‘பாம்பின் கால் பாம்பு அறியும்’ என்பது பழமொழி. அதாவது கால் என்றால் வழி, என்ற பொருளில் சொல்லப்பட்ட பழமொழியாகும் இது. ‘பாம்பின் உடைய வழி பாம்புக்கு தான் தெரியும்’ என்று சொல்லப்பட்டதாகும்.
‘புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்–நலமிக்க பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே. பாம்பறியும் பாம்பின் கால்.’
– பழமொழி நானூறு, பாடல்-301
ஆசிரியர் – மாணவர் உரையாடல்
பள்ளிக்கூடத்தில் மாணவனை பார்த்து ஆசிரியர், பாம்பிற்கு கால் உண்டா? என்று கேட்க; மாணவன்: ‘பாம்பிற்கு கால் உண்டு அய்யா’ என்று விடையளித்தான். எப்படி என ஆசிரியர் வினவ, மாணவன்: ‘கால் இருந்தால் தான் பாம்பு, இல்லையென்றால் பம்பு என்று ஆகிவிடும் அய்யா!’ என்றான். ஆசிரியர் சிரித்து விட்டார்.
உண்மையில் பாம்பிற்கு கால் உண்டா என பார்ப்போம்!

யூத – கிறிஸ்தவ வேதத்தில் பாம்பு
யூதர்களின் வேத நூலான ‘தனக்’ (எபிரேய பைபிள்) மற்றும் கிறிஸ்தவர்களின் வேத நூலான பழைய ஏற்பாட்டிலும் ( கிறிஸ்தவர்களின் பைபிள், பழைய ஏற்பாடு – புதிய ஏற்பாடு என இரு பகுதிகளை கொண்டது)
‘யெகோவா’ கடவுளால் பாம்பு படைக்கப் பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாம்பு படைக்கப்பட்ட போது, கால்களுடன் இருந்ததாம்.
பழைய ஏற்பாடு, ஆதியாகமம்: மூன்றாம் அத்தியாயத்தில் “யெகோவா கடவுளால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை வஞ்சனையாக, அந்தப் பாம்பு, ஏவாளையும் ஆதாமையும் (ஆதம்-ஈவள்) உண்ண வைத்ததால், யெகோவா கடவுள், பாம்பை ‘மண்ணைத் தின்று மண்ணிலேயே ஊர்ந்து வாழ்வாயாக” என்று சபித்து விட்டதாக கூறுகிறது.

பழைய ஏற்பாட்டில் (பைபிள்) பாம்பை கால்களுடன் படைத்ததாக எங்கும் கூறப் படவில்லை.
‘இனி மண்ணிலே ஊர்ந்து வாழ்வாயாக’ என்று சபித்து விட்டதாக கூறப்பட்டு இருப்பதால், ‘முதலில் கால் இருந்திருக்கும்; பிறகு சபிக்கப்பட்டவுடன் மண்ணில் ஊர்ந்து செல்ல தொடங்கி இருக்கும்’ என்று சொல்கின்றனர்.
ஆனால் உண்மையில் 11.3 கோடி (113 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன், பாம்பு நான்கு கால்களுடன் இருந்ததாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதற்கு ஆதாரமாக நான்கு கால்களுடன் கூடிய பாம்பின் ‘புதை படிவம்’ பிரேசில் நாட்டில் கிடைத்துள்ளது. அந்த புதை படிவ பாம்பிற்கு ‘டெட்ராபோடோபிஸ் ஆம்ப்ளெக்டஸ் ‘ என்று பெயரிட்டுள்ளனர்.

பாம்பின் பரிணாமம்
ஊர்வனவற்றின் ஒரு பிரிவுதான் பாம்பு வகைகளாகும்.
பல்லி இனத்தின் மூதாதையான, பல்லி போன்ற (squamate order) ஓர் உயிரினத்தில் இருந்து ‘உரு மலர்ச்சி'(பரிணாம வளர்ச்சி) பெற்று தோன்றியதே, பாம்பு இனமாகும்.
தற்காலத்தில் நடமாடிக் கொண்டிருக்கும், மலைப்பாம்பின் வாலின் அடிப்பகுதிக்கு அருகில், தசைகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் இடுப்பு எலும்பு மற்றும் தொடை எலும்பின் (femur) சிறிய எச்சங்கள் உள்ளன. இந்த எலும்புகளுடன் இணைந்த, வெளிப்புறமாகத் தெரியும் சிறிய, நகம் போன்ற முட்கள் (spurs) இருக்கின்றன.. இவை நடப்பதற்கு பயன்படாது, ஆனால் இனப்பெருக்கத்தின் போது துணையைப் பிடித்துக் கொள்ள உதவுகிறது. இந்த எச்ச பகுதி, மலைப்பாம்பு இனத்திற்கு தொடக்கத்தில் கால்கள் இருந்ததற்கான சான்றுகளாகும்.
ஆகையால், “நான்கு கால்களுடன் நடமாடிக்கொண்டு வந்த பாம்பினம், கால்கள் சிறியதாகவும் உடல் நீளமாகவும் இருந்ததால்; கால்கள் பயன்படாமல் போய், கால்கள் இல்லாத தகவமைப்பை பாம்புகள் பெற்று செதில்களால் ஊர்ந்து இருக்க வேண்டும்’’ என்று உறுதியாகிறது
