பிச்சாண்டார்கோயில் முதல் அமெரிக்கா வரை…

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவனுடன் ஒரு சந்திப்பு

கல்வியில் சிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்கிற பொய்யான நம்பிக்கை இந்த மண்ணில் விதைக்கப் பட்டுள்ளது. அதேமட்டுமின்றி அவர்களே உயர்ந்தவர்கள் என்பதும் மூளையில் திணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரிய விஷத்திற்குப் பகுத்தறிவு மருந்து கொடுத்து செயலிழக்கச் செய்தவர் தந்தை பெரியார்.

நூற்றாண்டு கண்ட இந்த இயக்கத்தின் பெரும் விழா, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் முன்னெடுக்கப்பட்டு சாதனை படைத்தது. இன்றைக்கு இந்தியாவின் முன்னணி மாநிலம் தமிழ்நாடு என்பதையும், உலக நாடுகளுடன் “தமிழ்நாடு” ஒப்பிடப்படுகிறது என்பதையும் காண்கிறோம்!

வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் தமிழர்கள் பணி செய்து வருகிறார்கள். ஆனால் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே “அக்கிரகார” வாசிகள் நிரம்பி வழிந்தார்கள். தமிழ் எனும் பெயரில் பக்தி அமைப்புகளையும், பாரதி மன்றங்களையும், ஹிந்து மதப் பரப்புரைகளையும், கோயில்களையும் உருவாக்கச் செய்தனர்.

யாருமற்ற மைதானத்தில் ஓடி, முதல் பரிசை வெல்லும் சாணக்கியத்தனம் தெரிந்தவர்கள் பார்ப்பனர்கள். அதேபோல அவாள்கள் மட்டுமே பங்கேற்று மொத்தப் பரிசுகளையும் பிரித்துக் கொள்வார்கள். நம்மவர்களும், “ஆகா! பார்ப்பனர்களைப் பாரீர்… எவ்வளவு பெரிய அறிவாளிகள்”, என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள். இந்தக் கேடு கெட்ட நிலைகளுக்கு வேட்டு வைத்தவர் பெரியார்.

தன்னம்பிக்கை நூல்!

வயிற்று நோய்களுக்கான மருத்துவம் படித்த சோம.இளங்கோவன், தம் எழுத்திலும், பேச்சிலும் பிறர் வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பவர். 2023 ஆம் ஆண்டு அவர் எழுதிய, “அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள்”, எனும் தம் வரலாற்று நூல், பிறருக்கான தன்னம்பிக்கை நூல்! திராவிடர் இயக்கத்தின் பெருமைகள் எது என்று கேட்டால், 50 ஆண்டுகள் அமெரிக்காவில் கோலோச்சும் மருத்துவர் இளங்கோவன் போன்றவர்களே என்பதைக் கருப்புச் சட்டையைத் தூக்கிவிட்டுக் கூறலாம்!

பெரியாரிய மாணவர்

பெரியார் எனும் வீரியத்தின் விளைச்சல் இந்தச் சமூகத்தையே புரட்டிப் போட்டது. அதில் ஒரு வீச்சை இன்று நாம் பார்க்க இருக்கிறோம். ஆம்! இன்றைக்கு வெளிநாட்டுப் பயணங்கள் எளிதாகிப் போனாலும், 1971ஆம் ஆண்டே மருத்துவ உயர் படிப்பிற்காக அமெரிக்கா வரை சென்றவர்தான் மருத்துவர் சோம.இளங்கோவன். பெரியாரிய மாணவர்களில் ஒருவர்! திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோவில் எனும் குக்கிராமத்தில் பிறந்து, சிகாகோ சென்றவர். பன்னாட்டு மனிதநேய மாநாட்டை ஆஸ்திரேலியாவில் முடித்துவிட்டு, தமிழ்நாடு திரும்பிய அவரை, விடுதலை ஞாயிறு மலருக்காகத் திருச்சியில் சந்தித்தோம்.

கே: அய்யா வணக்கம்! பெரியார் பன்னாட்டு அமைப்பின் தோற்றம், வளர்ச்சிக் குறித்துக் கூறுங்கள்?

ப: 1994ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமெரிக்கா வந்திருந்தார். அதுசமயம் முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்த சந்திரஜித் (யாதவ்) அவர்களும் அங்கு இருந்தார். இவர்கள் இருவரையும் வைத்து, இந்திய தூதரக அதிகாரி ஒருவரையும் அழைத்து, நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்தோம்.

ஆசிரியர் அவர்களின் முடிவுப்படி பெரியார் பன்னாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது

இதற்கிடையில் சந்திரஜித் அவர்களைக் கலிபோர்னியாவில் இருக்கும் ஓர் அமைப்பு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது. அங்கு ஓய்வு பெற்ற அதிகாரிகள், பேராசிரியர்கள் எனச் சிலர் இருந்துள்ளனர். பிறகு தான் தெரிந்துள்ளது, அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை வளர்த்தெடுக்க அமெரிக்காவில் பணி செய்கிறார்கள் என்று! இது எப்போது? 1994 கால கட்டத்தில்!

அடுத்த நமது நிகழ்ச்சிக்கு வந்த சந்திரஜித் அவர்கள், உடனடியாக சமூகநீதியை வலியுறுத்தும்  ஓர் அமைப்பை உருவாக்குங்கள் என்று கூறினார். பிறகுதான் ஆசிரியர் அவர்கள் முடிவெடுத்து, “பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கா” (Periyar International USA) என்பதை 13.11.1994ஆம் ஆண்டு தொடங்கினார்கள். ஆசிரியர் அவர்கள் புரவலராகவும், நான் தலைவராகவும், செயலாளர் வீ.தமிழ்மணி, பொருளாளர் வீ.அருள் ஆகியோரும் செயல்படுகிறோம். நிர்வாகக் குழுவில் 18 பேர் இருக்கிறோம்.

கே: இந்த அமைப்பின் செயல்பாடுகள் என்ன? பிற நாடுகளில் இதன் கிளைகள் உள்ளதா?

ப: தொடக்கத்தில் பெரியார் பிறந்தநாள் விழாக்களை மட்டும் நடத்தி வந்தோம். பிறகு உலகம் முழுவதும் உள்ள தமிழ் மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தினோம். அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டங்களிலும் பங்கேற்றோம். அங்கு பெரியார் நூல்களை விற்பனை செய்வோம். ஆசிரியர் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், குடும்பக் கலந்துரையாடல்கள் என எங்கள் நிகழ்ச்சிகள் விரிவடைந்தன.

பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் நம் தோழர்களால் உருவாக்கப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரோனா காலத்தில் காணொலி நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினோம். அது இன்றுவரை தொடர்கிறது. இந்த அமைப்பின் கிளைகள் இதே பெயரில் இல்லாமல் அந்தந்த நாட்டுச் சூழலுக்கு ஏற்ப, சட்டதிட்டத்திற்கு உட்பட்டு பல்வேறு நாடுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கே: பெரியார் பன்னாட்டு அமைப்பிற்கு அமெரிக்க வாழ் தமிழர்களிடம் எவ்வளவு ஆதரவு இருக்கிறது?

ப: மிகச் சிறப்பாகவே இருக்கிறது! ஆசிரியர் அவர்களை அழைத்து சிகாகோ, மெக்சிகன், வாசிங்டன், பாஸ்டன் உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம். அந்தந்த மாநிலத்தின் பொறுப்பாளர்கள் இதைச் செய்வார்கள். கணிசமான அளவில் தமிழர்கள் குடும்பமாக வருகை தருவர். எங்களுக்கு நன்கொடை அளிப்பதில் பெரும் பகுதி ஆத்திகர்களே! அதேபோல திராவிட இயக்கச் சார்பு இல்லாத பிறரும் நன்கொடை வழங்குவார்கள். குறிப்பாக உலக அளவில் பன்னாட்டு மாநாடுகள் நடத்தும் போதும், “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” வழங்கும் நிகழ்ச்சிக்கும் அமெரிக்க வாழ் தமிழர்கள் பெரும் ஆதரவை நல்குவர்.

கே: பன்னாட்டு மாநாடுகள் குறித்துக் கூறுங்கள்? சமூக நீதிக்கான கி.வீரமணி விருது எந்தக் காரணத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டது?

ப: வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இதில் பல்துறை அறிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் எனப் பெரும் பங்கை ஆற்றி வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைக்கும் வாயிலாகவே பன்னாட்டு மாநாடுகளை நடத்தி வருகிறோம். இதுவரை ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்துள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு அந்தந்ந நாட்டின் பெருமக்களும், தமிழ்நாட்டில் இருந்து தோழர்களும் பங்கேற்பார்கள். ஆஸ்திரேலியா மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் காணொலி மூலம் பேசினார்கள்.

சமூகநீதிக்காகப் பாடுபடும் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு, “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” வழங்க முடிவு செய்தோம். குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் இலக்குவன் தமிழ் இதை முன்னெடுத்தார். இச்செய்தியை ஆசிரியரிடம் தெரிவித்த போது ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு அதன் அவசியம் குறித்துக் கூறி, நிர்ப்பந்தம் செய்து, இந்தப் பெயரைச் சூட்டினோம்.

முதல் விருதை, இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமர், இடஒதுக்கீட்டுப் பிரச்சினைக்காகவே பதவியைத் துறந்த வி.பி.சிங் அவர்களுக்கு, அமெரிக்காவில் வைத்துக் கொடுத்தோம். அதேபோல முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டு இதுவரை 23 சமூகநீதித் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு இலட்சம் பணமும் வழங்கப்படும். தமிழ்நாடு, பிற இந்திய மாநிலங்கள், அமெரிக்கா, பர்மா, சிங்கப்பூர், குவைத் எனப் பல இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் நானும் அனைத்திலும் பயணம் செய்துள்ளேன் என்பது என் வாழ்நாளின் பெருமை!

கே: தமிழ்நாட்டிற்கு அடிக்கடி  வருவீர்களா?

ப: அமெரிக்காவில் 35 ஆண்டுகள் மருத்துவப் பணியை நிறைவு செய்திருக்கிறேன். முன்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாடு வருவேன். இப்போது வாய்ப்புக் கிடைக்கும் போது, இடையிலும் வருகிறேன். அமெரிக்காவில் வசித்தாலும் நாளும் பொழுதும் பெரியார் கருத்துகள், பெரியார் திடல், ஆசிரியர் கி.வீரமணி போன்ற எண்ணங்கள் தான்! 1971 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்லும் போது பெரியாரிடம் பயணம் சொல்லிப் புறப்பட்டேன், இப்போது 2025 ஆசிரியரின் பின்னால் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு முடியுமோ, உழைத்துக் கொண்டே இருப்பேன்.  உற்சாகமாகப் பேசுகிறார் சோம.இளங்கோவன். பெயரில் மட்டும் இல்லை –  அவர் செயலிலும்!‌

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *