திருவாங்கூர் சமஸ்தானம் (11) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’

ஞாயிறு மலர்

திருவாங்கூர் நாட்டின் பெண்கள் பட்ட கொடுமைகளையும், சங்கடங்களையும் உலகில் எந்த நாட்டுப் பெண்களும் அனுபவித்ததில்லை. மானத்தைக் காக்க, மார்புகளை மறைக்க அவர்கள் நடத்திய போராட்டங்கள் படிப்பவர்கள் மனதை உறைய வைக்கக் கூடியவை. பல வகையான கொடுமைகளை, தண்டனை என்ற பெயரில் அவர்கள் சித்திரவதைகள் பட்டனர். மேல் ஜாதிப் பார்ப்பனர்களான நம்பூதிரிகளின் பெரும் கொடுமைகளை கீழ்ஜாதி, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு மட்டும் இழைக்கவில்லை. பார்ப்பன ஜாதிப் பெண்களுக்கும் அளவிற்கு மேல் கொடுமைகளை இழைத்துள்ளனர். “அந்தர் ஜனம்” என்ற பெயரில் பார்ப்பனப் பெண்கள் அழைக்கப்பட்டனர். “தரவாடு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட இருண்ட வீடுகளிலேயேஅடைபட்டு வாழ்க்கையின் எந்த சுகங்களையும் அடையாமல், ஏமாற்றமான ஓர் அடிமை வாழ்வு வாழ்ந்து முதுமையடைந்து, மரணமடைந்த அந்தர்ஜனங்கள் ஆயிரமாயிரம் பேர். பார்ப்பனக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கே இந்த நிலைமையெனில் கீழ்ஜாதிப் பெண்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

‘தோள் சீலை’ப் போராட்டம் பார்த்தோம். அடுத்த பெரிய இழிவு கீழ்ஜாதிப் பெண்கள் மேல் இழைக்கப்பட்ட அநாகரிகமான கொடுமை ‘முலை வரி’ என்ற பெண்களின் மார்புகளுக்கு விதிக்கப்பட்ட ‘வரி’க் கொடுமையாகும். பெண்களை கேவலப்படுத்தும், இழிவுபடுத்தப்பட்ட இந்த வரிக் கொடுமை உலகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு கேவலமாகும். பெண்களை இழிவுபடுத்தி, அசிங்கப்படுத்திய இந்த வரி விதப்பைப் பற்றி வரி விதிக்கப்பட்ட பெண்களின் கணவன்மார்களும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்டால் அவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். அதனால் அனைத்துக் கீழ் ஜாதிக்காரர்களும் இந்த வரி விதிப்பைப் பற்றி ஏதும் வாய் பேச முடியாத ‘ஊமை’களாகவே மாறிப் போயினர். (வீட்டை) குடிசையைச் சேர்ந்த ஆண்களே வாய்மூடிக் கிடக்கும் பொழுது பெண்களால் என்ன செய்ய இயலும். அவர்களும் வாய்மூடி மவுனிமாக அந்தக் கொடுமைகளை ஏற்றுக் கொண்டு அந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு அந்தக் கொடுமையை ஏற்றுக் கொண்டனர் என்பதே வரலாறு.

பெண்களின் மார்புகளின் அளவுக்குத் தகுந்தவாறு இந்த வரி விதிப்புகள் இருந்தன என்பது அதைவிடக் கொடுமை. இந்த வரியை வசூலிக்க நாயர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். ‘முலைகர்ணம்’ என்று அவர்களுக்குப் பெயர். வரியைக் கட்டாதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். பெண்களுக்கு இவ்வளவு இழிவு உண்டாக்கிய வரி விதிப்பை திருவாங்கூர் நாட்டில் யாருமே  கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ள வேண்டிய அரசரோ, அதிகாரிகளோ (வரி வசூலிக்கும் அதிகாரிகள் அனைவரும் நாயர்கள், அந்த இழிச் செயலைத் தூண்டியவர்கள் அரசனை விட பெரிய அதிகார மய்யமாகத் திகழ்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள்).  19ஆம் நூற்றாண்டில் நடந்த இந்தக் கொடுமையை மக்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள், நாடார்கள், ஈழவர்கள் போன்ற அனைத்து ஜாதியினரும் மேலாடை அணியத் தடை இருந்ததைப் போலவே உடம்பின் பாகங்களுக்கு வரி விதிக்கப்பட்டன. ஆண்கள், பெண்கள் என்ற பேதமின்றி இந்த வரி விதிப்பு இருந்தது. ஆண்கள் தலைப்பாகை கட்ட வேண்டுமானால் (பெரும்பாலும் மழை பெய்யும் நாடு) ‘தலைக்காரம்’ என்ற வரியைச் செலுத்த வேண்டும். 1924 ஆண்டு வரை முலைவரியும், தலைக்காரமும் திருவாங்கூர் நாட்டில் நடைமுறையில் இருந்தது. பெண்கள் வயதிற்கு வந்ததும், மார்பகங்கள் வளரத் தொடங்கும் பொழுதிலிருந்தே இந்த வரியை செலுத்த வேண்டும் என்பது அரசு ஆணை. திருவாங்கூர் நாட்டில் வரி வசூலிப்பவர்கள் (முலை கர்ணங்கள்) ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூப்பு எய்திய பெண்களிடம் இந்த வரியை வசூலிப்பார்கள். பெண்களின் மார்பகங்கள் வயதிற்கு ஏற்ப வளரும் இயல்பான நிலையில் இந்த வரி விதிப்பும், அந்த அளவுகளுக்கு ஏற்ப அதிகமாகிக் கொண்டே வரும். இந்த வரி விதிப்பாளர்கள் பெண்களின் மார்பகங்களை அளக்கிறோம் என்ற போர்வையில், பாலியல் வன்மத்தோடு, தவறாக நடப்பதும், பெண்கள் மிகுந்த எரிச்சலோடு பொறுத்துக் கொள்வதும், அந்த நாட்டில் வழமையாகிப் போனது. தாழ்ந்த ஜாதிப் பெண்கள் யாராவது இந்தக் கொடுமையை எதிர்த்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இந்த பயத்தால் பெண்கள் வாய் மூடி இந்த அவமானத்தை மவுனமாக ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொண்டனர்.

‘முலைகர்ணங்கள்’ – இந்த வரியை வசூக்க ஒவ்வொரு வீட்டிற்கும் வரும்போது, கீழ் ஜாதிக்காரர்கள் என்பதால் வீட்டின் உள்ளே செல்ல மாட்டார்கள். வீட்டு வாசலில் வரி விதிப்பிற்கு ஆளான பெண்கள் ஒரு வாழை இலையை வைத்து, அதில் விதிக்கப்பட்ட வரியை வைக்க வேண்டும். அதை வரி விதிப்பாளர் எடுத்துக் கொள்வதும் வழமையான பழக்கமாக அந்த நாட்டில் இருந்து வந்தது. மார்புகளை மறைப்பதும், மேல் ஜாதிக்காரர்களுக்குச் செய்யும் ‘அவமரியாதை’ என்று அந்த நாட்டின் ஜாதிச் சட்டங்கள் நிலை நாட்டியிருந்தன. இந்த நீண்டகால பாரம்பரியம், மேல்ஜாதியினருக்கு, கீழ் ஜாதிக்காரர்கள் கட்டாயம் காட்ட வேண்டிய மரியாதையாக நிலைநாட்டப்பட்டிருந்தது. ‘ஜாதி சதி’யை நிலைநாட்டும் இந்த வழக்கம் என்றே பார்க்கப்பட்டதாக பல ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். முலை கர்ணங்கள் பெரும்பாலும் நாயர்களே! ஆனால், ஆரம்ப காலங்களில் அவர்களும் திறந்த மார்பகங்களோடே அலைய வேண்டிய நிலையே இருந்தது. நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு முன்னால் அல்லது அவர்கள் கோயில்களுக்குள் நுழையும்பொழுதோ நாயர் பெண்கள் மார்பகங்கள் மறைக்க அனுமதிக்கப்படவில்லை. பார்ப்பனப் பெண்கள் கடவுளின் முன்பு மட்டும் மார்பகங்களை காட்டலாம் என்ற வழக்கம் இருந்தது. ‘ஆற்றிங்கால்’ இராணி ஒரு காலத்தில் கீழ்ஜாதிப் பெண் தனது மார்பகத்தை மூடியதற்காக (நம்பூதிரி பார்ப்பான் முன்) அவரது மார்பகத்தை வெட்டி எறிந்து, அதனால் அந்தப் பெண் மரணமடைந்ததாக ஒரு வரலாறு குறிப்பிருக்கிறது. (Ref: “Condition of women in pre modern Travancore” by கீர்த்தனா சுரேஷ்)

கீழ் ஜாதிப் பெண்கள் இந்த அளவிற்குக் கேவலமாகவும், மானக் கேடாகவும் நடத்தப்பட்டதற்கு நேர் எதிரிடையாக நம்பூதிரிப் பார்ப்பனப் பெண்கள் நடத்தப்பட்டனர். நம்பூதிரிப் பார்ப்பனப் பெண்கள் ‘அந்தர் ஜனம்’ என்றழைக்கப்பட்டனர். பொதுவாக மார்புகளை முழுமையாக மறைக்கும் வண்ணமே அவர்கள் உடை உடுத்த அனுமதிக்கப்பட்டனர். மேலாடையின்றி அனைத்து கீழ்ஜாதிப் பெண்களும், ஆண்கள் முன் அலைய விட்ட அதே ஜாதியம், நம்பூதிரிப் பார்ப்பன பெண்களை அந்நிய ஆடவர் யாருமே பார்க்க முடியாத அளவு சமூகக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

(Ref: ‘Nine Weird Taxes from around the world – Really absurd” 13.11.2019. The Economic Times) – “Breast tax and The Revolt of Lower caste women in the 19th century Travancore) (In British English 17.5.2019 – Retrieved)

இந்த அளவு கொடுமைகளுக்கு ஆளான ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு கிறிஸ்துவ மிஷனரிகள்தான் மானத்தைக் காப்பாற்ற உதவின. பெரும் ‘தோள் சீலை’ போராட்டங்களுக்குப் பின் 1859இல் மார்பகங்களை மறைக்கும் உரிமை பெற்றனர்.

இந்த உரிமையைப் பெற்று பெண்களின் கவுரவத்தைக் காத்த பெரும் பெருமைக்கு உரியவராக, தனியொரு பெண் போராளியாக ஒருவர் வந்தார். அவர் தியாகமே இந்தக் கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. இன்றைக்குக் கேரளப் பெண்கள் மானத்தோடும், மரியாதையோடும், கவுரவத்தோடும் வாழக் காரணமானவர் அந்தப் பெண் போராளி என்றால் மிகையாகாது.

திருவாங்கூர் நாட்டில் ‘சேர்த்தலை’ என்ற ஊரில் வாழ்ந்த ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ‘நாங்கேலி’. ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பம் அது. மேலாடை போடுவதற்குத் தடை விதிக்கப்பட்ட சமூகம். வழமைபோல் நாங்கேலிக்கும் ‘முலை வரி’ போட்டார் முலைக் கர்ணம். நாங்கேலியின் குடும்பம் வறுமையில் வாடிய ஒரு ஏழைக் குடும்பம். அந்த ஊரில் வசித்தவர்கள் பெரும்பான்மையோர் ஈழவ சமுதாயத்தினர். தொடர்ந்து வரி கட்டாமல் இருந்ததால், ஒரு நாள் முலைக் கர்ணம் பொதுவெளியில் நாங்கேலியை கேவலமாகப் பேசினார். கோபம் கொண்ட நாங்கேலி அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் வரி வசூலிப்பவரை வீட்டிற்கு வந்த வரி வாங்கிக் கொள்ள அழைத்தார். அவரும் நாங்கேலியோடு, அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். வரி வசூலிப்பவரை வெளியே நின்று கொண்டிருக்கச் சொல்லிவிட்டு, வீட்டினுள் சென்றார் அந்தப் பெண். வீட்டின் பின்புறமிருந்த வாழை மரத்தின் ஒரு இலையை அறுத்து எடுத்து வந்து வாசலில் விரித்தார். இலையை அறுக்கப் பயன்படுத்திய அரிவாளோடு வாசலுக்கு வந்து நின்ற நாங்கேலி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தன் கையிலிருந்த அரிவாளால் தன் இரண்டு மார்புகளையும் அறுத்து விரித்து வைக்கப்பட்டிருந்த வாழை இலையில் வைத்து விட்டார். (“மார்புகள் இருப்பதால்தானே வரி கேட்கிறாய்; அதை நீயே வைத்துக்கொள்; இனி வரி கேட்காதே!” என்று கூறியதாக ஒரு கதை ஈழவ சமூக மக்களிடையே சேர்த்தலை கிராமத்தில் இன்றும் நிலவி வருகிறது.) மார்புகள் அறுபட்டதால் இரத்தம் ஒழுக, ஒழுக அந்த இடத்திலேயே அந்தப் பெண் மரணமடைந்தார். நாங்கேலியின் கணவர் ‘சிறுகந்தன்’ தன் மனைவியின் மேல் உயிரையே வைத்திருந்தவர். நாங்கேலி சிதைக்கு நெருப்பு மூட்டிய சிறுகந்தன் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அந்த நெருப்பிலேயே பாய்ந்து உயிரை விட்டார். “எனது மானத்தைக் காப்பது எனது உரிமை என்று கூறி மார்புகளை அறுத்துக் கொண்டு உயிர் விட்ட இடம் “முலச்சிப் பறம்பு” என்ற பெயருடனே அழைக்கப்பட்டது.

(Ref: “Breast tax and the Revolt of Lower caste women in 19th century Travancore” in British English) – “The woman who cut off Breasts to protest a Tax” BBC News 28.7.2016 – “Revisiting Nanjeli, The Woman with no breasts” News click – 3.11.2019)

ஜாதியின் பெயரால் அடிமைப்படுத்ததும் நிலை மாற வேண்டும். மானம் என்பது அனைவருக்கும் உண்டு என்பதை மனித குலம் அறிய வேண்டும். சமூக நலனுக்காக தன் உயிரையே தியாகம் செய்யும் இத்தகைய இலட்சியப் போராளிகளை சமூகம் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கேலி சிதைக்கு வைக்கப்பட்ட நெருப்பு, பெரும் தீயாக மாறி திருவாங்கூர் நாட்டில் பெரும் கலவர நெருப்பாக மாறி அந்த நாட்டையே தகிக்கத் தொடங்கியது. நெய்யாற்றங்கரையில் துவங்கிய இந்தப் போராட்டம், நெய்யூர், ஆத்தூர், திற்பரப்பு, கண்ணணூர், அறுமனை, உடையார்விளை, புலிப்புனம் ஆகிய ஊர்களிலும் பெரும் நெருப்பாகப் பரவியது. பல ஆண்டுகள் போராட்டம் முலை வரியையும் ஒழித்தது. மார்புகளை மறைக்கும் மேலாடை அணியும் போராட்டத்தையும் வென்றெடுத்தது. கேரளப் பெண்களின் மானமும் காப்பாற்றப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *