துபாய், நவ. 22- துபாயில் அல் மக்தோம் பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற அய்ந்து நாள் விமானக் கண்காட்சியின் நிறைவு நாளில் (நவம்பர் 21, 2025 – தேதியின் அடிப்படையில்) இந்தியத் தயாரிப்பான ‘தேஜஸ்’ இலகு ரகப் போர் விமானம் சாகசத்தில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளானது.
சாகசத்திற்காகப் புறப்பட்ட ‘தேஜஸ்’ விமானம் மதியம் 2.10 மணி அளவில், வானில் தலைகீழாகப் பறந்தும், சுழன்றும் சாகசம் செய்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கிப் பாய்ந்தது. மோதிய வேகத்தில் விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது இந்த கெட்ட வாய்ப்பாக விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்தார். இந்திய விமானப்படை இதுகுறித்துத் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இது இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான எச்ஏஎல் நிறுவனத்தின் 4.5ஆம் தலைமுறைப் போர் விமானம் ஆகும். உலகின் போர் விமானங்களில் இது மிகச் சிறியது மற்றும் மிக எடை குறைவானது இந்த விமானம் மார்ட்டின் – பேக்கர் ஜீரோ-ஜீரோ எஜெக்ஷன் சீட்வசதியைக் கொண்டிருந்தும் விமானி உயிரிழந்தது ஏன் என்பது விசாரணை அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும்.
23 ஆண்டு கால வரலாற்றில், தேஜஸ் விமானம் விபத்துக் குள்ளாவது இது 3ஆவது முறையாகும். (முன்னதாக 2001இல் சோதனை ஓட்டத்தின்போதும், கடந்த ஆண்டு வழக்கமான பயிற்சியின்போதும் விபத்து ஏற்பட்டது).
