சென்னை, நவ.22 தமிழ்நாட்டில் 4 சுற்றுகளாகக் கலந்தாய்வு முடிந்த நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 48 இடங்களை நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீடு
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளி லிருந்து 15 சதவீத எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) இணைய வழியில் நடத்துகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் 85 சதவீத இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது.
அதன்படி, 2025-2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில்:
அரசு ஒதுக்கீட்டுக்கு: 6,600 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,583 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக் கீட்டில்: 1,736 எம்.பி.பி.எஸ். மற்றும் 530 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர 72,194 பேர் தரவரிசைப் பட்டியலில் தகுதி பெற்றனர்.
இதில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கும் மட்டுமே நேரடிக் கலந்தாய்வு நடத் தப்பட்டது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு [https://tnmedicalselection.net](https://tnmedicalselection.net) என்ற இணையதளத்தில் இணையம் முறையில் நடந்தது. இதுவரை 4 சுற்றுகளாகக் கலந்தாய்வு முடிந்த நிலையில், மொத்தம் 48 இடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் மாணவர் சேர்க்கைக் குழு செயலர் லோகநாயகி தெரிவித்ததாவது:
“சென்னை, கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3 பிடிஎஸ். இடங்கள் உட்பட, தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 48 இடங்கள் காலியாக உள்ளன. அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் ஒரு பிடிஎஸ் இடமும் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.”
