ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாகுபாட்டு நிலை!

5 Min Read

கோயம்புத்தூருக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிக்கவும், ஒன்றிய அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிடவும் பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.22 தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோயம்புத்தூருக்கும், ‘தமிழ் வளர்த்த  நகர மான’ மதுரைக்கும் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி, பிரதமர்  நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (22.11.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தங்களது ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்வதாகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!

அதிக அளவிலான தனிநபர் வாகனங்களைக் கொண்டும், நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வரும் நிலையில், அனைத்து வகையிலும் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பெரும்நகரங்களில், அதிக திறன் கொண்ட பொது போக்குவரத்து மாற்றுகள் தேவைப்படு வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தாங்கள் தயாரித்து, அதை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிலையில், தகுதியின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்திருப்பது, அந்த இரண்டு பெருநகரங்களில் வாழும் மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரை நேரில் சந்தித்து
கோரிக்கை மனு!

மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டங்களின் உயர் முன்னுரிமையைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய அமைச்சகத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், 24.5.2025 மற்றும் 26.7.2025 ஆகிய நாள்களில் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் முன்னுரிமை கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை சமர்ப்பித்து, இத்திட்டங்கள் குறித்து, தான் பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியதையும் நினைவு கூரவேண்டுமெனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த எங்களது கோரிக்கையை நிராகரித்தது எங்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இரண்டு மாநகரங்களில் வசிக்கும் மக்களிடையே மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள காரணங்கள் பொருத்தமற்றவை என்றும், மெட்ரோ ரயில் கொள்கை 2017 இல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, 20 இலட்சம் மக்கள் தொகை என்ற அளவு கோல் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின்படி அதன் மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டிலேயே 20 இலட்சத்தைத் தாண்டியிருந்தது என்றும், மதுரையிலும் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த 20 இலட்சம் என்ற அளவுகோல் ஒரேமாதிரியாகக் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தால், ஆக்ரா, இந்தூர் மற்றும் பாட்னா போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை என்பதையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றிய அரசின்
பாகுபாட்டு நிலையையே காட்டுகிறது!

இந்த அளவுகோலை கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்குச் சுட்டிக்காட்டுவது என்பது, எங்களது இந்த நகரங்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் பாகுபாட்டு நிலையையே காட்டுவதாகவும், எனவே ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களில் மேலே குறிப்பிடப்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்திட மேற்கொண்ட முடிவினைப் போன்று, தமிழ்நாட்டிலுள்ள இந்த மாநகரங்களிலும் செயல்படுத்திட ஏதுவாக இந்த அளவுகோலை நீக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், கோயம்புத்தூர் நகரில் இந்தத் திட்டத்திற்கான பயணிகளின் அடர்வு எண்ணிக்கை, சென்னையில் உள்ள பயணிகளின் அடர்வு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பயணி களின் எண்ணிக்கை என்பது பல காரணிகளைச் சார்ந்திருப்பதால் இது பொருத்தமானதல்ல என்றும் கோடிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், இந்த இரண்டு நகரங்களும் சென்னையிலிருந்து வேறுபட்ட பயண முறைகளைக் கொண்டுள்ளன என்றும், விரிவான போக்குவரத்து ஆய்வுகளுக்குப் பிறகு RITES தயாரித்த கோயம்புத்தூருக்கான விரிவான இயக்கத் திட்டம், முன்மொழியப்பட்ட துறைகளில் மெட்ரோ ரயில் பயணத்தின் தேவையைத் தெளிவாகக் கணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மதுரைக்கும், 2011 ஆம் ஆண்டின் விரிவான இயக்கத் திட்டத்தில், பொதுப் போக்குவரத்து அமைப்பு (BRT) முன்மொழியப்பட்டதாகவும், ஆனால் பெரும்பாலான பாதைகளின் நீளம் உயர்த்தப்பட வேண்டியிருப்பதால், ரயில் போக்குவரத்திற்கான அமைப்பையும் பரிசீலிக்கலாம் என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  மேலும், விரிவான திட்ட அறிக்கை ஆய்வுகள் போக்குவரத்து கணிப்புகளின் அடுத்தடுத்த, தனிப்பட்ட மதிப்பீடுகளைச் செய்துள்ளன என்றும், இது மெட்ரோ ரயில் வழித்தடங்களின் தேவையை நியாயப்படுத்தியது என்றும், இந்தக் காரணிகள் போதுமான அளவு கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்!

மெட்ரோ ரயில் வழித்தட உரிமையைப் பொறுத்தவரை, இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் இத்திட்டங்களுக்குத் தனியார் நிலங்க ளைக் கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றும், நிலம் கையகப்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை, மெட்ரோ ரயில் திட்டங்களின் நீண்டகால சமூக-பொருளாதார நன்மைகளுடன் சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தற்போதைய திட்டத்தில் நில உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், இழப்பீட்டை தாங்கள் வழங்கி வருவதாகவும், கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது என்பது ஒரு தடையாக இருக்காது என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் கலாச்சார மய்யத்தினை உள்ளடக்கியது!

இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் எழுப்பியுள்ள அய்யங்களுக்கு உரிய, விரிவான விளக்கங்களைச் சமர்ப்பிக்க சிறப்பு முயற்சிகள் துறைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாகவும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கருத்துருவைத் திருப்பியனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளதுடன், தேவைப்படின் இத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க தமது குழுவுடன் புதுடில்லியில்  பிரதமர் அவர்களைச் சந்திக்க தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரி வித்துள்ளார்.   மேலும், இந்த இரண்டு திட்டங்களும் தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் கலாச்சார மய்யத்தினை உள்ளடக்கியது என்பதைக் கருத்தில் கொண்டு, தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *