த் சாமி, கோவை மாவட்டத் தலைவர் சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தாராபுரம் சக்திவேல், இல.கிருஷ்ணமூர்த்தி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ராகுல், மாவட்டக் காப்பாளர் பொறியாளர் பரமசிவம், நீலமலை மாவட்டக் காப்பாளர் மருத்துவர் கவுதமன், மாவட்டத் தலைவர் நாகேந்திரன், திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ் ஆறுச்சாமி, தாராபுரம் மாவட்டச் செயலாளர் தம்பி பிரபாகரன், கோவை மாவட்டச் செயலாளர் பிரபாகரன், தாராபுரம் மாவட்டக் காப்பாளர் புள்ளிமான், திருப்பூர் மாவட்டச் செயலாளர் குமரவேல், மனிதநேய ஜனநாயக கட்சி நகரச் செயலாளர் சம்சுதீன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் வானுகன் டாக்டர் கி.வரதராஜன், ச.தருமராஜ், வி.யுவராஜ் ஆகி யோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர். திராவிடர் கழகத்தின் தோழர்கள் சு.வடிவேல், க.வீரமலை, கு.கார்த்தி, ம.பிரவீன்குமார், இர.வின்சென்ட், வீ.வருண், வழக்குரைஞர் இர.திவ்யாவாசுகி, ம.தினேஷ்குமார், இல.மனோஜ்குமார், சி.கனகராஜ், ம.கோ.ச.சபரிகிரி, ஆ.பேரறிவாளன், ஆ.அன்பழகன், வீ.வர்ஷினி, மா.இலக்கியன், வீர.சகுந்தலா, ஆ.வீரமணி, நா.சு.பொற்கொடி, நா.சு.யாழ்மொழி, இர.சித்ரா, வி.அபிநயா, திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வேலு கார்த்திகேயன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் துரை நாச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக நகர செயலாளர் அர.நாகராஜ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். முன்னதாக திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.
