சென்னை, நவ.22 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் எழும்பூர் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கட்டப்பட்ட 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.11.2025) திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேம்புலி அம்மன் கோயில் திட்டப் பகுதி. இங்கு 1976ஆம் ஆண்டு 295 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 144 குடியிருப்புகள் சேதமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ், அதே பகுதியில் 9 தளங்களுடன் கட்டப்பட்ட 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
அதேபோல் அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், மயி லாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் திட்டப் பகுதியில் ரூ.57.07 கோடி செலவில் 14 தளங்களுடன் கட்டப்பட்ட 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இந்தக் குடியிருப்புகளின் அம்சங் கள் மொத்த செலவு: ரூ.89.70 கோடியில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா 400 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன.
கட்டப்பட்டுள்ள இந்த 584 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஹாரிங்டன் சாலையில் நேற்று (21.11.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்து, ஒதுக்கீட்டு ஆணைகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் சி.எம்.டி.ஏ (CMDA) சார்பில் கட்டப்பட்டு வரும் கீழ்க்காணும் கட்டு மானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
துறைமுகம் பி.ஆர்.என். கார்டன்: ரூ.85.68 கோடியில் கட்டப்பட்டு வரும் 501 அடுக்குமாடி குடியிருப்புகள்.
எல்லீஸ் புரம்: ரூ.15.29 கோடியில் கட்டப்பட்டு வரும் 85 அடுக்குமாடி குடியிருப்புகள்.
ராயபுரம் செட்டித் தோட்டம்: ரூ.45.36 கோடியில் கட்டப்பட்டு வரும் 243 அடுக்குமாடி குடியிருப்புகள்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலை (சி.எம்.டி.ஏ சார்பில்): ரூ.132 கோடியில் கட்டப்பட்டு வரும் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, த. வேலு, இ. பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
