கூட்டாட்சித் தத்துவம் தகர்க்கப்படுகிறது தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி நிராகரிக்கப்பட வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா பேட்டி!

ராஜபாளையம், நவ.22  மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டாட்சித் தத்துவம் (Federalism) மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு (Basic Structure of the Constitution) தகர்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பாஜக மட்டுமல்லாமல், அவர்களோடு சேரும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களைத் தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

ராஜபாளையத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு, பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முக்கியத் தீர்மானங்கள்

நெல்லின் ஈரப்பதம்: நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்.

மெட்ரோ ரயில் திட்டங்கள்: கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது.

எஸ்.அய்.ஆர். நிறுத்தம்: தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானம் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, எஸ்.அய்.ஆரை நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆளுநர் கண்டனம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும், அரசுக்கும் எதிராகச் செயல்படும் ஆளுநருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, பீகார் தேர்தல் முடிவு ‘இண்டியா’ கூட்டணிக்கும் மற்றும் ‘மகாகட்பந்தன்’ கூட்டணிக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது உண்மை. பாஜக மற்றும் அய்க்கிய ஜனதா தளம் இணைந்து அனைத்து வகையான சாகசங்களையும் செய்து வெற்றி பெற்றுள்ளன.

பீகார் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். செயல்பாடு: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.

மதப் பிரிவினைவாதம், சிறுபான்மையி னர், தலித், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது. ஸநாதானம் என்ற பெயரால் ஜாதி கட்டமைப்புகள் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா நினைவுத் தபால் தலையை பிரதமர் வெளியிட்டது வெட்கக்கேடானது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துப் பல தியாகங்களைச் செய்த நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் பங்கு, ஆர்.எஸ்.எஸ்.க்கு இல்லை.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை எனக் கூறினார்.  இந்தத் தீர்ப்பு, ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவை ஒதுக்கித் தள்ளுவது போல் உள்ளது.  எனவே, உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் டி.ராஜா வலியுறுத்தினார்.

கூட்டணிக் கட்சியின் வெற்றி: அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் முன்மாதிரி முதலமைச்சராக உள்ளார். இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெறும்.

பாஜக நிராகரிப்பு: தமிழ்நாட்டில் பாஜக காலூன்றினால் அடிப்படைத் தன்மை பாதிக்கப்படும். எனவே, பாஜக மட்டுமல்லாமல் அவர்களோடு சேரும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களைத் தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டி. ராஜா உறுதியாகத் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *