மதுரை, கோவை மாநகரங்களில் மெட்ரோ ரயிலில் – அரசியல்!

கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை 2024இல் தமிழ்நாடு அரசு தரவுகளுடன் ஒன்றிய அரசின் அனுமதிக்கு – அனுப்பி வைத்தது.

இப்பொழுது 2025 இறுதியில் பல்வேறு காரணங்களைக் கூறி, ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது.

அனுமதி மறுப்புக்கான காரணங்களில் முக்கியமானது – மக்கள் தொகை 20 லட்சம் இல்லை என்பதுவாம்!

இதில் வேடிக்கை என்னவென்றால், 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் திட்டத்தை அனுமதிக்க மறுத்துள்ளதுதான்.

இடைப்பட்ட 14 ஆண்டுகளில் மதுரை, கோவை மாநகரத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்திருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது ஏன் என்பது பகுத்தறிவு ரீதியான நியாயமான கேள்வி.

தமிழ்நாடு அரசு இன்னொரு கேள்வியை முக்கியமாக முன் வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய நகரங்களில் 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்று காரணம் காட்டும்  ஒன்றிய அரசு, கோவை, மதுரையைவிட மக்கள் தொகை  குறைவாக உள்ள வடமாநிலங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளித்தது எப்படி? என்பதுதான் அந்த அறிவார்ந்த, நியாயமான கேள்வியாகும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆக்ரா, கான்பூர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சூரத் ஆகிய நகரங்களில் மக்கள் தொகை 20 லட்சத்துக்குக் குறைவாக இருந்தும் அனுமதியளித்தது எப்படி? என்பதுதான் தமிழ்நாடு அரசின் அறிவார்ந்த கேள்வி.

தமிழ்நாட்டில் கட்சி நடத்தும் பிஜேபி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், பிஜேபியின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றிச் சிறிதும் அக்கறை காட்டாமல், ஒன்றிய பிஜேபி அரசுக்காக மல்லுக்கட்டி வலிய ஆதரவு நிலை எடுத்து, உண்மைக்கு மாறாக தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ அரசின் மீது அபாண்டமாக அவதூறுகளைப் பரப்புவதுதான் அவலத்துக்குரியது.

ஒரு வகையில் இப்படியே அவர்கள் பேசிக் கொண்டிருப்பதும் – ‘நல்லது’ தான். கொஞ்ச நஞ்சம் தமிழ்நாட்டில் ஒட்டுப் பிசிறு மாதிரி இருக்கும் பிஜேபி சங்பரிவார்களுக்குக் கிஞ்சிற்றும் இடமில்லை என்ற நிலையை உருவாக்கும் அல்லவா!

என்ன சொல்லுகிறார் திருமதி வானதி சீனிவாசன்? கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் வராததற்குக் காரணம் தி.மு.க. ஆட்சியே! அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றால் உடனே கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் உறுதி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.

இப்பொழுது புரிகிறதா – கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய பிஜேபி அரசு அனுமதியளிக்காததற்குக் காரணம் அரசியல்தான் என்பது?

திருமதி வானதி சீனிவாசன் இப்படி சொல்லுகிறார் என்றால், பிஜேபியின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரனோ சிறு பிள்ளைத்தனமாக பேசியிருக்கிறார்.

கோவை மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கினார்கள். தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்பதாலேயே தி.மு.க. அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தவறான அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாம்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய பிஜேபி அரசு நிராகரிக்கவில்லையாம்! அதில் சில விளக்கங்களைக் கேட்டு, திருப்பி மட்டுமே அனுப்பியுள்ளதாம். ஆனால் இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்து விட்டதாக தி.மு.க. ஆட்சி சொல்லுகிறதாம்!

கோவைக்கு மெட்ரோ ரயில் வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தோடே தமிழ்நாடு அரசு சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளதாம்!

கோயம்புத்தூரில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள். எனவே கோவை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதாலேயே, வேண்டுமென்றே குழப்பமான திட்ட அறிக்கையை ஸ்டாலின் அரசு சமர்ப்பித்துள்ளது என்று தமிழ்நாடு பிஜேபி தலைவராக இருக்கக் கூடிய ஒருவர் சொல்லுகிறார் என்றால், இதைவிடக் கேலிக் கூத்து ஒன்று இருக்க முடியுமா?

தி.மு.க. அரசு மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஏதோ இப்பொழுதுதான் முதன் முதலாக திட்ட அறிக்கையை அளித்துள்ளதா? இதற்குமுன் சென்னைப் பெரு நகரத்திற்காக திட்ட அறிக்கையைத் தயாரித்து  ஒன்றிய அரசுக்கு அனுப்பி அதன்படி மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்திய பேரனுபவம் திமுக அரசுக்கு உண்டு என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் ஆரம்பப்பள்ளி மாணவர்களைவிடக் குறைவான புரிதலோடு பேசுவதுபற்றி என்ன சொல்ல!

(1) தமிழ்நாட்டுக்குரிய ஜி.எஸ்.டி. நிதியை முழுமையாக வழங்கியுள்ளதா?

(2) சம்கர சிக்ஷா மற்றும் பி.எம்.சிறீ திட்டங்கள் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி ரூ.2,291 கோடி வழங்கப்படாதது ஏன்?

(3) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி நிலுவை எங்கே?

(4) இயற்கைப் பேரிடர் நிதிகூட வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கின்றதே! இவைபற்றியெல்லாம் என்றைக்காவது தமிழ்நாட்டுப் பிஜேபிக்காரர்கள் உதட்டை அசைத்ததுண்டா?

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டால் தான் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய பிஜேபி அரசின் நிலைப்பாடும் – ஓர வஞ்சனையின் பின்னணியும் தெள்ளென விளக்கும்.

வாய் இருக்கிறது என்று பிஜேபி பிரமுகர்கள் உளறிக் கொட்ட வேண்டாம்!

தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு முறையும் சரியான முறையில் பாடம் கற்பித்தும், புத்தி வரவில்லையே பிஜேபிக்கு? அந்தோ பரிதாபம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *