– வீ. குமரேசன்
நிறைவரங்கம்
இரண்டு நாள் மாநாட்டின் நிறைவரங்க உரையினை அமெரிக்கா – பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் வழங்கினார். பெரியார் பன்னாட்டமைப்பு ஆற்றி வரும் பெரியாரை உலகமயமாக்கிடும் பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மாநாட்டுத் தீர்மானம்
4–ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டின் மனிதநேயம் குறித்தும் அதனை உலகெங்கும் கொண்டு சென்று சட்டபூர்வமாக்கிட வேண்டும் என்ற தீர்மானத்தை ஆஸ்திரேலியா பெரியார் -அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் முனைவர் அண்ணாமலை மகிழ்நன் முன்மொழிய, மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள் அனைவரும் வழிமொழிந்திடும் வகையில் ஒன்று சேர எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

தீர்மான எண் 1:
மனித உரிமைகள், சமத்துவம், சமூகநீதி – இம்மூன்றையும் மேலும் செழித்தோங்க வைத்து உலகம் முழுவதும் பரவிப்படரச் செய்வது
நிறைவேற்றிய நாள்: நவம்பர் 2 – 2025
இடம்:க்ளென் எய்ரா டவுன் ஹால், கால்ஃபீல்ட், விக்டோரியா, ஆஸ்திரேலியா

முன்னுரை:
உலகளாவிய நற்பண்புகளான பகுத்தறிவு, கழிவிரக்கம், சமத்துவம், மானுட கண்ணியம் ஆகியவற்றை நீடித்து நிலைக்கச் செய்யும் நோக்கத்தில் 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு நடத்தப்பட்டது. மனிதர்கள் எல்லோருமே சுதந்திர ஜீவிகளாகப் பிறந்தவர்கள். கண்ணியத்திலும், மரியாதையிலும், உரிமைகளிலும் அனைவரும் சமமானவர்கள். இதை இந்த மாநாடு நன்கு உணர்ந்துள்ளது. பல்வேறு பாகுபாடுகளை மிகப்பெரிய சவால்களாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். பல விசயங்களில் சகிப்புத்தன்மையற்ற மனநிலை பரவலாக காணப்படுகிறது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு சீரமைக்க கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

சமத்துவம், கண்ணியம், சமூகப் பிணைப்பு – இவை மூன்றுமே ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கியமான காரணம் ஜாதி சார்ந்த பாகுபாடு, மதப்பற்று சார்ந்துள்ள வெறுப்பு, சகிப்புத்தன்மையின்மை மற்றும் இன்ன பிறவகை தவறான கணிப்புகள்.

கல்வித் துறை அமைப்புகளும், பொது நிறுவனங்களும், நீதி, நியாயம், கருணை, மனித உரிமைகள் மற்றும் உரத்த சிந்தனைகளை பேணிக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. அனைத்துப் பாடத்திட்டங்களிலும் மதங்கள் சார்ந்த சிறப்புப் போதனைகளிலும், ஜாதிவெறி, பாலினப் பாகுபாடு, ஓரினப்பற்று, மதவெறிக் கலப்பு போன்றவை இல்லாதபடி அவை பார்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் இவை எந்த வடிவிலும் இடம்பெறக்கூடாது. பாடத்திட்டங்கள் அனைத்தும் சமத்துவக் கொள்கையையும், சிறார் நலத்தையும் கருத்தில் கொண்டு அமைக்கப்படவேண்டும்.

அய்க்கிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் உட்பட பல மனித உரிமை அமைப்புகள் எல்லாவிதமான பாகுபாடுகளும் அழிக்கப்படவேண்டியது அவசியமும் அவசரமும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளன; உணர்ந்துள்ளன. ஜாதிபாகுபாடுகள், மதம், பாலினம் அல்லது இன்ன பிற வகைபாகுபாடுகள் உட்பட அனைத்துமே அழிய வேண்டும் என்பதை எல்லா மனித உரிமை மய்யங்களும் வலியுறுத்தி வருகின்றன.

எனவே – 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு கீழ்கண்டவாறு தீர்மானிக்கிறது:
- ஜாதி அமைப்பையே பாகுபாடுகளின் ஆணி வேராக கருதும்படி ஆஸ்திரேலியாவின் அனைத்து நீதித்துறை மன்றங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கத் தீர்மானம்.
- மதங்களும், இனங்களும் இழிவுப்படுத்தப் படுவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றும்படி தேசிய, மாநில, உள்ளாட்சி அரசுகளுக்குக் கோரிக்கை விடுக்கத் தீர்மானம்.
அனைவரையும் உள்ளடக்கிய வகையில் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். அடிப்படைப் பண்புகளான மானுட கண்ணியம், மதச்சார்பின்மை, நீதி – இவை மூன்றும் காக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களும் அனைத்து பொது அமைப்புகளும் மேற்கண்டவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தத் தீர்மானம்


ஒத்திசைவுடன், ஒருமனதாக மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு
பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் –
ஆஸ்திரேலியா / பெரியார் பன்னாட்டு அமைப்பு
யு.எஸ்.ஏ. (அமெரிக்கா)
தேதி : நவம்பர் 2, 2025
இடம் : கால்ஃபீல்ட், விக்டோரியா, ஆஸ்திரேலியா
Resolution No.1
Advancing Human Rights, Equality, and Social Justice
Adopted: 2nd November 2025
Venue: Glen Eira Town Hall, Caulfield, Victoria, Australia.
Preamble
The 4th International Humanist Conference, convened to uphold the universal values of reason, compassion, equality, and human dignity, recognising that all human beings are born free and equal in dignity and rights, and mindful of the continued challenges posed by discrimination and intolerance in all their forms, hereby adopts the following resolution.
Resolution
Whereas caste-based discrimination, religious hatred, intolerance, and other forms of prejudice continue to undermine equality, dignity, and social cohesion in Australia and across the world.
Whereas education systems and public institutions play a vital role in fostering fairness, compassion, human rights, and critical thinking, and must ensure that all curricula and special religious instruction materials are free from casteism, sexism, homophobia, and religious chauvinism, in full alignment with the principles of equality and child safety;
Whereas numerous human rights bodies—including the United Nations and the Australian Human Rights Commission—have recognised the urgent need to eliminate all forms discrimination, including those based on caste, religion, gender, or other status.
Therefore, be it resolved that the 4th International Humanist Conference:
- Calls upon all Australian jurisdictions to recognise caste as a protected attribute under anti-discrimination law.
- Urges national, state, and local governments to strengthen legal protections against religious and racial vilification; and
- Reaffirms the responsibility of all educational and institutional frameworks to uphold equality, inclusion, and the fundamental values of human dignity, secularism, and justice.
தமிழர் தலைவரின் சிறப்புரை
நிறைவரங்கத்தின் தமிழர் தலைவரின் சிறப்புரையானது ‘மனித நேயத்தின் எதிர்காலம்’ (Future of Humanism) என்ற தலைப்பில் பதிவு செய்து அந்தப் பதிவு ஒளிபரப்பபட்டது. மனிதநேயம் எதிர்காலத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துறையில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எப்படியெல்லாம் பரிணாமம் பெற இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு உலகம் முழுவதும் உள்ள மனிதநேய, நாத்திக, பகுத்தறிவாளர் அமைப்புகள் செயல்பட வேண்டும் என்றார். மேலும் தனது பேச்சில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஏன் இந்த மாநாடு ஆஸ்திரேலியாவில்?
பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் இவ்வாண்டு இந்தச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்த ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
மனிதநேயமும், சமத்துவமும் இங்கே செழித்தோங்கி இருப்பதே காரணம். அவற்றின் மகத்துவத்தை இந்த நாட்டினர் உணர்ந்திருப்பதே காரணம். ஆனால் வருந்தத்தக்க ஒரு விசயமும் மனதை உறுத்தாமல் இல்லை. எங்கள் நாட்டில் பிற்போக்குத்தனமான சிந்தனைகளை வளர்த்தபடி மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்திக் கொண்டிருந்த சில விஷமிகள் புலம்பெயர்ந்து வாழ்வாதாரம் தேடி உங்கள் மண்ணில் குடியேறியுள்ளனர். உளமாற அவர்களை வரவேற்று ஆதரவளித்தவர்கள் நீங்கள். எல்லாவிதத்திலும் அவர்களுக்கு உதவியவர்கள் நீங்கள். அவர்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர்கள் நீங்கள். உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. அவர்கள் இங்கே வளமுடன் வாழ்வது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால், அவர்கள் தங்களுடன் ஜாதி அமைப்பையும், வர்ணாஸ்ரமத்தையும் கொண்டு வந்து உங்கள் மண்ணை பாதிக்க முனைவது வேதனையளிக்கிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் குடியேறிய பின் அவர்கள் நம்பிக்கை துரோகம் இழைக்கலாமா தஞ்சமளித்த மண்ணிற்கு? நீண்ட காலமாக இல்லாமல் இருந்த ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும் உங்கள் நாட்டில் மீண்டும் தலைதூக்கிவிடக் கூடாது. அப்படிப்பட்ட பேராபத்தைத் தடுக்கும் நோக்கத்தில்தான் PATCA அமைப்பு இந்த மாநாட்டிற்கு இந்த மண்ணையே இந்த ஆண்டு தேர்வு செய்துள்ளார்கள். இந்தியாவில் எங்களுக்கு ஏற்பட்ட அவலநிலை உங்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, இந்த பன்னாட்டு மாநாடு இங்கே நடைபெறுவதே மிகவும் அவசியமானது! முக்கியமானதும் கூட. ஆஸ்திரேலிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்த மாநாடு ஓர் எச்சரிக்கை நிகழ்வாகவே இருக்கட்டும். வரும்முன் காப்பதே விவேகம் அல்லவா?
ஆ. ராசா – நிறைவுரை
மாநாட்டின் நிறைவுரையினை இந்திய ஒன்றியத்தின் மேனாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமாகிய ஆ.ராசா அவர்கள் வழங்கினார். கடந்த 40 ஆண்டுகளாகப் பொருளாதார அடிப்படையிலான உலகமயமாக்கம் மானுட மேம்பாட்டில் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மனிதருக்கான வளர்ச்சி என்று சொல்லி விட்டு அதில் மனிதமுகத்தை தேட வேண்டி உள்ளது. தொலைந்து போன மனித முகத்தை தேடிப்பிடித்து வளர்ச்சியில் மனித நேய அணுகுமுறையினை கொண்டு வரவல்லது தந்தை பெரியாரின் கொள்கைகளே. அதற்கு இந்த மாநாடு பெரும்பங்கு ஆற்றி உள்ளது. தொடர்ந்து செல்வோம் பெரியாரின் கொள்கைகளை உலகமயப்படுத்துவோம் என முழக்கமிட்டார்.
மாநாட்டின் வெற்றிக்குப் பாடுபட்ட பொறுப் பாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
இறுதியில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொதுச்செயலாளர் எழுத்தாளர் சுமதி விஜயகுமார் நன்றி கூற மாநாடு இனிதாக நிறைவு பெற்றது.
பெரியாரின் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் மெல்போர்னில் நடைபெற்ற 4–ஆம் பன்னாட்டு மனிதநேய மாநாடு அடுத்தக்கட்ட மாபெரும் பணியினை எடுத்துச் செல்லும் பயணத்தில் ஒரு மைல்கல்லாகவே திகழ்ந்தது.
– நிறைவு
