கேள்வி 1 : டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6-ஆம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும் என ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளாரே?
– வெ. மகாராணி, காஞ்சிபுரம்.
பதில் 1 : ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் அவர்களே தொடங்கி வைத்து, தமிழ்நாடு முழுவதும் நீள்வது, அடித்தட்டு மக்களிடம் உள்ள உறவும், சுயமரியாதைப் பரிவும் இந்த அரசுக்கு இயல்பானவை!
அரசியல் குழப்பவாதிகளால் இடையில் ஒருசில விரும்பத்தகாத நிகழ்வுகள். உண்மை வெல்லும் – நிச்சயம்!
- • •
கேள்வி 2 : சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில், வங்காளதேச மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துப் பன்னாட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இலங்கைக்குப் பொருந்தாதா?
– மல்லிகா, மாங்காடு.
பதில் 2 : மில்லியன் டாலர் கேள்வி இது. பதில்…. பெப்பே, பெப்பே?
- • •
கேள்வி 3 : பீகார் தேர்தல் வெற்றிக்காக உலக வங்கி நிதி ரூ.14 ஆயிரம் கோடி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது குறித்து…?
– கி. கோவிந்தராஜ், வந்தவாசி.

பதில் 3 : விசாரணைக்கு உட்படுத்த அவரே நீதிமன்றங்களை – வீதிமன்றங்களை நாடலாமே!
- • •
கேள்வி 4 : “எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை” என்று இயக்குநர் ராஜமவுலி கூறியிருப்பது போன்று துணிச்சலாக – வெளிப்படையாக மற்ற திரையுலகப் பிரபலங்கள் கூறத் தயங்குவது ஏன்?
– ஜெ. பாண்டுரங்கன்,வாணுவம்பேட்டை.
பதில் 4 : துணிவு – சிலருக்குத்தான் வரும். அதுவும் அச்சுறுத்தலைத் தாண்டி நிலைத்தால் நல்லது. எல்லோரும் “சத்யராஜ்”களாகி விடுவது எளிதல்லவே!
சத்தியராஜிடம் தெளிவு + சுயமரியாதை + செறிவு உள்ளதே காரணம்.
- • •
கேள்வி 5 : ‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிக்கு விடிவு தருமா?
– எஸ்.பத்ரா, படப்பை.
பதில் 5 : முழு நம்பிக்கை வரவில்லை நமக்கு!
- • •
கேள்வி 6 : எஸ்.அய்.ஆர். பணிகளால் மன உளைச்சல் அதிகரித்திருப்பதாகக் கூறி கும்பகோணத்தில், அங்கன்வாடிப் பெண் ஊழியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பணிச் சுமை என்ற அரசு ஊழியர்களின் குமுறல்களுக்கு என்னதான் தீர்வு?

– இரா. சித்ரா, சின்ன சேலம்.
பதில் 6 : ‘நீட்’ தேர்வுக்காக நீடித்து வரும் தற்கொலைப் பட்டியலுக்கு என்ன தீர்வோ, அதேதான் போலும் இதற்கும்!
- • •
கேள்வி 7 : கோவை மற்றும் மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்ட அனுமதியை மறுத்துள்ள ஒன்றிய அரசின் வஞ்சிக்கும் போக்கு, தொடர் கதையா?
– அ. சுமதி, கோவை.
பதில் 7 : பா,ஜ.க – மோடி – ஆர்.எஸ்.எஸ்.ஆல் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பட்டியலோடு சூறாவளியென தமிழ்நாட்டின் மூலைமுடுக் கெல்லாம் பிரச்சாரம் செய்தாக வேண்டும்!
பலன் நிச்சயம்! அப் பட்டியல் நீளம், நாளும் பெருகியே வருகிறது!
- • •
கேள்வி 8 : இந்தியாவில் 8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக உச்ச நீதிமன்றம் தமது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. இதற்கு என்னதான் தீர்வு?
– பா.ஆகாஷ், புது டெல்லி.
பதில் 8 : ஏதோ உச்சநீதிமன்றம் இதற்கு முன்பு சுட்டிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு ஏற்பட்டுவிட்டதுபோல நினைத்து இப்போது இந்தக் கேள்வியை எழுப்பும் நண்பரே, முந்தைய பதிலே (மவுனம்) இதற்கும் இருந்தால் வியப்பில்லை – வழமை!
- • •
கேள்வி 9 : பீகார் தேர்தலின்போது வாக்குப் பதிவுக்கு முன்பாகவே 20,000 ஓட்டுகள் சேர்க்கப்பட்டன என்பது உண்மையா?
– ம. முனியாண்டி, ஆரணி.
பதில் 9 : உறுதிப்படுத்தப்படாத செய்தி. சரியான தகவலுடன் அரசியல் கட்சிகள் வழக்கு மன்றத்தை நாட வேண்டும்.
- • •
கேள்வி 10 : “ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் தண்டிக்கப்படும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருப்பது எதேச்சாதிகாரப் போக்கு அல்லவா?

– த. திருநாவுக்கரசு, தென்காசி.
பதில் 10 : உலகத்திற்கே ராஜா – ‘நானே ராஜா’ என்று ஆட்டம் போடுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதிவேகம் எப்போதும் நல்லதல்ல. இழுக்க இழுக்க ரப்பர் கயிறு அறுந்துவிழுவது தவிர்க்க இயலாதது என்பது இயற்கைச் சட்டம் (Natural Law).
